ராமருக்கு மூன்று தோஷங்கள்
ராமேச்வரத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை
ராவணனைக் கொன்றதால் ராமருக்கு மூன்று தோஷங்கள் ஏற்பட்டன. முதலாவது, ராவணன் விச்ரவஸ் என்ற மஹரிஷியின் பிள்ளையானதால் பிராம்மணன் என்பது. அவனை ஸம்ஹாரம் செய்ததால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டாயிற்று. சிவலிங்கப் பிரதிஷ்டை பண்ணி இந்த தோஷத்தை அவர் போக்கிக் கொண்ட இடந்தான் ராமேச்வரம். பிரத்யக்ஷமாகத் தெரிகற மாதிரி இந்த லோகத்திலேயே மிகப்பெரிய பிரகாரங்களோடு ராமேச்வரத்தில் கோவில் இருக்கிறது. சரித்திரக்காரர்களே ஒப்புக் கொள்கிற படி ஆயிரக்கணக்கான வருஷங்களாக அங்கே ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காகப் பிரதிஷ்டை செய்த லிங்கம் என்று ராமநாத ஸ்வாமியைச் சொல்லி தேசம் பூராவும் வழிபட்டு வந்திருக்கிறது. இதனால் ராவணன் பிராம்மணன் என்ற நம்பிக்கைக்கு மாறாகத் தமிழ் நாட்டில் பூர்விகர்கள் நினைத்ததே யில்லை என்று தெரிகிறது.
வேதாரண்யத்தில் ராமலிங்கப் பிரதிஷ்டை
ராவணன் பிராம்மணன் என்பது மட்டுமில்லை. அவன் மஹாவீரன். லோகங்களெல்லாம் கிடுகிடுவென்று நடுங்கும் படியாகப் பண்ணினவன். கார்த்தவீர்யார்ஜுனனையும் வாலியையும் தவிரத் தான் சண்டை போட்ட அத்தனை பேரையும் ஜயித்தவன். இப்படிப்பட்டவனைக் கொன்றதால் வீரஹத்தி தோஷமும் ஸ்ரீராமனுக்கு உண்டாயிற்று. இந்த தோஷத்துக்குப் பிராயசித்தமாகத் தான் ராமர் வேதாரண்யத்தில் ராமலிங்கப் பிரதிஷ்டை செய்தார்.
பட்டீச்வரத்தில் ராமலிங்கப் பிரதிஷ்டை
பிராம்மணன், வீரன் என்பது தவிர ராவணனுக்கென்று வேறு பெருமைகளும் உண்டு. அவன் நல்ல சிவபக்தன். வீணை வாசித்துப் பாடுவதில் நிபுணன். இம்மாதிரி நல்ல அம்சங்களை ‘சாயை’ என்பார்கள். ‘சாயை’ ஒளி, நிழல் என்று இரண்டு அர்த்தமும் உண்டு. ‘மரகத சாயே’ ªன்று மீனாக்ஷியைச் சொல்கிற போது ‘மரகதம் போன்ற ஒளி உடையவளே’ என்று அர்த்தம். ஒளி என்பது பெருமை வாய்ந்த குணங்களையெல்லாம் குறிப்பிடும். சாயை (பெருமை) உடைய ராவணனை வதம் செய்ததால் ராமருக்கு சாயாஹத்தி என்ற மூன்றாவது தோஷம் உண்டாயிற்று. இது தீருவதற்காகத்தான் அவர் பட்டீச்வரத்தில் ராமலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜை பண்ணினார்.
