பல தினுசான தப்புத் தண்டாக்கள், பாபங்கள், ஜன்ம ஜன்மமாகப் பண்ணிவிட்டோம். அந்த பாபங்கள் தீருகிற மட்டும் நமக்கு ஆத்மாநுபாவம் என்கிற பேரானந்தம் ஸித்திக்காது. கர்மாக்களுக்கெல்லாம் பலன் தருகிற பலதாதாவான ஈசுவரன் நம் பாபத்துக்கெல்லாம் தண்டனை கொடுத்துத் தீர்த்து வைத்து பிறகு தான் நமக்கு அந்த சாசுவதமான பேரின்பம் கிடைக்க முடியும். பாபத்தை எப்படித் தீர்த்துக் கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ளமுடியும்.
ஒரு ஜென்மாவில் இவன் பண்ணின பாபங்களை இன்னொரு ஜன்மாவிலிருந்து தீர்த்துக் கொள்ளட்டும் என்கிற மஹா கருணையால் தான் ஈஸ்வரன் மறுபடி ஜன்மா தருகிறார். ஆனால், நாம் என்ன செய்கிறோம். இந்தப் புது ஜன்மாவில் பழைய பாபங்களுக்கு நிவிருத்தியாகப் புதிய புண்ணியங்களைப் பண்ணாமலிருப்பதோடு, இப்போதும் வேறு புதிசு புதிசாகப் பல பாபங்களைச் செய்து மூட்டையைப் பெரிசாக்கிக் கொள்கிறோம். இப்படிப் பாபங்களைப் பெருக்கிக் கொள்ளாமல், அவற்றைக் கரைத்துக் கொள்வதற்காகத் தான் ஆசாரியாள் கர்மத்தையும், பக்தியையும் ஞானத்துக்கு அங்கமாக வைத்தார்.
பாபங்கள் இரண்டு தினுசு, ஒன்று சரீரத்தால் செய்த பாப கர்மா, இன்னோன்று மனசினால் செய்த பாப சிந்தனை. பாப கர்மாவைப் போக்கிக் கொள்ள புண்யகர்மா செய்ய வேண்டும். பாப எண்ணங்களைப் போக்கிக் கொள்ள புண்ணியமான நினைப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
புண்ய கர்மா என்ன? அவரவருக்கும் வேதம் விதித்த கர்மம் தான். லோக வாழ்க்கை சீராக நடக்க வேண்டும். அறிவினால் நடக்கிற கார்யம், ராஜாங்க ரீதியில் நடக்கிற கார்யம், வியாபார ரீதியில் நடக்கிற கார்யம், சரீர உழைப்பினால் நடக்கிற கார்யம் எல்லாம் ஒன்றுக் கொன்று விரோதமில்லாமல் அநுசரனையாக நடந்தால் தான் சமூக வாழ்வு சீராக இருக்கும் என்பதால் வேத தர்மம் சமுதாயத்தை இப்படி நாலு கார்யங்களுக்காகவும் பிரித்து, ஒவ்வொருத்தருடைய தொழிலையும் ஒட்டி, அவரவருக்கான நியதிகளை, ஆசார அநுஷ்டானங்களை வகுத்துத் தந்திருக்கிறது. இவற்றைத் துள்க் கூட மீறாமல் அவரவரும் தொழில் செய்தால் அதுவே புண்ணிய கர்மாவாகிறது.
கர்மா எப்படி பாபமாகிறது என்றால் நமக்காக என்ற ஆசை வாய்ப்பட்டு ஏதோ ஒரு லட்சியத்தை பிடிக்கப் போகிற போதுதான் இந்த லட்சியப் பூர்த்திக்காக எந்தத் தப்பையும் செய்யத் துணிகிறோம். அதனால் சித்தத்தில் துவேஷம், துக்கம், பயம், இம்மாதிரி அழுக்குகளை ஏற்றிக் கொண்டு விடுகிறோம். இப்படி நாமாக ஒரு லட்சியத்துக்கு ஆசைப்படாமல், வேதம் சொல்கிற படி என்று கர்மா செய்ய ஆரம்பித்து விட்டால் பேராசையின் அரிப்பு இல்லை. போட்டா போட்டி இல்லை. அதனால் வருகிற துவ்ஷம், துக்கம், இத்யாதி இல்லை.
சமுதாயம் முழுக்க ஸர்ம ஜனங்களும், அதற்கும் மேலே ஸமஸ்தப் பிரபஞ்சமே நன்றாக இருக்கத் தான் வேதம் இப்படி கர்மாக்களைப் பிரித்துக் கொடுத்திருக்கிறது என்பதை புரிந்துகொண்டு, சொந்த லாபத்தைப் பெரிதாக நினைக்காமல், அதாவது பலனைக் கருதாமல், லோக க்ஷேமத்தையே நினைத்து இப்படிக் கர்மாக்களைப் பண்ணுகிற போது அவை எல்லாம் புண்ணிய கர்மங்களாகி நமக்கு உள்ளூர நன்மை செய்கின்றன. வெளியில் லோக வாழ்க்கையில் அவை சமூகம் முழுவதற்கும் நன்மை உண்டாக்குவதோடு, உள்ளே நம்முடைய பாப கர்மங்களையும் கழுவித் தீர்க்கின்றன. தனக்கு என்ற பெரிய அரிப்பு இல்லாமல், எனவே அசூயை வஞ்சனை எதுவும் இல்லாமல் காரியம் செய்கிற போது தான் அந்தக் காரியத்தில் முழு ஈடுபாடு உண்டாகிறது. சித்தம் காரியத்திலேயே நன்றாக ஈடுபடுவதினால் அதற்குப் பாப எண்ணங்களை நினைக்கவே இடம் குறைந்து போகிறது. அதாவது புண்ய கர்மமே சித்தம் சுத்தமாவதற்கு படிப்படியாக உதவுகிறது.
