அக்ஷர, ஸ்வர சுத்தம்

சப்த ப்ரம்மாத்மகமாக இருக்கப்பட்ட பரமாத்மாவின் பரிபூர்ண ஸ்வரூபமாக ஸம்ஸ்கிருதம் இருக்கிறது என்று சொன்னேன். அக்ஷர, ஸ்வர சுத்தம் மாறினால், ஒரு மந்திரத்தின் பலன் ஏற்படாது என்பதோடு மட்டுமின்றி விபரீத பலனே உண்டாகிவிடும் என்பதால், மந்திர அநுஸந்தானத்தில் பரம ஜாக்ரதையாக இருக்க வேண்டும். இதை வலியுறுத்தி சொல்கிற கதையொன்று வேதத்திலேயே தைத்திரீயத்தில் வருகிறது. (தைத்திரீய ஸம்ஹிதை – மிமி.4.12)

த்வஷ்டா என்கிறவன் ஒரு காரணத்துக்காக, ‘இந்திரன் மேல் பழி தீர்த்துக் கொள்ளவேண்டும், அவனைக் கொல்லக் கூடிய பிள்ளையைப் பெற வேண்டும்’ என்று நினைத்து, ஒரு மந்திரம் சொல்லி ஹோமம் பண்ணுகிறான். “இந்த்ர சத்ருர் வர்தஸ்வ” என்று அந்த மந்திரத்தைச் சொல்லும் போது ‘இந்த்ர’ என்பதை ஏற்றல் இறக்கல் இல்லாமல் ஸமமாகவும், ‘சத்ரு’ என்பதில் ‘த்ரு’வைத் தூக்கியும் (உதாத்தமாகவும்), ‘வர்தஸ்வ ‘என்பதில் ‘ர்த’ வையும் இப்படியே தூக்கியும் சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சொன்னால் ‘த்வஷ்டாவின் பிள்ளை, இந்திரனைக் கொல்லுபவனாக வளரட்டும்’ என்ற அர்த்தம் ஏற்படும். ஸ்வர சக்தியாலேயே அவன் அப்படி வளர்ந்து, இந்திரனை வதம் பண்ணியிருப்பான். ஆனால் த்வஷ்டா உச்சரிப்பிலே தப்புப் பண்ணிவிட்டான். அதாவது, ‘இந்த்ர’ என்பதில் ‘த்ர’ வைத் தூக்கியும் ‘சத்ரு’ என்பதை ஸமமாகவும், ‘வர்தஸ்வ’ என்பதில் ‘ர்த’வை ஏற்றுவதற்குப் பதில் இறக்கி அநுதாத்தமாகவும் சொல்லிவிட்டான். இதனால் ‘இந்திரன் இவனை கொல்பவனாக வளரட்டும்’ என்று அர்த்தம் தலைகீழாக மாறிவிட்டது. வார்த்தைகளும் எழுத்துக்களும் மாறாவிட்டாலும் கூட, ஸ்வரங்களில் ஏற்பட்ட பிழையாலேயே த்வஷ்டா வேண்டியதற்கு நேர்மாறான பலன் உண்டாகிவிட்டது. இவனுடைய பிள்ளையை இந்திரன் வதம் பண்ணிவிட்டான். த்வஷ்டாவின் பிள்ளையான விருத்திரன் இந்திரனால் கொல்லப் படுவதற்கு அவன் தகப்பனாரே இப்படிக் காரண பூதனாகிவிட்டான்.

இதைச் சொல்லி, மந்திர உச்சாரணத்தில் நம்மை ஜாக்ரதைப் படுத்தும் ச்லோகம் ஒன்று உண்டு
மந்த்ரோ ஹீன: ஸ்வரதோ வர்ணதோ வா
மித்யாபரயுக்தோ ந தமர்த்தமாஹ|
ஸ வாக் வஜ்ரோ யஜமானம் ஹினஸ்தி
யதா இந்த்ரசத்ரு: ஸ்வரதோ (அ)பராதாத்||

இந்திரனுடைய வஜ்ராயுதத்துக்குப் பதில், த்வஷ்டா தப்பாகச் சொன்ன வாக்கே வஜ்ரமாகிக் கொன்றுவிட்டதாம்!

