பிறந்த குலாசாரமே உய்நெறி

எந்த இடத்தில் எந்த மதத்தில், கிளை மதத்தில், ஒருவன் பிறந்திருந்தாலும் அந்த இடத்திலிருந்த அந்த மதத்து, கிளை மதத்து, பூர்விகப் பெரியவர்கள் எப்படிப்பட்ட வாழ் முறையை, வாழ்க்கை நெறியை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்களோ, அதுவே தனக்கான ஆசாரம் எனக் கொண்டு பின்பற்ற வேண்டும். இப்படி அவனவனும் தன்னுடைய மூதாதைகள் போன வழியில் தான் போக வேண்டும்; இல்லாவிட்டால் அவன் பதிதனாகி விடுகிறான் என்று சொல்லியிருக்கிறது.

சிகாம் ஸூத்ரம் ச புண்ட்ரம் ச ஸமயாசாரமேவ ச
பூர்வை-ராசரித குர்யாத் அந்யதாபதிதோ பவேத்

சிகாம் :- சிகை எப்படியிருக்க வேண்டும்? துருக்கர்கள் மொட்டை அடித்துக் கொள்கிறார்கள். ஸிக்கியர்கள் முடி, தாடி வளர்க்கிறார்கள். கிறிஸ்தவர்கள் க்ராப் பண்ணிக் கொள்கிறார்கள். ஹிந்துக்கள் குடுமி வைத்துக்கொள்வது சாஸ்திரத்தில் மந்த்ர பூர்வமாகச் சொல்லியுள்ள ஒரு சடங்கு. இதிலும் பல வித்யாஸம். சோழியன், நம்பூதிரி, சிதம்பரம் தீக்ஷிதர்கள், மற்றவர்கள் ஆகியோருக்குள் குடுமியை முடிந்து கொள்வதில் வித்யாஸங்கள் இருக்கின்றன. சிலர் ஊர்த்வ சிகை என்பதாக உச்சியில் முடிந்து கொள்கிறார்கள். சிலர் பூர்வ சிகை என்று தலைக்கு முன் பக்கமாக முடிந்து கொள்கிறார்கள். ”இவற்றில் நீ பிறந்த மரபிலே எப்படி சிகை வைத்துக் கொண்டார்களோ அப்படியே நீயும் பண்ணு” என்று சாஸ்திரம் சொல்கிறது.

சிகைக்கு அப்புறம் ‘ஸூத்ரம்’ என்றது பூணூலை அல்ல. ஏனென்றால் பூணூல் விஷயத்தில் அத்தனை குலசாரங்களுக்கும் ஒரே விதிதான். என்னென்ன அநுஷ்டானம் செய்யவேண்டுமென்று விரிவாக நீஷீபீவீயீஹ் செய்து ஆச்வலாயன ஸூத்ரம், ஆபஸ்தம்ப ஸூத்ரம், போதாயன ஸூத்ரம் என்றெல்லாந்தான் வெவ்வேறு பல சாஸ்திரங்கள் இருக்கின்றன. இவற்றில் நாம் பிறந்த குடும்பதாருக்கு எது ஸூத்ரமோ அதில் சொல்லியிருப்பவற்றையே எடுத்துக் கொள்ளவேண்டும்.

‘புண்ட்ரம்’ என்று சொன்னது நெற்றிக்கு இட்டுக் கொள்வதை. விபூதி, கோபி சந்தனம், நாமம், கரிப்பொட்டு, இவற்றிலும் வெவ்வேறு வகைகள் என்று இருப்பதில் குலாசாரப்படி இட்டுக்கொள்ள வேண்டும்.

‘ஸமயாசாரம்’ என்பது மதாநுஷ்டானம். ஹிந்து மதத்துக்குள் உள்ள அநேக ஸம்பிரதாயங்களுக்குள் நீ பிறந்திருக்கிற குடும்பம் எதைச் சேர்ந்ததோ அதற்கான ஆசாரத்தையே பின்பற்று. இந்த தேசத்தில், இந்த ஊரில், இந்தக் குடும்பத்தில் நீ பிறந்திருக்கிறாயென்றால் இது தற்செயலாக (accidental-ஆக) நேர்ந்ததில்லை; உன் பூர்வ கர்மாவைப் பார்த்து, அதை அநுபவிக்கும் போதே நீ தர்ம கர்மாவைப் பார்த்து, அதை அநுபவிக்கும் போதே நீ தர்ம ரீதியாகப் போனால் எதனால் உனக்கு ஆத்மாபிவிருத்தி ஏற்பட முடியும் என்று திட்டம் பண்ணி ஈஸ்வரனே தான் உன்னை இந்தக் குடும்பத்தில் பிறக்க வைத்திருக்கிறார். அதனால் அதன் ஸமயாசாரத்தையே நீ அநுஷ்டி.

