ஒலியானது ஒளியாக மட்டும்தான் வெளி உலகில் மாறுகிறது என்றில்லை. அது வேறு பல விதங்களில் வெளியே வியாபித்துப் பலவிதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. வேத சப்தங்கள் வெளிச் சூழலில் (atmosphere) பரவிக் கொண்டிருப்பதாலேயே லோகத்தில் பரம மங்களம் உண்டாகும். அப்படிப்பட்ட சக்தி அந்த மந்திரங்களுக்கு இருக்கிறது. சப்தம் மட்டுமில்லாமல், அதன் ஸ்வரத்திற்கும் சக்தி உண்டு. ஒரு ஒலியை எப்படிச் சொன்னாலும் பலன் தந்துவிடாது. சிலவற்றை உயர்த்த வேண்டும். சிலவற்றைத் தாழ்த்த வேண்டும். சிலவற்றைச் சமமாக சொல்ல வேண்டும். அப்போது தான் பலன் கிடைக்கும். வேதத்தைப் இப்படிமூன்று வித ஸ்வரங்களில் சொன்னாலே பலிதமாகும். இவற்றை உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம் என்று சொல்வார்கள். சப்தம்- ஸ்வரம் இரண்டுமாகச் சேர்ந்து பிரபஞ்ச சக்திகளை நமக்கு அநுகூலமாக்கித் தருகின்றன.
சரி, வேத மந்திரங்களின் சக்தியை நம்புகிறோம். ஆனால் இதற்கு ஏன் தனி ஜாதி வேண்டும். என்றால் பல காரணம் உண்டு. முதலில் வேதத்தை எழுதிப் படிக்கக் கூடாது. காதால் கேட்டுக்கேட்டு வாயால் உருப்போட்டுத் தான் மனப்பாடம் பண்ண வேண்டும். அப்புறம், இம்மாதிரி தான் கற்றுக் கொண்டதை அடுத்த சந்ததிக்கு வாயால் சொல்லிக் தரவேண்டும். வேறு காரியம், வேறு தொழில் என்று வைத்துக் கொண்டால் இது முடியாது. இது அத்தனை காலம், அத்தநை பொழுது தேவையில்லாதிருக்கிற பெரிய சமாச்சாரம். வேதம் மட்டுமில்லை. மற்ற சாஸ்திரங்கள், கலைகள் எல்லாவற்றையுமே ரக்ஷித்து அந்தந்தத் தொழிலாகக் கொண்ட பிற ஜாதியாறுக்கு போதிக்க வேண்டியது பிராம்மணின் தொழில். சமுதாயத்தின் அறிவை, பண்பாட்டைக் வளர்க்கிற இந்தப் பொறுப்பும் அவனுக்கு இருக்கிறது.
யுத்த சாஸ்திரமாகிய தனுர் வேதம் உள்பட எல்லாவற்றையும் அவன் கற்று, அந்தந்தத் தொழிலைப் பாரம்பரியமாகப் பெற்றிருப்பவர்களுக்கு போதிக்க வேண்டும். இப்படி சகல தொழில்களும் இவனுக்குத் தெரிந்திருந்தும் கூட இவன் அவற்றில் எதையும் தானே செய்து அதனால் ஜீவனோபாயத்துக்கு வழி பண்ணிக் கொள்ளக் கூடாது என்பதே சாஸ்திரம். இவன் அவற்றைப் பிறருக்குத் தான் உபதேசிக்க வேண்டும். தானே செய்யக் கூடாது என்பது விதி. எத்தனை லாபம் தருகிற தொழிலானாலும், சௌகரியமான தொழிலானாலும் இவன் அவற்றைச் செய்யக்கூடாது. வேத அத்யயனமும் (தான் படிப்பது ஒதுவது) அத்யாபனமும் (பிறருக்கு படிப்பிப்பது, ஒதுவிப்பது) தான் இவனுடைய தொழில். மந்திர சித்திக்கு வேண்டிய மகா கடுமையான விதிகளை, விரதங்களை உபவாசங்களை அநுசரித்துக் கொண்டு இவன் ஜீவனை ரக்ஷித்துக் கொள்கிற அளவுக்கு மட்டுமே ஆஹார விஹாரங்களைச் சுருக்கிக்கொண்டு குடிசையில் தான் வாழ வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லியிருக்கிறது. இவன் வேறு தொழில் செய்து பணம் சம்பாதித்து, இந்திரிய சுகங்களில் விழக்கூடாது. பணம் சம்பாதிக்கிற லட்சியம் இவனுக்கு இருக்கக்கூடாது. பரம தியாகியாக லோக க்ஷேமாந்தமாக, வேத ரக்ஷணம், கர்மாநுஷ்டானங்கள் செய்துகொண்டே காலம் கழிக்க வேண்டும். இவன் பட்டினி கிடந்து சாகாமல் மற்றவர்கள் இவனை ரக்ஷிக்க வேண்டும். அத்யாவசியமாக உயிர் வாழ்வதற்கு என்ன அவசியமோ, அவற்றை இவனுக்குத் தந்து காப்பாற்றவேண்டும். யக்ஞாதிகளுக்கு வேண்டிய திரவியங்கள் இவனுக்குத் தட்டில்லாமல் கிடைப்பதற்கு வசதி செய்து தரவேண்டும்.
