கடவுள் – உருவமும் அருவமும்

புஷ்பத்தின் வாசனை கண்ணுக்குப் புலப்படாது. மூக்குக்குத் தான் அது தெரியும். கற்கண்டின் தித்திப்பு மூக்குக்குத் தெரியாது. அது நாவுக்குத் தான் புலனாகும். சங்கீதம் நாவுக்குப் புலப்படாது. செவிக்குத் தான் புலப்படும். சூடும், குளிரும் தொடு உணர்ச்சி கொண்ட தோலுக்குத் தான் புலனாகும். இவற்றைக் காதால் உணர முடியாது. மேலே சொன்ன நாலும் கண்ணுக்குத் தெரியாது. மாறாகப் பச்சை சிகப்பு முதலிய வர்ணங்கள் காது, மூக்கு, வாய், தோல் இவற்றுக்குப் புலப்படாது. கண்ணுக்கே புலனாகும்.

நாஸ்திகர் உள்பட அனைவரும் நிச்சயமாக உண்டு என்று கூறுகிற உலக வஸ்துக்கள், இவ்விதம் ஒவ்வொர் இந்திரியத்துக்குப் புலனானாலும் போதும். எல்லா இந்திரியங்களுக்குப் புலனாக வேண்டியதில்லை என்று தெரிகிறது. நாலு இந்திரியங்களுக்குப் புலனாகாமல் ஒரே ஒர் இந்திரியங்களுக்குப் புலனானாலும் ஒரு வஸ்து இருப்பதாகவே சொல்கிறோம். உதாரணமாக சங்கீதம் காது ஒன்றுக்கே புலனாகிறது. அதை ருசிக்கவோ, பார்க்கவோ, முகரவவோ, தொடவோ முடியாது. இருந்தாலும் சங்கீதம் என்று ஒன்று கிடையாது என்று சொல்வதில்லை அல்லவா?

ஐந்து இந்திரியங்களுக்கும் புலனாகாமலும் உண்மையில் ஒரு வஸ்து இருக்க முடியுமா என்று யோசித்துப் பார்ப்போம். பிரபஞ்சம் முழுவதிலும் மின்சார அலைகளே வியாபித்திருக்க விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஆனால் நமக்கு எந்த இந்திரியத்தாலும் அதை அறிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், சில பரிசோதனைகளின் மூலம் மின்சாரத்தின் வியாபகத்தையும், அது சரீரம் மூளை எல்லாவற்றிலும் கூட வியாபித்திருப்பதையும் நிரூபித்துக் காட்டினால் நம்புகிறோம். இத்தனை இந்திரியங்களையும் அவை கிரகிக்கிற வஸ்துக்களையும் படைத்து ஒழுங்கு செய்து வைத்த ஒரு பெரிய அறிவு இருக்கவே செய்கிறது. அதைத்தான் கடவுள் என்கிறோம்.

மின்சாரத்தைப் போல அதுவும் எங்கும் வியாபித்திருக்கிறது. நமக்குள்ளும் வியாபித்திருக்கிறது. இந்திரியங்கள் அதிலிருந்து தோன்றி அது இயக்கி வைக்கிற முறையில் கட்டுப்பட்டே வேலை செய்கின்றன. கண்ணால் பார்க்கத் தான் முடிகிறது. கேட்க முடிவதில்லை. காதால் கேட்கத் தான் முடிகிறது. பார்க்க முடியவில்லை. இவை இப்படி இருக்கத்தான் வேண்டும் என்பது அந்தப் பராசக்தி வகுத்து வைத்த கட்டுப்பாடு தான். இப்படியாக எந்தப் பெரிய சக்திக்கு இந்த இந்திரியங்கள் கட்டுப்பட்டிருக்கின்றனவோ, அந்த மகா சக்தி இந்த இந்திரியங்களுக்குக் கட்டுப்படுமா? இதனால் தான் கடவுளை எந்த இந்திரியத்தாலும் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைக் கொண்டு கடவுளே இல்லை என்று சிலர் சொல்கிறார்கள்.

கடவுள் மகா சக்தி படைத்தவர் மட்டுமில்லை. பரம காருண்யமும் பொருந்தியவர். எனவே தான் அவர் அனைத்திற்கும் அப்பாற்பட்ட அருவமாயினும், பக்தர்கள் தங்கள் இந்திரியங்களால் கிரகித்து, கண்ணாரக் கண்டு, வாயாரப் பேசி, கையார ஸ்பரிசித்து மகிழும் வண்ணம் பல உருவங்களும் தருகிறார். கடவுள் இல்லை என்று வாதம் செய்கிறவர் வாதம் செய்கிறவர்களிடம் கருணை கொண்டு அவர்களுக்கே உருவத்துடன் காட்சி தருவார். அருவமாயினும் உருவம் கொள்வார்.

மின்சாரம் ஒயரில் வருகிறபோது அருவமாயிருந்தாலும், காற்றடக்கமான ஒரு கண்ணாடிச் சிமிழும் (BULB) அதனுள் சிறு கம்பியும் (filament) சேர்த்து ஸ்விட்சைப் போட்டால் அருவ மின்சாரமே ஜோதி ரூபமாகிறதல்லவா? தங்கள் இதயச் சிமிழில் பக்தி என்ற கம்பியைப் பூட்டிக்கொண்டு சிரத்தை என்கிற ஸ்விட்சைத் தட்டிவிட்டுக் கொண்டால், அருவமான கடவுள் திவ்ய மங்கள ஜோதியாகத் தரிசனம் தருவார். சூரிய வெப்பத்தில் கடல் நீர் ஆவியாகப் போகும்போது அருவமாகி விடுகிறது. அதுவே மேகமாகக் குளிர்ந்தால் நம் கண்ணுக்குத் தெரிகிற மழையாகிறது. இன்னமும் குளிர்ந்தால் கெட்டியான பனிக்கட்டியே ஆகிவிடுகிறது. நம் இதயம் எத்தனைக் கெத்தனை குளிர்ந்து ஈஸ்வரனை ஸ்மரிக்கிறதோ, அத்தனைக் கத்தனை ஸ்தூலமாக அருவதத்துவம் உருவம் கொள்கிறது. அல்லும் பகலும் இறைவனையே நாடி, வேறு ஆசைகளை அறவே மறந்து பக்தி செய்தால் அருவப் பரம் பொருளை நன்றாக உணரலாம். இப்படி ஒருவன் ஞானம் பெறுவதினால், பக்தி செய்வதினால் ஏனைய உலக மக்களுக்கு என்ன லாபம் என்று கேட்கிறவர்களும் இருக்கிறார்கள். ஈசுவர தரிசனம் பெற்ற ஒருவனை, பரமாத்மாவை அநுபவித்த ஒருவனைப் பார்த்த மாத்திரத்தில் மக்களின் தாபமெல்லாம் சமனமாகி அவர்களுக்கும் ஒர் ஆறுதலும் சாந்தியும் உண்டாகின்றனவே. அந்த சாந்திக்கு ஈடாக எந்த உலகப்  பொருளைச் சொல்ல முடியும்? இதுவே ஞானியால், பக்தனால் உலகுக்கு ஏற்படுகிற மிகப் பெரிய நன்மை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s