”பூர்வை : ஆசரித குர்யாத் ”என்றால் ”உன்னுடைய பூர்விகர்கள் எப்படிப் பண்ணினார்களோ, அப்படியே நீயும் பண்ணு” என்று அர்த்தம். அதாவது முன்னே சொன்ன சிகை, ஸூத்ரம், புண்ட்ரம், ஸமயாசாரம் எல்லாவற்றிலும் உன் மூதாதைகள் கடைப்பிடித்த ஆசாரங்களையே நீயும் கைக்கொள்ளு என்று அர்த்தம்.

அந்யதா பதிதோ பவேத் இப்படிச் செய்யாமல், அதாவது தன் குல முன்னோர் வழக்கைப் பின்பற்றாமல், வேறு மார்க்கத்தில் போனால் வேறு வித வாழ்க்கை முறைகளையும் வெளி அடையாளங்களையும் மேற்கொண்டால், அதாவது தன் மதத்திலிருந்தும் கிளை ஸம்பிரதாயத்திலுருந்தும் வேறொன்றுக்குப் போனால் அப்படிச் செய்கிறவன் பதிதன் ஆகிவிடுவான் என்று சொல்லியிருக்கிறது. பதனம் என்றால் விழுவது. பதிதன் என்றால் ‘விழுந்தவன்’ என்று அர்த்தம். அதாவது ஸன்மார்க்கத்தில் நடந்து போகாமல், அதோகதியில் விழுந்து விட்டவன் என்று அர்த்தம்.

பாதிவ்ரத்யத்தில் (கற்பு நெறியில்) தப்பாகப் போனவர்களைப் பதிதை என்பார்கள். அதைத்தான் சறுக்கிக்கொண்டு விழுந்தவள் என்ற அர்த்தத்தில் ‘சறுக்கி’, ‘சிறுக்கி’ என்பது. ”வழுக்கி விழுந்தவர்கள்” என்று நவீன எழுத்தாளர்கள் சொல்கிறார்கள். இவள் புருஷனுக்கு த்ரஹோம் செய்கிற மாதிரி ஈஸ்வரனுக்கு, பரம புருஷனுக்கு த்ரோஹம் செய்து கீழ்லோகத்துக்கும், இப்போதைவிட ரொம்ப ஹீன ஜன்மாவுக்கும் விழுந்து விடுகிறவன் தான் பதிதன். பூர்விகர்களின் ஆசாரப்படி செய்யாதவன் இப்படிப்பட்ட பதிதன் ஆகிவிடுகிறான். லௌகிகத்திலும் பல தினுஸில் கஷ்டப்பட்டுக் கொண்டு, ஆத்மாவையும் உசத்திக் கொள்ள முடியாத கஷ்ட ஜீவனமாகவே அவனுடைய வாழ்க்கை இருக்கும்.

பகவான் நம்மை ஏதோ ஒரு இடத்தில் ஒரு ஸமூஹ தர்மத்தில், குலாசாரத்தில் பிறப்பித்திருக்கிறான். என்ன அர்த்தம்? புருஷனை அநுஸரித்துப் பத்தினி கடைத்தேற வேண்டுமென்பது போல், ஜீவன் இவ்வாறு தனக்குப் பிறப்பால் எந்த சாஸ்திரமும் ஸம்பிரதாயமும் ஏற்பட்டிருக்கிறதோ அதை அநுஸரித்து ச்ரேயஸ் அடைய வேண்டுமென்று தான் அர்த்தம். ”மாட்டேன்; இந்த ஆசாரப்படி செய்ய முடியாது” என்றால் அது பதியைத் திரஸ்காரம் பண்ணுவது போன்ற பெரிய தோஷந்தான். ”இந்த ஸமயாசாரத்தை விட்டு இன்னொன்றுக்குப் போவேன்; வேறே மதத்தில் சேருவேன்” என்றால் இன்னம் தப்பு. அது பதியை விட்டு விட்டுப் பரபுருஷனிடம் போகிறது போல, அதனால்தான் ”பதிதோ பவேத்’ ‘என்றது. இப்படி ஆகாமல் தப்புவது தான் நமக்கு முக்கியம்.