காரியமும் எண்ணமும் நெருங்கின சம்மந்தமுள்ளவை. காரியமே இல்லாமல் உட்காருகிறேன் என ஆரம்பித்தால் அப்போது மனசில் இல்லாத கெட்ட எண்ணங்கள் எல்லாம் படை எடுத்து வரும். இங்கிலீஷில் கூட வேலையில்லாத சித்தம் சைத்தானின் பட்டடை என்று ஒரு பழமொழி உண்டு. ஆகவே தான் – சித்தம் நின்று அத்வைத ஞானம் ஸித்திக்க வேண்டுமானால் அதற்கு முன் அந்தச் சித்தம் சுத்தப் படவேண்டும். ஆரம்பத்தில் கர்மாக்களினாலேயே இந்தச் சித்த சுத்திக்கு வழி பண்ணிக் கொள்ள முடியும் என்பதால் தான் ஆசாரியாள் வேத கர்மாக்களை நிலை நாட்டினார். பாப சிந்தனைகளை போக்குகிற புண்ணிய சிந்தனை தான் பரோபகாரம், சேவா, மனப்பான்மை, தியாகம் எல்லாம். பொதுவாக அன்பு என்று சொல்லலாம். இந்த அன்பை சகல ஜீவ ஜடப் பிரபஞ்ஜத்துக்கும் மூலமான பரமாத்மாவிடம் திருப்பி விடுவது தான் பக்தி. நமக்கு அந்தப் பரமாத்மாவே ஆதாரமாகையால் அதனிடம் மனசைத் திருப்பப் பழகினால் சுலபமாக அது அங்கே ஈடுபட்டு நிற்கிறது. பாப சிந்தனையே இல்லாமல் போய், ஏற்கனவே ஜன்மாந்தரங்களாக ஏற்றிக் கொண்டிருந்த பாப வாசனைகளும் பகவத் ஸம்ரணத்தினால் கரைந்து கரைந்து மனசானது பரமாத்மா ஒன்றையே கெட்டியாகப் பிடித்துக் கொள்கிற ஐகாக்ரிய நிலை லபிக்கிறது. மனசு அடியோடு இல்லாமல் போவதற்கு முந்தியப்படி இப்படி ஒன்றே ஒன்றை மட்டும் மனசால் பிடித்துக் கொள்வது தான். ஆயிரம் கோடி வழிகளில் பாய்ந்து கொண்டிருந்த மனசு கடைசியில் ஒன்றையே பிடித்துக் கொண்டு, அப்புறம் அதிலேயே தோய்ந்து, கரைந்து போய் விட்டதால், முடிந்த முடிவில் சாசுவதப் பேராந்தமான ஆத்மா ஒன்று தான் நிற்கும்.
ஒன்றிலேயே மனசை நிறுத்துவது என்கிற தியான லோகத்துக்கு நம்மை ஏற்றிவிடுகிற படிக்கட்டாகத்தான் பகவத்பாதாள் கர்மம், பக்தி இவற்றை உபாயங்களாக வைத்தார். பாராயணம், பூஜை, க்ஷேத்ராடனம் இப்படி ஆரம்பிக்கிற பக்தி, மனசை மேலும் மேலும் பரமாத்மாவிடம் ஒன்றுபடுத்த, நாம் கொஞ்ச கொஞ்சமாக அவருடைய பரம சாந்தமான நிஜ ஸ்வரூபத்தை அநுபவிக்கத் தொடங்குவோம். தூக்கம், மயக்கம், பிரமை மாதிரி இல்லாமல் நல்ல நினைப்போடு கூடவே (Conscious) மனசு ஆடாமல் அசையாமல் இருக்கற பேரின்ப நிலைக்கு இப்படியாக்கிக் கிட்டே கிட்டே கொண்டு கொண்டு சேர்ப்பது பக்தி என்பதற்காகவே பரமாத்மாவிடம் பக்தி செலுத்த வேண்டும் என்கிறேன்.