மற்ற தொழில்களில் சம்பளம் கொடுக்கிறோம். ஒரு பண்டத்தை வாங்கினால் அதற்கு விலை கொடுக்கிறோம். அந்தந்தத் தொழில்களால், பண்டங்களால், நமக்கு ஒரு சௌகரியம் கிடைப்பதால் இப்படிச் செய்கிறோம். அதே போல் சமூகம் முழுவதற்கும் மந்திர சப்தங்களாலும் யக்ஞ கர்மா நுஷ்டானங்களாலும் க்ஷேமம் ஏற்படுத்துகிறவர்களுக்கும் பிரதியாக, அவர்கலுடைய, ஜீவனோ பாயத்துக்கானதைச் செய்யத் தானே வேண்டும். இதிலே சாஸ்திரங்கள், பிராம்மணனுக்கு அரண்மனைக் கட்டிக்கொடு பவுன் பவுனாக வாரிக்கொடு என்று சொல்லவில்லை. யக்ஞங்களில் திரவிய லோபம் இல்லாமலிருக்க அவனுக்கு வேண்டிய செல்வத்தையும் தர வேண்டியதாயிருக்கும். ஆனால் அவனுடைய தனி வாழ்க்கையில் துளிக்கூட ஆடம்பரமே இருக்கக்கூடாது. அவன் இந்திரியங்களை வாட வாட வைத்து, அதனால் கிடைக்கிற மந்திர ஸித்தியால் தான் லோக க்ஷேமத்தை உண்டு பண்ண வேண்டும்.
நடுநடுவே வேதத்தை எழுதிப் படிக்காமல், கேட்டுத்தீதான் பாடம் பண்ண வேண்டும் என்றேனல்லவா? இதற்க்குக் காரணம் சொல்கிறேன். வேதங்களின் சப்தம் லோகத்தில் இருக்க வேண்டியது முக்கியமாதலால் அது எழுத்தில் புஸ்தகமாக இருக்க வேண்டியதில்லை. இருக்கக்கூடாது. அது புஸ்தகமாக வந்துவிட்டதோ, அப்புறம் அதை மனப்பாடம் பண்ணி தினமும் ஒதுகிற காரியம் போயே போய்விடும். இதில் கொஞ்சம்கூட சந்தேகம் இல்லை. விஷயம் தான் புஸ்தகத்தில் இருக்கிறதே. அவசியமேற்படுகிற போது அதைப் பார்த்துக் கொண்டால் போச்சு. பொழுதைச் செலவழித்து மனப்பாடம் பண்ணு வானேன் என்கிற அசிரத்தை வந்து விடும்.
