புராணங்கள்

புராணம் வேதத்தின் பூதக் கண்ணாடி

சின்னஞ்சிறியதாக இருப்பதை பூதக்கண்ணாடி. நன்றாகப் பெரிசுப் பண்ணி காட்டுகிறதல்லவா? இம்மாதிரி வேதத்தில் சுருக்கமாக, சின்ன சின்னதாகப் போட்டிருக்கிற தர்மவிதிகளை கதைகள் மூலம் பெரிசு பண்ணிக் காட்டுவது தான் புராணம். ஒன்றைச் சுருக்கமாகச் சொன்னால் அது மனஸில் ஆழப்பதியாமல் போய்விடலாம். அதையே சுவாரஸ்யமான கதையாக விஸ்தாரம் பண்ணிச் சொன்னால் நன்றாக மனஸில் பதியும்.

‘ஸத்யம் வத’ (உண்மயே பேசு) என்று மட்டும் வேதம் சொல்கிறது. அப்படிப் பேசுவதால் எத்தனை பெருமை ஏற்படுகிறது என்பதை ஹரிச்சந்திரன் கதை பல அத்யாயங்களில் விஸ்தாரமாகச் சொல்கிறது.

‘தர்மம் சர’ (அறத்தைப் பின்பற்று) என்று இரண்டு வார்த்தையில் வேதம் சொன்னதை நீள நெடுக மஹாபாரதத்தில் தர்ம புத்திரரின் கதையாகச் சொல்லியிருக்கிறது.

‘மாத்ரு தேவோ பவ’,’ பித்ருதேவோ பவ ‘(அன்னை தந்தையை தெய்வமாகக் கொள்) என்ற வேத வாக்குக்கு ஸ்ரீ ராம சரித்ரம் பூதக் கண்ணாடியாய் இருக்கிறது.

அடக்கம், பொறுமை, தயை, கற்பு முதலான அநேக தர்மங்களை வேதத்தில் – கட்டளையிட்டுள்ளவற்றை – புராண புருஷர்களும், புண்ய ஸ்திரீகளும் தங்களுடைய சரித்திரத்தின் மூலம் நன்றாகப் பிரகாசிக்கும்படிச் செய்திருக்கிறார்கள்.  அவற்றைப் படிப்பதாலும்,கேட்பதாலும் இந்த தர்மங்களில் நமக்கு இந்த ஆழ்ந்த ஈடுபாடு உண்டாகிறது. இவர்கள் எல்லாருக்கும் சோதனைகளும் கஷ்டங்களும் நிறைய வந்திருக்கின்றன. அநேக தப்பு தண்டாக்களைச் செய்கிற நம்மைவிட இந்த உத்தமமான புராண பாத்திரங்கள்தான் ஜாஸ்தி கஷ்டப்பட்டிருக்கிறார்கள். ரொம்பவும் பயங்கரமான சோதனைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆனாலும் இவர்களுடைய சரித்திரத்தைப் படிக்கும்போது, “தர்மங்களை அநுஸரிப்பதனால் கஷ்டந்தானே ஏற்படுகிறது? ஆனால் அநுஸரிக்க வேண்டாமே!” என்று தோன்றுவதேயில்லை. அத்தனை கஷ்டத்திலும், சோதனையிலும் விட்டுக் கொடுக்காமல் அவர்கள் பாறாங்கல் மாதிரி தர்மத்திலேயே நிற்பதால் பெற்றிருந்த மனத் தெளிவு தான் நம் மனஸில் பதிகிறது. அதோடு கூட அந்த உத்தமர்கள் படும் கஷ்டங்களைக் கேட்கும்பொழுது நம் உள்ளம் உருகுவதாலேயே நம்முடைய அழுக்குகளையும் அலம்பிவிட்டாற்போல் இருக்கிறது. முடிவிலே அவர்களுக்கு ஏற்படுகிற பெரிய வெற்றியும் கீர்த்தியும் நமக்கு அந்த தர்மங்களில் கெட்டியான பிடிமானத்தை உண்டாக்கித் தருகின்றன.

