எழுத்தாளர் கடமை – பௌராணிகர்கள்
சூட்சமமான தத்துவங்களையும், சிரம சாத்தியமான சடங்குகளையும் சொல்கிற வேதங்களை நான்காகப் பிரித்து, நான்கு சிஷ்யர்களுக்குப் போதித்தார் வியாஸர். அந்தச் சூட்சமங்களைப் புரிந்து கொண்டு வேதம் விதிக்கிற யக்ஞ அநுஷ்டானங்களை ஏராளமாக கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுச் செய்யக்கூடிய ஒரு சிலருக்கு, இந்த நாலு சிஷ்யர்கள் வேதங்களைப் போதித்தார்கள். வேதங்களை இவ்வாறு வகுத்துப் பரப்பிய அதே வியாசர். அதே வேதங்களின் பரம தாத்பர்யத்தைச் சிலருக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ரஞ்சகமான புராணங்களாக இயற்றினார். இவற்றப் பொது ஜனங்களுக்கெல்லாம் பிரசாரம் செய்கிற பணியை, ஸுதர் என்பவரிடம் ஒப்புவித்தார். புராணங்களைப் பிரச்சாரம் செய்து கொண்டேயிருந்தால், அவர் ஸுதபௌராணிகர் என்றே பெயர் பெற்றார்.
இவர் அப்பிராமணராக இருந்தும், பெரிய பிரம்ம ரிஷிகளெல்லாம் இவரை உயர்ந்த ஸ்தானத்தில் அமர்த்தி, நிரம்ப மரியாதை செய்து, இந்தப் புராணங்களைக் கேட்டார்கள். வேதத்தில் ‘ஸதயம் வத’ என்று ஒரு விதி இருக்கும். அந்த விதியைக் கதாரூபமாகி ஜனங்கள் யாவரும் ஏற்குமாறு செய்கிறது ஹரிச்சந்திரன் வரலாறு. தர்மம் சர என்கிற வேதத்தின் சட்டத்துக்கு மகாபாரதம் முழுவதும் விளக்கமாகிறது. மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ என்கிற வேத வாக்கியங்களுக்கு ஸ்ரீ ராமனின் சரித்திரம் அற்புதமாக பாஷ்யமாக இருக்கிறது. ஆத்ம அபிவிருத்திக்காக வேதத்தில் சொல்லியிருக்கிற சூஷ்மமான தத்வங்கள் எல்லாம் இப்படிப் பொது ஜனங்கள் எல்லோருக்கும் பௌராணிகளால் கதைகளைகப் பிரசாரம் செய்யப்பட்டன.
தொன்றுதொட்டு பௌராணிகர்களின் பிரவசனங்கள் நம் தேசத்தில் எங்கு பார்த்தாலும் நடந்து வந்திருக்கின்றன. கல்வெட்டுகளைப் பார்த்தால் கோயில்களிலெல்லாம் புராணப் பிரவசனம், குறிப்பாக பாரதப் பிரசங்கம் நடந்து வந்திருப்பது தெரியும். நித்திய பூஜை போலவே புராணப் பிரவசனமும் கோயில்களில் அன்றாடம் நடக்க வேண்டும் என்று மானியங்கள் விட்டிருக்கின்றார்கள். ஆலயத்தில் வழிபட்டும், புராணங்களை சிரவணம் செய்துமே சமூக காலம் வரையில் நம்முடைய பொது ஜனங்கள் சூதுவாதில்லாமல் யோக்கியர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். இக்கால நோக்கின்படி, அவர்களுக்கு எழுத்தறிவு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் நல்ல பண்பு படைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தால், அவர்களே வாஸ்தவமாகக் கல்வி பெற்றவர்கள் என்று சொல்ல வேண்டும்.
அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கும் வரையில் எல்லா கல்வியுமே வாய்மொழியாகச் சொல்லி காது வழியாகக் கேட்டே, வழிவழியாக வளர்ந்து வந்திருக்கிறது. அந்தக் காலத்தில் பனை ஒலையில் எழுதுகிற தேர்ச்சி பெற்றவர்கள் சிலரே இருந்தார்கள். மற்றபடி, பெரிய வேத வேதாந்தம் தெரிந்தவர்கள் கூட எல்லாம் செவிவழியே தான் கேட்டறிந்தார்கள். அச்சு இயந்திரம் வந்தது. அப்புறம் நிறையப் புஸ்தகங்கள், நியூஸ் பேப்பர்கள் ஏற்பட்டுவிட்டன. பௌராணிகர்களின் இடத்தை இவை பிடித்துக்கொண்டன. எனவே, பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் தான் இன்றைய பௌராணிகர்கள்.