வேதங்களை மட்டும் புஸ்தகத்தில் எழுதி வைத்துக் கற்றுக் கொடுக்கலாம் என்று வைத்திருந்தார்களோ, அதற்கும் இதே கதிதான் உண்டாகியிருக்கும். வேத சப்தங்கள் லோகத்தில் இருந்துகொண்டு, சமஸ்த ஜீவராசிகளுக்கு க்ஷேமத்தைக் கொடுப்பதற்கு இடமே இல்லாமல் போயிருக்கும். எழுதி வைத்துவிட்டால் அசிரத்தை வந்துவிடும் என்று நம் முன்னோர்கள் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். வேதத்தை எழுதிப் படிப்பவன் (லிகித பாடகன்) அதமன் என்று வைத்தார்கள்.
தமிழிலோ வேதத்துக்கு எழுதாக் கிளவி என்றே பெயர். ஸம்ஸ்கிருதத்தில் வேதத்துக்கு ஸ்ருதி என்று ஒரு பெயர். ஸ்ருதி என்றாலும் காதால் கேட்கப்பட்டவேண்டியது, அதாவது எழுத்தில் படிக்கக்கூடாதது என்றே அர்த்தம். வாயால் சொல்லி, காதால் கேட்டு மனப்பாடம் பண்ணுவது என்பதால்தான் இது பகுதி நேர (part-time) வேலையில்லாமல் முழு நேர (whole-time) வேலையாயிற்று. ஒருத்தர் பாதம் பாதமாக சொல்லிக் கொடுப்பதும், சிஷ்யர்கள் ஒவ்வொரு பாதத்தையும் இரண்டு முறை ஸந்தை சொல்லுவதுமாக, வேத சப்தமானது சூழல் முழுதும் நிரம்பப் பரவி வந்தது. இப்படி எத்தனையோ ஆயிரம் தலைமுறைகள் பெரிய சமுத்திரமாக விரிந்து கிடக்கிற வேத சாகைகளை வாய்மொழியாகவே வாழ வைத்து இந்த நூற்றாண்டு ஆரம்பம் வரை கொண்டு வந்துவிட்டார்கள். இந்த லக்ஷம் காலப் பயிரை, நமக்கு பகவதாக்ஞையாக வந்த கடமையை, நாம் நாசம் செய்துவிட்டால் அதை விடப் பாபம் வேறில்லை.
வேதம் போய்விட்டால், அதற்கப்புறம் பிராம்மணன் என்று தனி ஜாதியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. வேத ரக்ஷணத்தைச் செய்துகொண்டு, ஸத்வ குணத்தோடு படாடோபமில்லாமல் பிராம்மணன் இருந்து கொண்டிருந்த வரையில், மற்றவர்கள் இவனால் சமூகத்துக்குப் பெரிய பிரயோஜனம் இருக்கிறது என்று கண்டார்கள். இவனிடம் நிறைந்த அன்பும், மரியாதையும், விசுவாசத்தையும் காட்டி வந்தார்கள். இன்று உள்ள மாதிரி துர்பிக்ஷமும் வியாதிகளும் இல்லாமல் அப்போதெல்லாம் சமூகம் சௌக்கியமாகவே இருந்தது என்றால், அதற்குக் காரணம் வேத சப்தமும் யக்ஞாதி கர்மாக்களும் தான் என்பதை மற்ற ஜனங்கள் உணர்த்திருந்தார்கள்.
இப்படி ஒரு சமூகப் பிரயோஜனம் இவனுடைய கர்மாவிலிருந்து கிடைத்ததோடு மட்டுமில்லாமல், இன்னொரு பெரிய பிரயோஜனம் இவனுடைய வாழ்க்கையின் உதாரணத்திலேயே (personal example) அவர்களுக்கு உண்டாயிற்று. ஆசைகளைக் குறைத்து, சாந்தர்களாக, சகல ஜீவராசிகளிடமும் தயையோடு, ஸதா பகவத் ஸ்மரனையோடு, தங்களுக்கு ஒரு லாபமும் தராமலிருந்தும், கர்மாக்களை ஏகப்பட்ட நியமங்களோடு அநுஷ்டிக்கிற தியாக சீலர்களாக, இப்படி ஒரு ஜாதி இருக்கிறதைப் பார்த்துப் பார்த்தே, மற்றவர்களுக்கு இப்படிப்பட்ட பண்புகளிலும், ஆத்ம குணங்களுக்கும் ஸ்வபாவமாக இருந்த ஈடுபாடு அதிக மாயிற்று. தங்களால் முடிந்த அளவில், தங்கள் தொழில் இடம் கொடுக்கிற அளவில், அவர்களும் பல நியமங்களை, விரத உபவாஸங்களை மேற்கொண்டார்கள். பிராம்மணன் மற்ற ஜாதிக்காரர்களை எழும்பவொட்டாமல் அமுக்கி வைத்தான் என்றால் அது முழுத் தப்பு. தன் personal example ஆல் இவன் மற்றவர்களும் தாங்களாகவே எழும்பி உயர்வை அடையச் செய்ய வேண்டும் என்பது தான் சாஸ்திரம் இவனுக்கு அமைத்துக் தந்திருக்கிற வாழ்க்கை முறை.