அத்வைதம் என்று சும்மா வாயால் சொல்லிக் கொண்டிருப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்ல. அந்த நிலையிலே இருக்கிற மகத்தான, நிறைந்த சாந்தத்துக்கு ஒரு ரூபமாகவும் (Personification), லட்சிய உதாரணமாகவும் (ideal)இருக்கிற ஈசுவரன் என்கிறவனைப் பற்றிய நினைப்புதான் நம்மை அந்த நிலையில் அவ்வப்போது க்ஷண காலமாகவாவது தோய்த்து எடுக்கும். அத்வைத நிலை என்ற நமக்குப் புரிபடாத, நம்மால் பிரியத்துடன் ஒட்டிக் கொள்ள முடியாத ஒன்றைப் பற்றிச் சொல்வதை விட, அந்த நிற்குண நிலையையே ஈசுவரன் என்று ஸகுணமாகப் பார்க்கிறது தான் நமக்குப் பிடிப்பைத் தந்து நம்மை உயர்த்திவிடும். இப்படி உயர்த்திவிடவே ஸ்வாமி நமக்கு அத்யாவஸ்யமாகத் தேவைப்படுகிறார். அவரிடம் நமக்கு பக்தியும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது. ஆக, சம்ஸாரத்தில் நமக்கு ஏற்படுகிற துக்கங்களின் நிவிருத்திக்காக என்றில்லாமல், நம்மை நாமே தெரிந்து கொண்டு, ஆத்ம சரீரத்தில் நிறைந்திருப்பதற்கு வழியாகவே ஈசுவர பக்தி வேண்டும்.
உண்மை நமக்குப் புலப்படாததற்குப் காரணம். நமக்குச் சித்தத்தில் அழுக்கு இருப்பதும், ஒருமைப்பாடு இல்லாததும் தான். கண்ணாடி ஆடிக் கொண்டிருந்தால், அதில் தெரியும் பிரதி பிம்பம் யதார்த்தமாக அல்லாமல் விரூபமாகத் தெரியும். ஆட்டத்துடன் அந்தக் கண்ணாடியில் அழுக்கும் இருந்தால் பிரதி பிம்பத்தில் யதார்த்த பாவமே கொங்சங்கூட இராது. நம்முடைய மனக்கண்ணாடி ஆடிக் கொண்டும், அழுக்குப் படிந்தும் இருப்பதால் பொருள்களை அது உள்ளபடி ஆனந்த வஸ்துவாகப் பிரதிபலிப்பதில்லை.
பைத்தியம் பிடித்த ஒருவனிடம் இந்தத் தடியைக் கால்மணி நேரம் பிடித்துக் கொண்டே இரு என்றால், அவனால் முடியாது. நம்மால் அந்தத் தடியைத் கால்மணி நேரம் பிடித்துக் கொண்டிருக்க முடிகிறது. ஆனால் ஒரு பொருளை
மட்டும் குறிப்பிட்ட நேரம்வரை நினைத்துக் கொண்டு இரு என்றால் அப்படிச் செய்ய முடியவில்லை. சித்தம் மறு கணமே ஆயிரக் கணக்கான எண்ணங்களை சினிமாப் பாடல்கள் ஒடுவதுபோல் ஒட்டமாக ஒடியபடி நினைக்கிறது. ஆகையால், நாம் எப்படிப் பைத்தியங்களை நினைக்கிறோமோ, அதுபோல் மகான்களுக்கு நாமும் பைத்தியமாகத் தான் படுவோம். மனம் கட்டப்படுகின்ற வரையில் எல்லோரும் பல வகைப்பட்ட பைத்தியங்களே. அழுக்குடனுள்ள கண்ணாடி ஆடுவதுபோல் நம்முடைய சித்தம் தோஷத்துடனும் ஜகாக்ரதை இல்லாமலும் (ஒரு முகமாகாமலும்) இருப்பதுதான் இதற்குக் காரணம்.
தோஷம் போனால் ஜகாக்ரதை வரும். ஜகாக்ரதை வந்தால் உண்மை விளங்கும். தோஷத்தைப் எப்படிப் போக்குவது. நமக்கு அழுக்கு என்பது தேகம். இந்தத் தேகம் எதனால் வந்தது. பாபத்தினால் வந்தது. அந்தப் பாபத்தை எதனால் செய்தோம். கர சரணாதி அவயங்கள், மனம் இவற்றினால் செய்தோம். சுற்றியுள்ள கயிற்றை அவிழ்க்க வேண்டியிருந்தால், சுற்றின பிரகாரமே திரும்பவும் அவிழ்க்க வேண்டும். அதே மாதிரி அஸத் காரியங்களை ஸத்காரியங்களினாலும், பாவங்களைப் புண்ணியங்களினாலும் தொலைக்க வேண்டும். கர சரணாதி அவயங்கள், மனம் இவற்றினால் செய்த பாவங்களை இந்த அவயங்களினாலேயே தொலைக்க வேண்டும். தானம், தருமம், கர்ம அநுஷ்டானம், ஈசுவர நாமோச்சாரணம், ஆலய தரிசனம் முதலியவையே ஸத்காரியங்கள். பாவத்தைப் போக்குவதற்கு இவையே உபாயம். இவற்றால் பாபத்தைப் போக்கிக் கொண்டு பிறகு ஞான மார்க்கத்தில் ஈடுபட்டு எல்லையில்லாத ஞானமாக ஆனந்தமாக ஆக வேண்டும்.