சீர்திருத்தவாதி ஏதோ இந்த லோகத்துக்கு, இப்போது நடத்துகிற வாழ்க்கை உயர்வுக்கானவற்றை மட்டும் பார்த்து மதுரமாகச் சொல்கிறாரென்பதால் அதன்படிச் செய்து நரக விஷத்தில் போய் விழக்கூடாது. ஆசாரம் ஒருவனை விழாமல் காப்பது மட்டுமில்லை; அவனை இப்போதைய ஸ்திதியிலிருந்து இன்னமும் தூக்கிவிட்டு ஈஸ்வர ஸந்நிதானத்தில் கொண்டு நிறுத்திவிடும்.
தலைமுறை தலைமுறையாக வந்த அநுபவ weight ஆசாரத்துக்குத் தான் இருக்கிறது. Tradition (மரபு) என்று ஒன்றை மதித்து அதன்படிச் செய்கிற போது தான் நம் மனஸை, இந்திரியங்களை, போக்குகளை, கார்யங்களை ஒரு நெறியில் சீராகக் கட்டுப்டுத்திக்கொண்டு வருகிற discipline-ம் ஏற்படுகிறது. இதுதான் மோக்ஷ த்வாரத்துக்கு முதல் வாசலான ‘சித்த சுத்தி’ என்பதைத் திறந்து விடுவது. நன்றாக ஸ்திரப்பட்டு விட்ட established tradition-ஐ (நன்கு நிலைப்பட்ட மரபை) மதிக்காமல், அதை நம்பாமல், அதில் ஏன் அது இப்படி, இது இப்படி என்று கேள்வி கேட்டுக் கொண்டேயிருப்ப தோடு முடிந்து போகிறதே தவிர, பதிலாக, இப்போது இருக்கிற ஆசாரங்களை எடுத்து விட்டதற்குப் பதிலாக வெயிட் உள்ள டிஸிப்ளின் எதையும் நிலை நாட்ட முடியவில்லை.

காந்தி மாதிரி தன்னளவில் சுத்தராக இருந்துகொண்டு, ஈஸ்வர பக்தியும் பண்ணிக் கொண்டு, பழைய இந்திய வழக்கப்படியே எளிய வாழ்க்கை, தேஹ உழைப்பு இவற்றை மேற்கொண்டு இருந்தவர்களே பழைய ஆசாரங்களில் சிலவற்றை எடுத்துவிட்டு, பழசில் மீதி சில ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும், புதிதாகத் தாங்களே ஆச்ரமங்களில் ஏற்பாடு பண்ணி, கண் குத்திப் பாம்பாக நேராகத் தாங்களே நிர்வாஹத்தைக் கவனித்து வரும் போது கூட, ஒழுங்குத் தப்பான கார்யங்கள் நடந்து. அதற்காகத் தாங்களே பஹிரங்க கண்டனம் பண்ணிப் பட்டினி கிடக்கும் படியாக ஆகிறது.

இதனால்தான் பகவான் (கீதையில்) பூர்வாசாரத்தில் ஏதேனும் ஒன்றிரண்டு ஸரியில்லாமலிருந்தால் கூட அதில் கைவைத்து, அறியாமை நிலையிலே இருக்கிற பெரும்பாலான ஜனங்களுக்குப் புத்திக் கலகத்தை உண்டு பண்ணவே கூடாது என்று அடித்துச் சொல்லியிருக்கிறார். ‘சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடி தான் ஸமூஹத் தலைவர்களாக இருக்கப்பட்ட அறிவாளிகள் எல்லாக் காரியமும் செய்யவேண்டும். தங்களுக்கு அந்தக் கார்யங்கள் தேவையில்லை, அதற்கு மேல் ஸ்திதிக்குப் போயாச்சு என்றால் கூட, இப்படித் தாங்கள் சாஸ்திரத்தை மீறிப் பண்ணினால் மற்றவர்களும் கட்டுப்பாட்டை இழந்து புத்தி மாறாட்டத்தில் குழறுபடியாகச் செய்ய ஆரம்பிப்பார்களே என்பதால் தாங்களும் வழிகாட்டிகளாக சாஸ்திர கர்மாக்களுக்குக் கட்டுப்பட்டுத் தான் நடக்க வேண்டும் ‘ என்கிறார்.