சாஸ்திரப்படி பார்த்தால் ராவணனை ஸம்ஹரித்த மநுஷ்யருக்கு பிரம்மஹத்தி, வீரஹத்தி, சாயாஹத்தி என்ற மூன்று தோஷங்கள் ஏற்பட்டுத்தான் இருக்கவேண்டும். பதித பாவனான ராமசந்திர மூர்த்திக்கு வாஸ்தவத்தில் தோஷமே ஏற்பட முடியாதுதான். எவன் பெயரை ஸ்மரித்தாலே ஸமஸ்த மஹாபாபங்களும் ஒடிப் போகுமோ அப்படிப் பட்ட தாரக நாமனான ராமன் தனக்கே பிராயச்சித்தம் பண்ணிக் கொள்ள வேண்டியதே இல்லை தான். ஆனாலும் அவர் இந்த பூலோகத்தில் ‘ஐடியல்’ மநுஷ்யராக வாழ்ந்து காட்டவேண்டும் என்று தான் நரவேஷம் போட்டுக் கொண்டு வந்திருந்தார். ஒவ்வொரு சின்ன காரியத்துக்குங் கூட சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று பார்த்துப் பார்த்தே அந்தப் பிரகாரம் பண்ணினார். சாஸ்திர தர்மங்களைத் துளிக்கூட வழு இல்லாமல் பண்ணிக் காட்டுவதில் ராமரை மிஞ்சி இன்னொருத்தர் கிடையாது. ராமாயணத்தில் எங்கே பார்த்தாலும் இந்த குணாதிசயத்தைப் பார்க்கிறோம். தம்மை ஸாதாரண மநுஷ்யராகவே வைத்துக் கொண்டு, மநுஷ்யர்களுக்கு சாஸ்திரத்தில் என்னென்ன தர்மங்கள், விதிகள், பிராயச்சித்தங்கள் சொல்லியிருக்கின்றனவோ அவற்றையெல்லாம் விடாமல் செய்தார். ஆகவே ஒவ்வொரு அல்ப காரியத்துக்குங் கூட சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று பார்த்து பார்த்தே அந்தப் பிரகாரம் பண்ணினார். சாஸ்திர தர்மங்களைத் துளிகூட வழுவில்லாமல் பண்ணிக் காட்டுவதில் ராமரை மிஞ்சி இன்னொருத்தர் கிடையாது.
ராமாயணத்தில் எங்கே பார்த்தாலும் இந்த குணாதிசயத்தைப் பார்க்கிறோம். தம்மை ஸாதாரண மநுஷ்யராகவே வைத்துக் கொண்டு, மநுஷ்யர்களுக்கு சாஸ்திரத்தில் என்னென்ன தர்மங்கள், விதிகள், பிராயச்சித்தங்கள் சொல்லியிருக்கின்றனவோ அவற்றையெல்லாம் விடாமல் செய்தார். ஆகவே ஒவ்வொரு அல்ப காரியத்துக்குங் கூட சாஸ்திரத்தைப் பார்த்து அதன்படி பண்ணின ராமன் இந்த மூன்று பெரிய தோஷங்களுக்கு மட்டும் பிராயச்சித்தம் பண்ணிக் கொள்ளாமல் இருந்திருப்பாரா? அப்படிச் சொல்வது கொஞ்சங்கூட பொருத்தமில்லை. வால்மீகி ராமாயணத்தில் இது என்னவோ விட்டுப் போய்விட்டது என்றுதான் ஆகிறது. அதிலே விட்டுப் போன குறையைத்தான் ராமேச்வரம், வேதாரண்யம், பட்டீச்வரம் ஆகிய ஊர்களுக்கான ஸ்தல புராணங்கள் பூர்த்தி செய்கின்றன. இது ராமாயணத்தில் இல்லை; அதனால் ஏதோ அத்தைப் பாட்டிக் கதை என்று நினைப்பது தப்பு.