ஸுதரும் மற்ற பௌராணிகர்களும் எப்படி தர்மங்களை ரஸமான கதைகள் மூலம், பொது ஜனங்களிடையே பிரச்சாரம் செய்தார்களோ, அவ்விதமே செய்ய வேண்டியது இன்றைய பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்களின் கடமை. ஜனங்களுக்குப் பிடித்ததை மட்டுமே சொல்வது என்று வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களின் அறிவை, மனத்தை உயர்த்துகிற விஷயங்களையே எழுத வேண்டும். இதைச் சுவாரஸ்யமாகச் செய்ய வேண்டும். உத்தமமான விஷயங்களைப் புதுப்பித்து விதங்களில் உணர்த்த வேண்டும். பத்திரிக்கையாளர்கள் வாழ்நாள் முழுதும் மாணாக்கர்களாகவே இருந்தால் தான், தாங்களும் இப்படிப் புதுப்புது விஷயங்களை அறிந்து, மற்றவர்களுக்குப் பிரச்சாரம் செய்ய முடியும்.
சத்தியத்தை சர்க்கரைப் பூச்சிட்ட மாத்திரைகளாக்கித் தரவேண்டும். சர்க்கரை பூச்சுத் தானே ஒழிய, முழுக்கவும் சர்க்கரையாகி விடக் கூடாது. வெறும் சர்க்கரை உடம்புக்கு நல்ல தல்ல. வெறும் இந்திரிய ரஞ்சகமான சமாச்சாரங்களில் தான் ஜனங்களுக்கு அதிகக் கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு, இவ்விதமே எழுதுவது சரியல்ல.
ஜனங்களுக்கு ஆத்மாபிவிருத்தி தருகிற முறையில் எழுதுவதற்கு இதய பூர்வமாக எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் முனைந்தால், தானாகவே ஜனங்களுக்கு அதில் ருசி பிறக்கும். நம்மையும் உயர்த்திக்கொண்டு, நம் வாசகர்களையும் நாம் உயர்த்த வேண்டும் என்கிற கடமை உணர்ச்சியைப் பத்திரிக்கையாளர்களும் எழுத்தாளர்களும் பெற வேண்டும். இவ்விதம் ஆத்ம க்ஷேமம், லோக க்ஷேமம், சாந்தி, சுபிட்சம் எல்லாவற்ருக்கும் மெய்யான சேவை செய்கிற பாக்கியத்தைப் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பெறவேண்டும்.
அந்தக் காலத்தில் நல்ல நிலைமையில் இருந்து, இப்போது அதே வம்சத்தில் தோன்றிய ஜனங்களின் நிலை இப்படி எல்லாவற்றிலும் மிகவும் தாழ்வாகப் போனதற்கு, ஏதாவது காரணம் இருக்க வேண்டும் என்று யோசித்தேன்.
அந்தக் காலத்தில் கோயில்களிலெல்லாம் பாரதம் வாசிக்க வேண்டுமென்று கட்டளை இருந்திருக்கிறது. பாரதம் வாசிப்பதற்கென்றே மானியம் தருகிற சைஸனங்கள் இருக்கின்றன. இப்போது, பெரிய கோவில்களில் எதிலுமே பாரதம் வாசிக்கிரதைக் கானோம். அப்போது மக்களுக்கு வேற பொழுது போக்கே இல்லையே. அந்த பாரதத்தில் என்ன இருக்கிறது. பொறுமை என்பதற்கு வடிவமாக தர்ம புத்திரர் இருக்கிறார். சத்தியமமான பிரத்க்ஞை என்பதற்கு பீஷ்மர் இருக்கிறார். தானத்துக்குக் கர்ணன். கண்ணியத்திற்கு அர்ஜுனன். இப்படியே ராமாயணத்தை எடுத்துக் கொண்டால், சகல மனிதர்களின் மூர்த்தியாக ஸ்ரீ ராமன் இருக்கிறார். பெண்களுடைய உத்தமமான தர்மத்துக்கு சீதை இருக்கிறாள். ஸ்ரீ ராமனுக்கு நேர் விரோதியாக ராவணனுக்கு மனைவியாக இருக்கும் மண்டோதரியும் சீதைக்குக் குறைவில்லாத மகா பதிவிரதையாக இருக்கிறாள்.
