நம் மதத்தின் புனர்ஜன்மக் கொள்கைக்கு ஆதரவாக ஒன்றை அழுத்தமாகக் காட்டலாம். வெள்ளைக்காரி ஒருத்தி என்னிடம் வந்து இந்த Reincarnation விஷயத்திற்கு நிரூபணம் (proof) கேட்டாள். நான் அவளிடம் வாதம் ஒன்றும் செய்யவில்லை. அப்போது மடத்து காமில் ஒரு பண்டிதர் இருந்தார். அவருக்கு இங்கிலீஸ் வரும். அவரிடம் அவளை அங்கே உள்ள பிரசவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டுபோய், அங்கே பிறந்திருக்கிற குழந்தைகளைப் பற்றிய விவரங்களைக் குறிப்பு எடுத்துக் கொண்டு வரும்படி சொன்னேன். அவளும் அப்படியே பிரஸவ ஆஸ்பத்திரிக்கு அவரோடு போய்விட்டு வந்து குழந்தைகளைப் பற்றிய விவரங்களைச் சொன்னாள்.
அதன்படி ஒரு குழந்தை கொழு கொழுவென்று இருந்தது. இன்னொன்று நோஞாசானாக இருந்தது. ஒன்று அழகாக இருந்தது. இன்னொன்று அவலட்சணமாக இருந்தது. ஒன்று உசத்தியான வார்டில் சௌகரியமாகப் பிறந்தது. இன்னொன்று சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு நடுவே ஒரு பரம ஏழைக்குப் பிறந்தது. ஜன்மாவின் கடைசியில் பகவான் ஒருத்தரை நிரந்தர நரகத்துக்கு அனுப்புவது ஒரு பக்கம் இருக்கட்டும். அது நமக்குக் கண்μக்குத் தெரியாத விஷயம். இப்போது பல ஜன்மங்களின் ஆரம்பத்தைப் பிரத்யக்ஷமாகப் பார்த்தாயே? இதில் ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வுகள். ஏன் ஒன்று தாரித்தியத்திலும் இன்னொன்று சௌரியகத்திலும் பிறக்க வேண்டும்? ஏன் ஒன்று ஆரோக்கியமாகவும் இன்னொன்று துர்பலமாகவும், ஒன்று லக்ஷணமாகவும் இன்னொன்று அவலக்ஷணமாகவும் இருக்க வேண்டும்?
ஜீவனுக்கு ஒரே ஜன்மாதான் உண்டு என்ற உங்கள் மதக் கொள்கையை ஒப்புக் கொண்டால், அவை ஜானிக்கிற போதே இத்தனை பாரபட்சங்கள் இருப்பதைப் பார்க்கிற போது ஸ்வாமி கொஞ்சங்கூடக் கருணை அல்லது புத்திசாலித்தனம் இல்லாமல் மனம் போனபடி கன்னாபின்னா என்று காரியம் செய்து கொண்டிருக்கிறார் என்று தானே ஆகிறது. அப்படிப்பட்ட ஸ்வாமி கருணை செய்வார் என்று நம்பி எப்படி பக்தி செலுத்துவது? பூர்வ ஜன்ம பாப புண்ணியங்களை ஒட்டிப் புனர் ஜன்மா அமைகிறது என்ற கொள்கையைத் தவிர, நீ பார்த்த ஏற்றத் தாழ்வுக்கு என்ன காரணம் சொல்ல முடியும் என்ரு கேட்டேன். அவள் ரொம்ப சந்தோஷத்தோடு நான் சொன்னதை ஏற்றுக் கொண்டு போனான்.
ஆனால், நவீன காலத்தவர்களுக்கு இந்த விளக்கங்கள் (explanations) போதாது. ஸயன்ஸ்படி ப்ரூஃப் கேட்பார்கள். அப்படிப் பார்த்தாவலும் இப்போது பாராஸைகாலஜிக்காரர்கள்(Para Psychology) இந்த விஷயத்தில் நிறைய ஆராய்ச்சி பண்ணி ஜன்மாந்தரங்கள் உண்டு என்பதற்கு ஆதரவாக அநேக விஷயங்களைச் சொல்கிறார்கள். உலகம் முழுக்க இவர்கள் சுற்றி வந்ததில் எத்தனையோ இடங்களில் பூர்வ ஜன்மாவை நன்றாக ஞாபகம் வைத்துக் கொண்டு சொன்ன பல பேர்களைப் பார்த்திருக்கிறார்கள். பூர்வ ஜன்மத்தில் இப்போதய இடத்துக்குத் துளிகூட சம்பந்தமே இல்லாமல் வேறு எங்கேயோ இருக்கப்பட்ட தூர தேசங்களில் தாங்கள் பார்த்தவற்றை நினைவாகச் சொல்கிற பல பேர் இருக்கிறார்கள். இந்த ஜன்மாவில் கொஞ்சங் கூடச் சம்பந்தமில்லாத பலரிடம் அப்போது இவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அந்த விவரங்களை எல்லாம் மறக்காமல் சொல்கிறார்கள். இவர்கள் சொல்வது உண்மை தானா