ஆத்ம ஞானம்

நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒரு நாள் நாம் ஆசாப்படும் வஸ்துக்கள் நம்மை விட்டுப் பிரிவது நாம் அவற்றைவிட்டுப் பிரிவது சர்வ நிச்சயம். சாவின் மூலம் இந்தப் பிரிவு ஏற்படாமல், அதற்கு முந்தி நாமாக ஆசைகளை ராஜினாமா செய்து விட்டுவிட்டால், அத்தனைக் கத்தனை ஆனந்தமாக இருக்கலாம்.

நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனை முளைகளை துக்கத்துக்கு அடித்துக்கொண்டு நம்மைக் கட்டிப்போட்டுக் கொள்கிறோம். ஆசைகளை குறைக்கக் குறைக்க துக்கஹேதுவுங் குறையும். இந்தப் பிறவி முடியுமுன் நாம் சகல ஆசைகளையும் விட்டுவிட்டால் மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படவே வேண்டாம். அப்படியே பரமாத்மாவில் கரைந்து ஆனந்தமாகி விடலாம்.

மனிதன் மற்ற விலங்குகளைவிட விசேஷ ஞானம் உடையவன் என்று பெருமைப்படுகிறோம். ஆனால், இவன் மட்டும் அவற்றைவிட விச்ஷமாக என்ன செய்து விடுகிறான். நாயும், நரியும், கரப்பான் பூச்சிகளும் கூடத்தான் சாப்பிடுகின்றன. சந்ததி விருத்தி செய்கின்றன. சாகிக்கின்றன. பொதுவாக மனிதனும் இதற்குமேல் ஏதும் செய்வதாகக் தெரியவில்லை. அப்பொழுது இவனது விசேஷ ஞானத்தில் பெருமைப்பட என்ன இருக்கிறது. எல்லாவற்றிலும் பெரிய ஞானம் நிலைத்த ஆனந்தத்துக்கு வழி கண்டு கொள்வதுதான்.

மனிதன் இப்படிப்பட்ட நிலைத்த ஆனந்தத்தைப் பெறுகிறானா? யோசித்துப் பார்த்தால் பரம தாத்பரியமானது தெரிவது, இந்த ஞானம், ஆனந்தம் நாம் என்பதெல்லாம் ஒன்று தான். நாம் உண்மையில் யார் என்பதை உணரும் ஞானம் வரும் போது, நாமே ஞான மயமான ஆனந்தம் என்று கண்டு கொள்வோம். வெளி வஸ்துக்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தே தான் ஆனந்தம் பிறக்கிறது. நமது உண்மை ஸ்வரூபமான ஆனந்தத்தை நாம் அஞ்ஞானத்தினால் மூடி மறைத்துக் கொண்டிருக்கும் நிலையில் கூட நம்முடையது என்று ஒன்றிடம் சம்பந்தம் வைக்கும்போது தான் அதிலிருந்து ஆனந்தத்தை அடைகிறோம். அந்த சம்பந்தம் போய் விட்டால் ஆனந்தம் போய் விடுகிறது.

உதாரணம் சொல்கிறேன். ஒருவனுக்குச் சொந்தமாக கொஞ்சம் நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த வயல் என்னுடையது என்பதால், விளைச்சல் அதிகமாகும் போதெல்லாம் அவனுக்கு மனம் குளிருகிறது. ஆனந்தம் உண்டாகிறது. அப்புறம் விளைச்சல் குறையத் தொடங்குகிறது. வயலை வேறு ஒருவனுக்கு விற்று சாஸனம் பண்ணி விடுகிறார். மறுபடி அடுத்த வருஷம் அதே வயலில் ஏகமாக விளைச்சல் கூடியிருக்கிறது. இப்போது அதைப் பார்க்கும்போது இவர் மனம் குளிரவா செய்கிறது? அடடா, போன வருஷம் நம் கையில் இருந்தபோது தரிசு மாதிரிப் பொட்டலாக இருந்தது. இப்போது எவனோ ஒருவனுக்கு அதிஷ்டம் அடிக்கிறதே என்று வயிற்றெரிச்சல் தான் உண்டாகிறது. எனது என்ற சம்பந்தம் இருந்த மட்டுந் தான் அமோக விளைச்சலில் சந்தோஷம் இருந்தது. பிறகு அதே விளைச்சலில் உணர்ச்சி அடியோடு மாறி விட்டது.