ராமாயண, பாரதக் கதைகளைக் கேட்டும்போது, இப்படிப்பட்ட உத்தமமான ஆத்மாக்களின் ஞாபகம் வருகிறது. படித்தவர், படிக்காதவர் எல்லோருக்கும் அடிக்கடி அந்தக் கதைகள் காதில் விழுந்து கொண்டிருந்தால், நம்மால் அந்த உத்தம பாத்திரங்களைப் போலவே நடக்க முடியாமற் போனாலும், இது தான் நாம் இருக்கவேண்டிய உண்மையான முறை என்ற நினைவு அடிக்கடி வரும். இதற்கே பலனுண்டு. இதனால்தான் இந்தக் கதைகளைக் கேட்டு வந்த அந்தக் காலங்களில், உயர்ந்த தர்மமும், நீதியும் நாட்டில் இருந்தன. தர்மம், நீதி இரண்டும் சேர்ந்து தான் பண்பு உண்டாகிறது. அந்தப் பண்பாட்டை மாற்றுவதற்கும், குலைப்பதற்கும் இப்போது எத்தனையோ ஏற்பாடுகள் வந்திருக்கின்றன. முன்பு இருந்த பழக்கத்தை மறுபடியும் உண்டாக்குவது கஷ்டம்தான். ஆனாலும் சிறிதளவாவது செய்யத்தான் வேண்டும்.
நாமும் நல்லது பண்ணிக்கொண்டு போனால் ஈசுவரன் நமக்குக் கை கொடுப்பார். அவர் தான் நமக்குக் கை கொடுத்திருக்கிறார். கண் கொடுத்திருக்கிறார். கொஞ்சம் ஆலோசிப்பதற்கு புத்தியும் கொடுத்திருக்கிறார். இந்தச் சக்தியும் புத்தியும் இருப்பதற்குள்ளே திருத்துவதற்கான ஸத்காரியம் செய்ய வேண்டும். இப்போது என்ன என்னவோ விதமான ஆபத்துக்கள் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன. ஜனங்கள் இன்ன வழியில் போவது என்று தெரியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும்போது, அநேக காட்சிகள் வந்து அவர்களுடைய புத்தியைப் பலவிதமாகக் குழப்பி மாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நம்முடைய சத்தியமும் நீதியும் தர்மமும் ஜனங்களுடைய மனசில் கலையாமல் நின்றுகாப்பாற்ற வேண்டும். அப்படிக் காப்பாற்றுவதற்கு மஹாபாரதமே உபகாரமாக இருக்கும் என்று அன்றிலிருந்து இன்று வரை ஜனங்களுடைய அநுபவத்தினாலே தெரிகிறது.
குருடன் ஒருவன் கையில் லாந்தருடன் போய்க் கொண்டிருந்தானாம். எதிரில் வந்த ஒருவன் உனக்குத்தான் கண் தெரியவில்லையே, லாந்தர் ஏன் எடுத்து வருகிறாய் என்று கேட்டான். அதற்குக் குருடன், எனக்கு கண் இல்லாவிட்டாலும் உனக்குக் கண் இருக்கிறதல்லவா. அதற்காகத்தான் இதை எடுத்து வருகிறேன். இல்லாவிட்டால் இந்த இருட்டில் நீ என்மேல் தடுக்கி விழுந்திருப்பாயே என்றானாம். அது போலவே பழைய சாஸ்திரகங்கள் நமக்குப் புரியாவிட்டாலும், எதிர்காலத்தில் யாருக்காவது புரியலாம். பயனாகலாம் என்பதனாலாவது அவற்றை நாம் ரக்ஷித்தாக வேண்டும். வசதியே இல்லாத காலங்களில் யுகாந்தரமாக ரக்ஷிக்கப்பட்ட சாஸ்திரங்களை நமக்கு முதல் தலை முறையினர் எல்லா வசதியிருந்தும் காப்பாற்றாமல் அழித்து, நம்மை வஞ்சித்து விட்டார்கள் என்று, வருங்காலத் தலைமுறையினர் நம்மைக் குற்றம் சொல்ல இடம் வைக்கலாமா.?