ந புத்திபேதம் ஜனயேத் அஜ்ஞாநாம் கர்மஸங்கிநாம்
ஜோஷயேத் ஸர்வகர்மானி வித்வான் யுக்தஸ் ஸமாதரன்
”கீதை கீதை”என்று இப்போது எல்லோரும் சொன்னாலும் இது மாதிரியான ஸ்லோகங்களை முழுங்கி விடுகிறார்கள்! இப்படியேதான் இன்னோரிடத்திலும், ”எது செய்யலாம் எது செய்யகூடாது என்று வியவஸ்தை பண்ணுவதற்கு உனக்கு சொந்தமாக அதிகாரம் கிடையாது. சாஸ்திரத்தைப் பார். அதுதான் ‘அதாரிடி’. அதில் செய் என்று சொன்னதைச் செய்; செய்யாதே என்பதைச் செய்யாதே” என்று ஒரு அத்யாயத்தில் முடிந்த முடிவாகச் சொல்லியிருக்கிறார்.

தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தேகார்யா கார்ய வ்யவஸ்திதௌ
ரிஃபார்ம் செய்பவர்களுக்கு கீதை வேண்டியிருக்கிறது. ஆனால் இம்மாதிரி விஷயங்களை அப்படியே மறைத்துக்கொண்டு போய்விடுகிறார்கள். அல்லது இன்னம் ஒருபடி மேலேபோய் இதெல்லாம் interpolation (இடைச் செருகல்) என்று சொல்லி விடுவார்கள்.

சீர்திருத்தத் தலைவர்கள்

ரிஃபார்ம், (Reform) என்று சொல்வ தெல்லாம் கடைசியில் அவரவரும் மனஸ் போனபடி, ஒரு டிஸிப்ளினும் இல்லாமலிருக்கலாம் என்று அவிழ்த்து விடுவதில் தான் முடிந்திருக்கிறது. ரிஃபார்ம்களை ஆரம்பித்து வைத்திருக்கிற எல்லா லீடர்களையும் ஒழுங்கு தப்பினவர்கள் என்று சொல்வதற்கில்லை. இவர்கள் personal life-ல் (தனி வாழ்க்கையில்) ஸத்யம், நேர்மை, ஒழுக்கம், த்யாகம், அன்பு போன்ற பலவற்றைக் கடைப் பிடித்தவர்கள் என்பதை ஆக்ஷேபிப்பதற்கில்லை. ஓரளவுக்குப் படிப்பு, விஷய ஞானம் எல்லாம் உள்ளவர்களாகவும், ஜனங்களை நல்லதில் கொண்டு போக வேண்டும் என்பதில் நிஜமான அக்கரை கொண்டவர்களாகவுமே இந்தச் சீர்திருத்தத் தலைவர்களில் பலர் இருந்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். ஆனாலும் இவர்கள் பண்ணுகிற பெரிய தப்பு என்னவென்றால் தங்கள் புத்திக்கு ஸரியாகத் தோன்றுவது தான் ஸரி, பாக்கி எல்லாம் தப்பு என்று நினைப்பது தான். தாங்கள் சுத்தர்கள் தான், விஷயம் தெரிந்தவர்கள் தான் என்றாலும் தர்ம சாஸ்திரங்களை வேத வழிப் பிரகாரம் பணணி வைத்த ரிஷிகளும், மநு முதலிய பெரியவர்களும் தங்களை விடவும் எவ்வளவோ சுத்தர்கள், எவ்வளவோ விஷயம் தெரிந்தவர்கள் என்று உணர்கிற மரியாதை இவர்களுக்கு இல்லை.