வேதத்தை மற்றவர்கள் அத்யயனம் செய்யக்கூடாது என்று வைத்தால், அவர்களை இவன் அழுத்தி வைத்து விட்டான் என்று நினைப்பது சுத்தப் பிசுகு. வேத ரக்ஷணம் ஒரு (life – time) ஆயுட்கால தொழிலானதைச் சொன்னேன். எந்தத் தொழிலையுமே அந்தப் பரம்பரையில் வந்தவன் மட்டுமே அநுஷ்டிக்க வேண்டும். இல்லாவிட்டால், போட்டி பொறாமை வரும் என்பது தானே விதி. வேத ரக்ஷணம் ஒரு தொழில் ஆனபின் இதில் இன்னொருவரை விட்டால் தொழிலாக பங்கீட்டில் குளறுபடியும் கோளாறுகளும் தானே உண்டாகும். இதனால் சமூகப் சீரமைப்பு குலையத் தானே செய்யும். அந்தந்தத் தொழிலுக்கும் உயர்த்தி தான். தன் தொழிலைவிட வேத ரக்ஷணம் உயர்ந்தது என்று ஏன் இன்னொருவன் நினைத்து இதற்கு வரவேண்டும். மற்றவர்கள் வேதத்தை அத்யயனம் தான் செய்யக் கூடாதே தவிர, அதிலுள்ள தத்துவங்களைத் தவிர, அதிலுள்ள தத்துவங்களைத் தெரிந்து கொள்வதில் ஒரு தடையுமில்லை. ஆத்மாபிவிருத்திக்கு வேண்டியது இது தான். லோகக்ஷேமத்துக்கு வேண்டிய வேத சப்த ரக்ஷணத்தை ஒரு தொழிலாக வைத்துக் கொண்டு, சிலர் மட்டுமே இருந்தால் போதும். ஆத்மாபிவிருக்கிக்கான அதிலுள்ள அபிப்பிராயங்களை சகலரும் தெரிந்து கொள்ளலாம்.
அப்பர் ஸ்வாமிகள், நம்மாழிவார் போன்ற பிராம்மணரல்லாதாரின் பாடல்களில் வேத வேதாந்த தத்துவங்கள் நிறைய இருப்பதைப் பார்க்கவில்லையா. பிராம்மணர்கள் ஞானம், பக்தி இவற்றை ஏகபோக்கியம் (monopolise) பண்ணிக் கொண்டு மற்றவர்களை கீழே அமுக்கி வைத்திருந்தால் ஒரு அப்பர் ஒரு நம்மாழ்வார் மட்டுமில்லை. இன்னும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முக்கால்வாசிப் பேரும், ஆழ்வார்களில் பலரும் தோன்றியிருக்க முடியுமா. சகல ஜாதியிலிருந்தும் நாயன்மார்கள் தோன்றியிருக்கிறார்கள். தாயுமானவர், பட்டினத்தார் மாதிரி ஞானிகளை எங்கே பார்க்க முடியும். ஸமீபத்திலேயே ராமலிங்க ஸ்வாமிகள் இருந்திருக்கிறார்கள். பக்தியிலும் ஞானத்திலும் இப்படி பிராம்மணர்களும் ஸ்தோத்திரம் செய்கிற மாதிரி மற்ற வர்கத்தார் உயர்வாக மட்டுமில்லை. சிவாஜி போன்று பெரிய சாம்ராஜ்யத்தையே ஸ்தாபித்து வேத தர்மத்துக்குப் புத்துயிர் ஊட்டிய ராஜாதி ராஜர்கள் நாலாம் வர்ணத்திலிருந்தே தோன்றியிருக்கிறார்கள். எனவே அமுக்கி வைப்பது. சுரண்டுவது (exploitation) என்பதெல்லாம் புதிதாகக் கட்டிவிட்ட