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் குணத்தை நன்றாக ஆழ்ந்து அநுபவித்துப் பார்த்தால் அவர் இந்த மூன்று பிராயச்சித்தங்களைப் பண்ணிக் கொண்டுத்தான் இருப்பார்; அப்படிப் பண்ணினால் தான் அவர் ராமர். ஆகையால் ஏதோ காரணத்தால் ராமாயணத்தில் விட்டுப்போன இந்த விஷயத்தைச் சொல்கிற ஸ்தல புராணங்கள்தான் அவருடைய மனோபாவத்துக்கும், சரித்திரத்துக்கும் (conduct-கும்) பூர்த்தியைத் தருகின்றன. என்ற தெளிவு உண்டாகிறது. லோகத்தையெல்லாம் ஹிம்ஸித்து வந்தவனும், ஜகன்மாதாவான ஸீதையை கெட்ட எண்ணத்தோடு மாறு வேஷத்தில் வந்து நீசமாகத் திருடிக்கொண்டு போனவனுமான ஒருத்தனை ஸம்ஹாரம் பண்ணி, அதனால் ஸமஸ்த ஜீவராசிகளும் ஸந்தோஷம் அடைந்து அவரைக்கொண்டாடும் சமயத்தில், அப்படிப்பட்ட சத்ருவிடத்தில் இருந்த மூன்று பெருமைகளை நினைத்து அவனைக் கொன்றதற்காக தன் மீதே மூன்று தோஷங்களை சுமத்திக் கொண்டு பிராயசித்தம் பண்ணிக் கொண்டதாக ஸ்ரீராமனைச் சொல்வது தான் அவருடைய உத்தம ஸ்வபாவத்தையே ஒரு தூக்குத் தூக்கிப் பிரகாசிக்கப் பண்ணுவதாக இருக்கிறது.
லிங்கப் பிரதிஷ்டை பண்ணினது ஹரி-ஹர அபேதத்துக்கு ஒத்தாசை செய்கிறது. இந்த மூன்று ஸ்தல புராணங்களுக்குள் ஒன்றுக் கொன்று முரண்பாடு (contradiction), ஒன்றில் சொன்னதையே இன்னொன்றில் திருப்பிச் சொல்வது (duplicate பண்ணுவது) என்பதெல்லாம் இல்லை. ராமேச்வர புராணத்தில் பிரம்மஹத்தி நீங்கினதை மட்டுமே சொல்லியிருக்கிறது. மற்ற இரண்டு தோஷங்கள் அங்கே போனதாகச் சொல்லவில்லை. அங்கேயிருந்து அப்படியே ஸமுத்திரக் கரை ஒரமாகவே வடக்காகப் போயிருப்பார் போலேயிருக்கிறது. அங்கே வேதாரண்யத்தில் வீரஹத்தி போக லிங்கப் ப்ரதிஷ்டை செய்திருக்கிறார். வேதாரண்ய ஸ்தல புராணத்திலும் வீரஹத்தி மட்டும் நிவருத்தியானதைத்தான் சொல்லியிருக்கிறது. இங்கேயும் பிரம்மஹத்தி போனதாகச் சொல்லியிருந்தால் தப்பு என்கலாம். அப்படியில்லை. அப்புறம் உள்நாட்டுப் பக்கமாக (interior-க்கு)ப்போய் பட்டீச்வரத்தில் மூன்றாவது ராமலிங்கத்தைப் ப்ரதிஷ்டை செய்து சாயாஹத்தியை நிவ்ருத்தி செய்து கொண்டிருக்க வேண்டும். பட்டீச்வரம் ஸ்தல புராணத்திலும் இந்த ஒரு தோஷத்தைத் தான் சொல்லியிருக்கிறது. அதாவது இந்த மூன்று க்ஷேத்ரங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு தோஷத்தையே -அதுவும் மற்றதில் விட்டுப்போன ஒன்றையே- சொல்லி அதற்கு concrete evidence-ஆக (கண்ணுக்குத் தெரியும் சாட்சியாக) ஒவ்வொரு கோவிலிலும் ‘ராமலிங்கம்’ என்று பேருள்ள ஒரு லிங்கத்தைக் காட்டியிருக்கிறது. ஒரே நிஜமான கதையின் இழை தான் மூன்று ஸ்தல புராணங்கள் வழியாகவும் போய்ப் பூர்த்தியாகிறது. இந்த மூன்றும் ஒன்றுக் கொன்று சுமார் நூறு, நூற்றைம்பது மைல் தள்ளியுள்ள ஊர்கள். ரயிலும் ப்ளேனும் இல்லாத காலத்தில் அது ஆயிரம், ஆயிரத்தைந்நூறு மைலுக்கு ஸமானம். ஆகவே இவ்வளவு தள்ளியுள்ள ஊர்களுக்கிடையே ஒரே கதையின் விவரங்கள் பொருத்தமாக அமைந்திருக்கின்றன என்றால் ஸ்தல புராணங்கள் நிஜம்தான் என்று தானே ஏற்படுகிறது?