இன்னோர் உதாரணம் சொல்கிறேன். என்னிடம் பல பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வந்து, அவற்றுக்கு சித்தப்பிரமை இருக்கிறது. அது நிவிருத்தியாக வேண்டும் என்று கேட்டுக் கொள்வதைப் பார்த்திருப்பீர்கள். இதற்கு நேர்மாறாக ஒரு தகப்பனார் நடந்து கொண்டார். அவர் இரண்டாவது கல்யாணம் செய்துகொண்டவர். இளையாளுக்கு மூத்தாள் பிள்ளையோடு ஒத்து வரவில்லை. ஏகச் சண்டை போட்டு குடும்பம் பிரிந்தது. இவர் இளையாள் தரப்பிலேயே இருந்தார். பிள்ளையைக் கைவிட்டுவிட்டார். அவர் ஒரு நாள் என்னிடம் வந்து மூத்தாள் பிள்ளை இளையாளுக்குப் பில்லி சூன்யம் வைத்தான். நல்ல வேளையாக அது அவனையே திருப்பி அடித்துவிட்டது என்றார். எல்லாத் தகப்பனார்களும் பிள்ளைக்குச் சித்தப்பிரமை ஏற்படும்போது கலலைப்படுகிறார்களென்றால், இவரோ அதிலேயே சந்தோஷப்படுகிறார். ஏன்? இவனுக்கு அவனிடம் நம்முடையவன் என்ற சம்பந்தம் போய் விட்டது. இளையாளிடம் மட்டும் நம்முடையவன் என்ற எண்ணம் இருக்கிறது. அதனால் தான் அவளுக்கு ஹானி இல்லை என்றால் இவர் ஆனந்தப்படுகிறார்.

மாயைக்கு ஆளான நான் என்பதன் சம்பந்தத்துக்கே இத்தனை ஆனந்தம் இருக்கிறது என்றால், எதிலும் சம்பந்தப்படாமல் பூரண ஞானமாக இருக்கிற அந்த வெறும் நான் எத்தனை ஆனந்த மயமாக இருக்கும். வெல்லம் போட்டால் கசப்பு பாகற்காய்க் கறியிலும் சிறிது தித்திப்பு இருப்பதை உணர்கிறோம். வெல்லத்தின் சம்பந்தத்துக்கே தித்திப்பு இருப்பதால், அசல் வெல்லம் தித்திப்பு மட்டுமே என்பதில் சந்தேகம் என்ன. கசப்பான துக்க உலகத்தின் நான் என்பதின் மாயக் கிரணங்கள் சம்மந்தப்படுகிற போதே அதில் தித்திப்பு ஆனந்தத்தைப் பெறுகிறோம். என்றால், அந்த நான் மட்டுமே ஸ்வச்சமாக நிற்கின்றபோது எத்தனை தித்திப்பாக ஆனந்த மயமாக இருக்கவேண்டும்.

சிறிய பொத்தல்கள் கொண்ட ஒரு சட்டியால் ஒரு தீபத்தை மூடிவைத்தால் துவாரங்கள் வழியாக மெல்லிய ஒளிக் கிரணங்கள் வெளிவரும். மாயையால் மூடப்பட்ட ஆத்ம தீபத்திலும் இந்திரிய துவாரங்கள் வழியாகக் கொஞ்சம் கொஞ்சம் ஆனந்த ஒளியைப் பார்க்கிறோம். மாயச்சட்டியை உடைத்து விட்டால் ஆனந்த ஜோதிர் மயமாகவே ஆகிவிடலாம். மாயையை எப்படி உடைப்பது என்றால் ஆசைகளை அடக்குவது தான் வழி. மனம் இருக்கும் வரை ஆசைகளும் இருக்கும். அதனால் மனத்தை அடக்கிவிட வேண்டும். மனம் அடங்கி விட்டால் மரண நிலையில் இருப்பதுபோல் ஒரு சக்தியுமின்றி ஜடம் மாதிரி ஆவோம் என்று எண்ணக்கூடாது. மாறாக, இதுதான் சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை.

சாதாரணமாக ஏதாவது ஒரு அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீக்ஷண்யம் இருக்கும். பல வாய்க்கால்களில் ஒன்றில் ஜலத்தை அடைத்துத் திருப்பினால் இன்னொன்றில் அதிகம் நீர் பெருகுவது போல், ஒர் அங்கத்தில் ஊனம் இருப்பதே இன்னொன்றில் தீக்ஷண்யத்தைக் கொடுக்கிறது. ஆத்ம சக்தியைப் பலவாறாகச் சிதறச் செய்யும் எல்லாம் இந்திரியங்களையும் அடைத்துக் கொண்டு விட்டால், அப்போது சகல சக்திகளும் ஒரே இடத்தில் அமைதியாக, ஆனந்தமாகக் கூடி நிற்கும். மிகுந்த சக்தியுடன் உலகுக்கு நல்லது செய்யலாம்.