சில சிறிய வித்யாஸங்கள்

வேதத்தின் அக்ஷர சுத்தத்தைப் பற்றி இத்தனை சொன்னேன். நான் சொன்னதற்கு அநுஸரணையாகவே ஸேது ஹிமாசலம் (ராமேச்வரத்திலிருந்து இமயமலை வரை) அத்தனை இடங்களிலும், ஒருத்தருக் கொருத்தர் தொடர்பே யில்லாமல், புஸ்தகமுமில்லாமல், வாய்மொழியாகவே வேதத்தைப் பாடம் பண்ணி வந்துள்ள போதிலும் எல்லாப் பாடங்களும் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது சதவிகிதம் அக்ஷர வித்யாஸ மில்லாமல் ஒன்றாகவே இருக்கிறது. அப்படியானால், இந்த பாக்கி ஒரு சதவிகத்தில் வித்யாஸம் இருக்கிறதா என்றால் இருக்கத் தான் செய்கிறது. ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள ஒவ்வொரு சாகைக்கும் இடையில் இம்மாதிரி துளித்துளி அக்ஷர வித்யாஸம் இருக்கத்தான் செய்கிறது .இப்படி இருக்கலாமா? ஒரு அக்ஷரம் தப்பினால் கூட விபரீத பலனாகும் என்று சொல்லிவிட்டு, ஒரே மந்திரமானது வெவ்வேறே சாகைகளில் வெவ்வேறே பிரதேசங்களில் வருமபோது அதில் ஒரு பெர்ஸென்ட் அக்ஷர வித்யாஸம் ஏற்படுகிறது என்றால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே ! மூலரரூபம் ஒன்று தான் என்றால், அதில் ஒரு பெர்ஸன்ட் வித்யாஸத்தோடு இன்னொன்று வந்தால் கூட, அது பலன் தராது தானே? அல்லது விபரீத பலன் தானே தரும்?

இப்படிக் கேள்வி கேட்டால் பதில் இருக்கிறது. ஒரு மருந்துக்குப் பதில் இன்னொன்றை மாற்றிச் சாப்பிட்டால் விபரீதம் என்ற மாதிரி, அக்ஷரத்தை மாற்றினால் தப்புத் தான். ஆனால் மருந்தை மாற்றக் கூடாது என்பது வியாதியஸ்தனுக்குச் சொன்னது தான். அவனாக மருந்தை மாற்றிவிடக் கூடாது. ஆனால் டாக்டர் மாற்றலாம் அல்லவா? ஒரே வியாதிக்குப் பல மருந்துகள் இருக்கின்றன. அப்போது இதைச் சாப்பிடலாம், அல்லது இன்னொன்றைச் சாப்பிடலாம் என்ற டாக்டரே ‘பிரிஸ்க்ரைப்’ பண்ணினால் அதில் தப்பில்¬ தானே? ஒரே வியாதி இரண்டு பேருக்கு வந்திருக்கிறபோது, அவர்களின் தேகவாகிலே இருக்கிற வித்யாஸத்தை அநுசரித்து, ஒரே மருந்திலேயே கொஞ்சம் கொஞ்சம் சரக்குகளை மாற்றி, டாக்டர் கொடுக்கலாம் அல்லவா?

இம் மாதிரி தான், ஒன்றுக் கொன்று விபரீதமான பலன் உண்டாக்குகிற அக்ஷரங்களாக இல்லாமல், ஒரே மாதிரியான பலனை உண்டாக்குகிற அக்ஷரங்களை ரிஷிகள் பல சாகைகளுக் கிடையில் மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த சாகையை அத்யயனம் செய்ய அதிகாரிகளாக யார் பிறப்பார்களோ அவர்களுக்கு இந்த அக்ஷர மாற்றங்கள் க்ஷேமத்தை உண்டு பண்ணும் என்பதால் இப்படிச் செய்திருக்கிறார்கள். இவற்றைப் பற்றிய விதிகள் பிராதி சாக்யத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றன. அக்ஷரங்களுக்குள்ளே மாறுபாடு என்றால் பெரிய வித்யாஸம் இல்லை. அக்ஷரங்கள் ஸம்பந்தா ஸம்பந்தமில்லாமல் மாறிவிடாது. பெரும்பாலும் ஒரே மாதிரியாக ஒலிக்கிற சப்தங்களே ஒன்றக்குப் பதில் இன்னொன்று வரும். அவ்வளவு தான். ரொம்பவும் கிட்டக் கிட்ட இருக்கிற அக்ஷரங்களில் ஒன்றுக்குப் பதில் இன்னொன்று வரும்.

Leave a comment