இன்னொன்று, ‘அத்ருஷ்ட பலன்’ என்பதாக சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறதை நம்பாமல் வெள்ளைக்காரர்கள் எண்ணப் போக்குப்படி இவர்களும் practial result என்று உடனுக்குடனே லோகத்தில் வெளிப் படையாகத் தெரியும் பலன்களை மட்டுமே கருதிக் கார்யம் செய்வதுதான். யதார்த்தத்துக்கு மேல், யதார்த்தத்துக்குப் பிடிபடாத தெய்வ சக்தி ஒன்று இருக்கிறது. அது அப்போதைக் கப்போது கண்ணுக்குத் தெரியும் படியாக மட்டும் ரிஸல்டைக் காட்டி விடுவதில்லை. நம் கார்யங்கள், எண்ணங்கள் இவற்றின் பலன் உடனே இங்கேயே தெரியாமல், ஏதோ காலத்தில், ஏதோ ஜன்மாந்தரத்தில், ஏதோ லோகாந்தரத்தில் கூட விளையும் படியாகத் தான் விஸ்தாரமான அளவிலே லீலை பண்ணிக் கொண்டிருக்கிறது. இப்படி உடனுக்குடனே பலன் தெரியாமல் எப்போதோ விளைய இருப்பதைத்தான் ‘அத்ருஷ்ட பலன்’ என்பது. இதிலே இந்த ரிஃபார்மர்களுக்கு அநேகமாக நம்பிக்கையே கிடையாது. அவர்களுடைய படிப்பு, பார்வை எல்லாம் வெள்ளைக்காரர்களின் வழியிலே தான் இருக்கிறது. அதனால் தான் லோகத்தில் அநேக வித்யாஸங்கள் இருப்பதெல்லாம் ஜன்மாந்த்ர கர்மாப்படி அவரவரும் ஆத்மாபிவிருத்தி அடைவதற்காக எற்பட்டது என்பதை ஒப்புக்கொள்ளாமல், ஸமத்வம், அபேதவாதம் என்று எதையோ சொல்லிக்கொண்டு எல்லாவற்றையும் பல பட்டையாகப் போட்டுக் குழப்ப வேண்டும் என்கிறார்கள்.

இப்படியே லோகாந்தரங்களிலும் அத்ருஷ்ட பலன் ஏற்படுவதைப் புரிந்து கொள்ளாததால் ஸதேவதைகளுக்கான யஜ்ஞாதி கர்மாக்கள், பித்ருக்களுக்கான திவஸ தர்ப்பணாதிகள் ஆகியவற்றை வீண்கார்யம், ஸூபர்ஸ்டிஷன் என்று கேலி செய்கிறார்கள். லோகந்த்ர, ஜன்மாந்தரங்களில் பலனைத் தருபவனாக ஈஸ்வரனொருவன் இருக்கிறானென்பதை மறந்து, தாங்களே அதிகாரி, தாங்களே கர்த்தா என்று நினைத்துக்கொண்டு, இவர்கள் விரும்புகிற சீர்திருத்தம் முன்னேற்றம் எல்லாம் தங்கள் வாழ்நாளிலேயே நடந்து பார்த்தாக வேண்டும் – ”In my life time” – என்கிறார்கள். இவர்களில் சிலர் கொஞ்சம்கூட அடக்கமில்லாமலிருக்கும் போது ” தம்ப-மான-மதான்விதா :” என்று (கீதையில்) சொல்லியிருப்பது போலத் தாங்களே எதையும் ஸாதித்து விட முடியும் என்று தற்பெருமையில் மதம்பிடித்து டம்பபாகத் திட்டங்களை போட்டு, ‘லோகத்தையே மாற்றி விடப் போகிறேனாக்கும்’ என்று கிளம்புகிறார்கள்.

இவர்களைப் படம் பிடித்துக் காட்டுவது போல பகவான் .
” இதமத்ய மயா லப்தம் இமம் ப்ராப்ஸ்யே மநோரத ம் ”
”இன்றைக்கு இதை ஸாதித்து விட்டேனாக்கும். இன்னமும் பெரிசாக நாளைக்கு ஸாதிப்பேன்” என்று வெறும் லௌகிகமாகவே எதெதையோ பண்ணிப் பூரித்துப்போகிறார்கள் என்கிறார். இப்படியெல்லாம் செய்கிறவர்களிடத்தில் சாஸ்திரப்படி சொல்லப்படும் சௌசம் (தூய்மை, மடி-விழுப்பு பார்ப்பது) இருக்காது, எந்த ஆசாரமுமே இருக்காது:
” ந சௌசம் ந அபி ச (ஆ)சார :”என்கிறார்.
உபநிஷத்திலும், ” ஸ்வயம் தீரா : பண்டிதம் மன்ய மானா :”என்று
”நானே மஹா புத்திசாலி, மஹா பண்டிதன்” என்று பரலோக விஷயங்களைப் புரிந்து கொள்ளாமல் கிளம்புகிறவர்களையும், அவர்களை வழிகாட்டியாகக் கொண்டு பின்னே போகிறவர்களையும் சொல்லி, இவர்கள் எல்லாரும் குருடர்களால் வழி காட்டப்பட்ட குருடர்கள் மாதிரி சுற்றிச் சுற்றித் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s