சரித்திரம், புராணம் படிக்க வேண்டும்.

ஏன் சரித்திரம் படிக்க வேண்டும் என்பதற்குச் சொல்கிற அநேக காரணங்களில் ஒன்று – “History repeats itself” என்பது. சரித்திரம் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி நடக்கிறது என்கிறார்கள். அதனால் பூர்வத்தில் எப்படி நடந்தது என்று தெரிந்து கொண்டால் அதிலிருந்து இனி எப்படி நடக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். பூர்வத்தில் நடந்ததிலிருந்து எதிர்காலத்துக்குப் படிப்பினைப் பெறலாம். இப்படியிப்படிச் சூழ்நிலை உருவாகிக் கொண்டு போனால் யுத்தம் ஏற்படும், ஜனங்களின் வாழ்வு கெட்டுப் போகும், ஒரு பெரிய நாகரிகமே விழுந்து விடும் என்பது சரித்திரத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. இதனால் அதே மாதிரியான சூழ்நிலைகள் இப்போது உருவானால் அவற்றை முதலிலேயே உஷாராக இருந்து தடுத்துவிட வசதியாக இருக்கும். இது சரித்திரத்தின் ஒரு பிரயோஜனம் என்கிறார்கள்.

ஆனாலும் நடைமுறையில் ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கிற ஹிஸ்டரியைப் பார்த்து யாராவது எந்தப் படிப்பினையாவது பெறுகிறார்களா என்று பார்த்தால் அதுதான் இல்லை ! செங்கிஸ்கான், தைமூர், கஜினி, மாலிக்காஃபூர் போலப் பலபேர் அவ்வப்போது தோன்றி தேசங்களைச் சூறையாடி ஹதாஹதம் செய்திருக்கிறார்கள் என்று சரித்திரத்திலிருந்து தெரிகிறது. தெரிந்து கொண்டால் மட்டும் இப்படிப்பட்ட வெறிப் போக்குகளை நிறுத்த முடிந்திருக்கிறதா என்ன? இவர்கள் மாதிரியே ஒரு ஹிட்லரும் முஸோலினியும் வந்து மறுபடி ஹதாஹதம் செய்கிறார்கள். இன்னும் கிட்டத்தில் பிரத்தியக்ஷமாகவே பார்க்கிறோம் – ஒரு லஞ்சம், ‘கரப்ஷன்’ வேண்டியவர்களுக்குப் பட்சபாதம் காட்டுவது, வேலை கொடுப்பது என்றெல்லாம் ஒரு ராஜாங்கத்தார் பண்ணினால் அதற்கு ஜனங்களின் ஆதரவு போய்விடுகிறது என்று எலெக்ஷ்னில் தெரிகிறது. அப்புறம் வேறே சிலர் ராஜாங்கத்தை அமைக்கிறார்கள். ஆனால் படிப்பினை ஒன்றும் பெற்றதாகத் தெரியக் காணோம்! அதே தோஷங்களை இவர்களும் செய்ததாக ஏற்பட்டு, அடுத்த எலக்ஷ்னில் அதே கதி இவர்களுக்கும் உண்டாகிறது. ஒரு குறுகிய காலத்துக்குள்ளேயே இப்படி ஏற்படுகிறது. ஆகையால் repeats itself என்று தெரிந்து கொண்டு விடுவதால் மட்டும் அதிலிருந்து நல்ல பாடம் எதையும் படிக்க முடியவில்லை என்று தெரிகிறது. ‘ரிபீட்’ ஆகாமல் ஹிஸ்டரியை நிறுத்தும் படிச் செய்வதற்கு அதில் எதுவும் இல்லை.