என்று பரிசோதித்துப் பார்ப்பதற்காக பாராஸைகாலஜிக்காரர்கள் அந்தந்த ஊர்களுக்குப் போயிருக்கிறார்கள். போனால் அங்கே ஆச்சரியப்படுகிற மாதிரி இவர்கள் சொன்ன அடையாளங்களை, இவர்கள் பூர்வத்தில் சம்மந்தப்பட்டிருந்த மநுஷ்யர்களைப் பார்க்கிறார்கள். இது மாதிரி ஒன்று, இரண்டு அல்ல. ஏகப்பட்ட கேஸ்கள் இருக்கின்றன. நமக்கெல்லாம் முற்பிறவி சமாச்சாரங்கள் அடியோடு மறந்து போய்விட்டன. ஆனால், வெகு சிலருக்கு நினைவு இருக்கிறது. அநேகமாக இப்படிப்பட்டவர்கள் பூர்வஜன்மத்தில் இயற்கையாகச் செத்துப் போகாம (natural death) அதாவது, நோய் நொடி வந்து செத்துப் போகாமல், கொலை செய்யப்பட்டவர்களாகவோ அல்லது திடீரென்று ஒரு விபத்திலே சிக்கிக் கொண்டு அப்போது மரணமடைந்தவர்களாகவோ இருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, அதில் ஃபிலாஸஃபி (தத்வம்), தியாலஜி (தெய்வ வழிபாடு) இரண்டும் வரும். அதோடு தன் மனிதர் ஒழுக்கம் பற்றியும் ஏதோ கொஞ்சம் வரும். மற்ற மதங்களில் சமூக வாழ்க்கையியல் அமைப்பைப் பற்றிய விஸ்தாரமான பிரஸ்தாபம் கிடையாது. ஆனால் ஹிந்து மதத்தில் மட்டும் சமூக வாழ்வுக்கான அடிப்படை (sociological foundation) ரொம்பவும் கெட்டியாக, வர்ணாச்ரம தர்மம் என்ற விசேஷமான அம்சம் உண்டாயிருக்கிறது.
வர்ண தர்மம் என்பது ஒன்று. ஆசாரம தர்மம் என்பது இன்னொன்று, தனி மநுஷ்யன் இன்னின்ன பிராயத்தில் இப்படியிப்படி இருக்க வேண்டும் என்பது ஆசிரம தர்மம். முதலில், சின்ன வயசில் பிரம்மச்சாரியாக இருந்து குருகுலத்தில் வித்தியாப்பியாசம் பண்ண வேண்டும். இரண்டாவது யௌவனத்தில் கல்யாணம் பண்ணிக் கொண்டு குடித்தனம் நடத்திப் பிரஜாவிருத்தி செய்ய வேண்டும். முன்றாவதாக வயசான பின் வீட்டு வாசலை விட்டு, லௌகீக சம்பந்தங்களை அடியோடு கத்தரித்துவிட்டு, சன்யாசியாகிப் பரமாத்மாவிடமே மனஸைச் செலுத்த வேண்டும் என்று விதிப்பது ஆசிரம தர்மம். இந்த ஆசிரமங்களுக்கு பிரம்மச்சர்யம், கார்ஹஸ்தானம் (க்ருஹஸ்த தர்மம்) வானப்ரஸாதம், ஸந்நியாசம் என்று பெயர். இது தனி மனிதனுக்கான தர்மம்.
சமூகம் (society) முழுவதற்குமான ஏற்பாடுதான் வர்ண தர்மம் என்பது. இப்போது ரொம்பவும் கண்டனத்துக்கு (criticism) ஆளாகியிருப்பது இந்த வர்ண தர்மம் தான். வர்ண தர்மத்தை ஜாதிப் பிரிவினை என்று பொதுவில் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் வர்ணம் வேறு. ஜாதி வேறு. வர்ணங்கள் நாலுதான். ஜாதிகளோ ஏகப்பட்டவை, பிராம்மணர் என்ற ஒரே வர்கத்தில் அய்யர், அய்யங்கார், ராவ் என்று பல ஜாதிகள் இருக்கிறது. நாலாவது வர்ணம் ஒன்றிலேயே பிள்ளா, ரெட்டியார், நாயகர் என்று பல ஜாதிகள் வருகின்றன. வேதத்திலும் (யஜுர் வேதம் – முன்றாவது அஷ்டகம் – நாலாவது ப்ரச்னம்) தர்ம சாஸ்திரத்திலும் பல ஜாதிகள் பேசப்படுகின்றன. அந்தப பெயருள்ள ஜாதிகள் இப்போது இல்லை. அதெப்படியானாலும் ஜாதிகள் பல.
வர்ணங்கள் நாலே நாலுதான். நம் மதத்துக்கே பெரிய களங்கம். மநுஷ்யர்களிடையே உசத்தி – தாழ்த்தி என்று பேதம் கற்பிக்கிற பொல்லாத ஏற்பாடு என்று இப்போது நினைக்கப்படுகிற வர்ண தர்மம் என்ன என்று, நன்றாக பக்ஷபாதமில்லாமல் ஆராய்ந்து பார்த்தால், சமுதாய வாழ்வின் ஒழுங்குக்காகவே ஏற்பட்ட ஒப்பற்ற சாதனம் அது என்று தெளிவாகும்.