ஆத்ம ஞானம் பெற்ற ரிஷிகள் சக்தியே இதற்கு திருஷ்டாந்தம். சகல லோகங்களுக்கும், சகல காலங்களுக்கும் சென்று அவர்கள் விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். நம் காதுகளுக்குக் கேட்காத சப்தங்களை ஆகாயத்தில் கேட்டு வேத மந்திரங்களைக் கொடுத்தார்கள். எப்படி ஆசையை அடக்குவது. எப்படி மனத்தை நிறுத்துவது. எப்படி நிலைத்த ஆனந்தத்தை அடைவது என்று கேட்கிறவர்கள் அந்த வேதங்கள் சொன்னபடி நடந்தாலே போதும். முடிவில் பேரானந்தம் அடையலாம். இதற்குப் பரமேசுவரன் அநுக்கிரகம் செய்வாராக.

பதவி, பணம், ஸ்திரீ புருஷாள், கௌரவம், பப்ளிஸிட்டி என்றிப்படி வெளியிலிருந்து நமக்கு ஆனந்தம் கிடைப்பதாக எண்ணிக்கொண்டு ஒயாமல் யத்தனம் செய்வது அத்தனையும் சமுத்திரமாக இருக்கிற  நாம்  அதையறியாமல், ஒரு சொட்டு ஜலத்துக்காக தவிக்கிற மாதிரிதான் வெளிப்பொருள் எதுவோ கிடைக்காததால் நமக்குக் குறை வந்து விட்டதாகக் துக்கப்படுவது சுத்தத் தப்பு. நமக்குக் குறையே இல்லை. வெளியிலே இருக்கிற அத்தனை ஆனந்தமும் நமக்குள்ளேயே அடக்கம். வெளி மாதிரி இருப்பதிலிருந்து தானாக எது வந்தாலும் வரட்டும். சமுத்திரம் நதிகளை அடக்கிக் கொள்வதுபோல் அவற்றையும் உள்ளே இருப்பதோடு சேர்த்துக் கொள்வோம். எதுவும் வரயில்லையா? அதனால் பாதகமில்லை. எதும் வராததால் நமக்கு என்ன குறை. நமக்கு உள்ளேயே இருக்கிற பரமாத்ம வஸ்துவின் லேசந்தானே வெளியில் இருப்பதெல்லாம் என்கிற தெளிவோடு எப்போதும் இருக்க முயலும்.

துக்கம் நம் உடன் பிறப்பு. நம் பூர்வ கர்மாவின் பயனாக இந்தத் துக்கங்களுக்கு நாம் முன்னமேயே விதை போட்டிருக்கிறோம். இதிலிருந்து தப்ப வழி இல்லை.ஆனால் கர்மத்தினால் ஏற்படும் கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு சாந்தமாக இருக்க வழி உண்டு. புதிதாக கர்ம மூட்டையைப் பெருக்கிக் கொண்டு எதிர் காலத்தில் கஷ்டத்தை அதிகமாக்கிக் கொள்ளமலிருக்க வழி உண்டு. முதலில் சொன்ன ஞானம் தான் அந்த வழி. சித்தப் பிரமை பிடித்து, ஜடமாகி விட்டால் கஷ்டம் தெரிவதில்லை. பைத்தியத்தின் கஷ்டம் வேரூன்றி நிற்பதில்லை. ஆனால், சித்தப் பிரம்மையில் நித்திய ஆனந்தமும் இல்லை. தூக்கத்தில் துக்கமில்லை. ஆனால் தூக்கத்தில் சுகமாக இருக்கிறோம் என்கிற அறிவு இல்லை. ஞானிதான் எப்போதும் விழிப்பிலேயே இருந்து கொண்டும் சாசுவத ஸுகியாக இருக்கின்றன. அவனது தேகத்தில் சிரமங்கள் இரா என்பதில்லை. ஆனால் அவனுடைய மனத்தில் கிலேசமே இராது. வெளியிலிருக்கிற சிரமம் அவன் உள்ளே பாதிப்பதே இல்லை.

கிணற்று ஜலத்துக்குள் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால் தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பித்து விடுகிறது. எளிதில் புரட்ட முடியாத பெரிய மரங்களை வெள்ளத்துக்கு அடியாகத் தான் புரட்டி எடுப்பது வழக்கம். அதே மாதிரி நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரில் அழுக்கி விடவேண்டும். அப்போதும் துக்க ஹேதுவான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஜலத்துக்குள் இழுக்கிற குடம் மாதிரி அப்போது துக்கம் பரம லேசாகிவிடும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s