ஏன் புராணம் படிக்க வேண்டும்

தர்மத்தை நாம் ஏற்கும் படியாகச் சரித்திரத்தோடு குழைந்து கொடுத்தால் தான் அது நம்மை நல்வழிப்படுத்தித் தப்பான ஸமாசாரங்கள் ‘ரிபீட்’ ஆகாமல் செய்ய உபாயமாகும். புராணம் இதைத்தான் செய்கிறது. சரித்திரத்தில் வெறுமே காலவாரியாக ராஜாக்களின் வரலாற்றைத்தான் தந்திருக்கிறது. இதிலே கொடுங்கோலர்கள் கெடுதல் அடைந்தார்களா, உத்தமமான ராஜாக்கள் உயரந்த கதியைப் பெற்றார்களா என்பதற்கு முக்யமில்லை. கர்ம நியதிப் படி ஈச்வரன் இவர்களுக்குத்தான் இப்படிப்பட்ட பாப புண்ய பலன்களைக் கொடுத்துத் தான் இருப்பார். ஆனால் அது இந்த ஜன்மாவிலேயே கொடுக்கப்பட வேண்டும் என்பதில்லை அல்லவா? பின் ஜன்மாக்களில் இந்தப் பலன்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இதை விசாரிப்பது ஹிஸ்டரியின் காரியமில்லை. விசாரித்து அறிகிற சக்தியும் சரித்திரக்காரர்களுக்குக் கிடையாது. ஒரு கஜினியோ, ஹிட்லரோ இந்த பூமியில் வாழ்ந்தவரை கொடி கட்டித்தான் பறந்தார்கள் என்றாலும் உயிர்போன பின் அவர்களுக்கு நரக வாஸம் கிடைத்தது; அல்லது ரொம்பவும் நீசமான மறு ஜன்மா ஏற்பட்டது என்றால் இதையும் புராணம் விசாரித்துச் சொல்லும். புராண கர்த்தாக்களுக்கு அந்த சக்தி உண்டு; இதைச் சொல்கிற லக்ஷ்யமும் உண்டு. ஹிஸ்டரி நிபுணர்களுக்கு இந்த இரண்டும் இல்லை. அதனால் தான் ஹிஸ்டரியில் பார்க்கிறவர்களில் அநேகரின் ஜீவிதத்திலிருந்து பாப புண்யங்களைப் பற்றி நாம் படிப்பினை பெற முடிவதில்லை.

புராணம் பொய்யென்று இங்கிலீஷ்காரர்கள் சொல்லி நம்முடைய தேசத்தின் ஹிஸ்டரியை எழுதினார்கள். அதிலே தங்களுக்குப் பிடித்த divide-and-rule (பிரித்து ஆளும்) கொள்கைகக்கு ஸாதகமான ரேஸ் தியரி முதலான அநேக விஷயங்களை ரொம்பவும் நடுநிலையிலிருந்து ஆராய்ச்சி பண்ணினது போலவே காட்டிச் சேர்த்து விட்டார்கள். புராணம் பொய்யென்று இவர்கள் சொன்னார்கள் என்றால், இப்போது இவர்கள் எழுதிய சரித்திரத்திலும் பொய் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு உள்ளது உள்ளபடி இந்திய சரித்திரத்தை எழுதுவதற்கு (reconstruct செய்வதற்கு) முயற்சிகள் நடக்கின்றன. இப்படிச் செய்கிறவர்களுக்கும் அநேக கொள்கைகளில் வேண்டியது-வேண்டாததுகள் (prejudice-கள்) இருக்கலாம். அதனால் என்னதான் நடுநிலையிலிருந்து எழுதுவதாகச் சொன்னாலும், எவ்வளவு தூரத்துக்கு முழுக்க நிஜமான சரித்திரம் உருவாகும் என்று சொல்வதற்கில்லை. பதினெட்டுப் புராணங்களை எழுதிய வியாஸாசாரியாள், அநேக ஸ்தலபுராணங்களை எழுதிய பெரியவர்கள், பக்தர்களின் சரித்ரங்களை எழுதிய சேக்கிழார் முதலியவர்கள் தான் வாஸ்தவத்தில் விருப்பு வெறுப்பில்லாமல் எழுதினவர்கள்.

நல்லது கெட்டவைகளைப் பற்றி நமக்கு ஒருவிதமான பாடமும் கற்பிக்காமல் வெறுமே காலவாரியாக பல ராஜாக்கள் ஆண்டதையும் சண்டை போட்டதையும் வளர்த்திச் சொல்ல வேண்டியதில்லை. நாம் வாழ்க்கையில் எடுத்துத் கொள்ளும்படியான உபதேசம் இல்லாத சரித்திரம் நமக்கு வேண்டாம். ஆத்ம லாபமான சரித்திரங்களையே சொல்வோம்’ என்ற அபிப்ராயத்தோடு புராணங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஸாம்ராஜ்யங்கள், சண்டை, படையெடுப்புக்கள், ராஜ வம்சங்கள் இவை தான் சரித்திரம் என்று நினைப்பது ஸரியில்லை. எல்லா விஷயங்களுக்கும் சரித்திரம் உண்டு. அரசியல் சரித்திரத்தை மட்டும் ஹிஸ்டரியில் பிரதானமாக வைத்து விட்டார்கள். தர்ம விஷயங்களைப் பிரதானமாக வைத்து அதற்கு ராஜ வம்சத்தை மட்டுமின்றி மற்ற புண்ய புருஷர்கள், ரிஷிகள், ஸாமானிய ஜனங்கள் முதலியோரின் கதைகளையும், மற்ற எல்லா விஷயங்களின் சரித்திரத்தையும் துணையாக சேர்த்துத் தருவனவாகப் புராணங்களில் இருக்கின்றன. புராணங்களைப் பார்த்தால் அந்தக் கால அரசியல் மட்டுமின்றி cultural life (கலாச்சார வாழ்வு), அக்கால வித்தைகள், ஸயன்ஸ்கள் எல்லாவற்றையும் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது. அவற்றில் முக்யமாக சொல்லப்படுவதோ தர்மங்களும் ஆத்யாத்மிக க்ஷேமமாகும்.

பதினெட்டுப் புராணங்கள்

ஒவ்வொரு தேவதா மூர்த்தியைப் பற்றியும் ஒவ்வொரு புராணம் சொல்லும். சைவமானவை, வைஷ்ணவமானவை, சாக்தமானவை என்றிப் படிப் பல தேவதைகளைக் குறித்துப் புராணங்கள் இருக்கின்றன.

பிரம்ம புராணம் (பிராம்ம்), பத்ம புராணம் (பாத்மம்), விஷ்ணு புராணம் (வைஷ்ணவம்), சிவ புராணம் (சைவம்), பாகவதம், நாரத புராணம் (நாரதீயம்), மார்க்கண்டேய புராணம், அக்னி புராணம் (ஆக்னேயம்), பவிஷ்ய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், லிங்க புராணம், வராஹ புராணம் (வாராஹம்), ஸ்காந்த மஹா புராணம், வாமண புராணம், கூர்ம புராணம் (கௌர்மம்), மத்ஸ்ய புராணம் (மாத்ஸ்யம்), கருட புராணம் (காருடம்), பிரம்மாண்ட புராணம் என்பவை பதினெட்டுப் புராணங்கள்.

பதினெட்டுப் புராணங்களையும் நாம் பார்க்கிற ரூபத்தில் ஸரி பண்ணி எழுதிக் கொடுத்தது வியாஸர்தான். வேதங்களை அவர் தான் விபாகம் பண்ணினார் (வகுத்துக் கொடுத்தார்) என்ற விஷயத்தை முன்பே சொல்லியிருக்கிறேன். வேதத்திலுள்ள விதிகளை எல்லோருக்கும் நன்றாக மனஸிலே ஆழமாகப் பதியச் செய்ததற்காக அவரே புராணங்களையும் அநுக்ரஹித்தார். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. வேதத்தை அத்யயனம் பண்ணும் அதிகாரம் சிலருக்குத் தான் இருக்கிறது. மற்றவர்களுக்கு இல்லை. அதனால் அப்படிப்பட்ட பொது ஜனங்களுக்கு வேத தத்வார்த்தங்கள் தெரிய வேண்டும் என்றே புராணங்களை வியாஸர் எழுதினார் என்பதே அந்தக் காரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s