கதை தான். பிசகே இருந்திருக்காது என்று நான் சொல்லவில்லை. ஆனால் தப்பிதங்கள் நடப்பது எதிலுமே சகஜம் தான். பொதுவாக பிராம்மணன் சமூகநலனுக்காக நல்ல காரியங்களைச் செய்து கொண்டு, நல்லவனாக வாழ்ந்து, மற்றவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக (guide) இருந்தால் தான் இத்தனை மதிப்புடன் வாழ வைத்திருக்கிறார்கள். அந்தப் பிரயோஜனம் இவனால் இல்லை என்றவுடன் வெளியேறு என்கிறார்கள். ஒரு நோக்கம் இல்லாமல், வெறுமே மற்றவர்களுக்குப் போட்டியாக இவனும் பணத்தைத் தேடிப் பறத்து கொண்டிருக்கிறான் என்றால், அப்புறம் இவன் பிராம்மணன் என்று தனியாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இப்படி பர்பஸ் இல்லாமல் பிராம்மண ஜாதி இருந்தால், அதை மற்றவர்கள் அழிப்பதற்கு முன்னால் நானே அழித்துவிட வேண்டும் போலிருக்கிறது. பிரயோஜனம் (utility) இல்லாமல் ஒரு வஸ்துவும் இருப்பதற்கு உரிமையில்லை. லோகத்துக்குப் பயன் இல்லாவிடில் பிராம்மண ஜாதி வேண்டியது இல்லை தான்.
இப்போதிருக்கிற பிராம்மணன், தனக்கு ஏதோ தனி மரியாதை எதிர்பார்த்தானானால், இவனைத் தூஷிக்கத்தான் வேண்டும். ஆனால், துவேஷமும் தூஷணையும் நியாயமானதாக இருக்க வேண்டும். இவன் தன் தர்மத்தை விட்டதற்காகத் தூஷிக்க வேண்டுமே ஒழிய வேத தர்மமே தப்பு என்று அந்த பெரிய மூலதனத்தையே தூஷிக்கக்கூடாது. அந்த தர்மத்தை பிராம்மணன் மேற்கொண்டு நடத்துவதற்குத் தான், மற்றவர்கள் சகாயம் செய்ய வேண்டும். லோகம் நன்றாக இருக்க வேண்டுமானால், வேத ரக்ஷணம் நடக்கத்தான் வேண்டும்.
இப்போதும்கூட பொது ஜனங்கள் எல்லோருக்கும் உள்ளூர வைதிக சிரத்தையும் ஆஸ்திக்ய புத்தியும் போகவே இல்லை. அது போகவே முடியாது என்பது தான் என் அபிப்பிராயம். துவேஷப் பிரச்சாரம் இருக்கிறதே என்றால் அது ஏதோ அரசியல் காரணத்துக்காக நடக்கிறது. உள்ளுக்குள் பார்த்தால், வேதம், அதன் சடங்குகள் வைதிக ஆச்சாரங்கள் எல்லாவற்றிலும் மக்களுக்குப் பயபக்தியும் விசுவாசமும் இருக்கவே செய்கின்றன. பிராம்மணன் மட்டும் கொஞ்சம் நேராகிவிட்டால் போதும். எல்லாத் துவேஷமும் போயேப் போய்விடும்.
மற்றவர்கள் தன்னை ஆதரிக்கவேண்டும் என்று எதிர்பார்க்காமல் இவன் ஸ்வதர்ம உணர்ச்சியுடன் சாகவும் துணிய வேண்டும் என்று சொன்னேன். ஆனால் வாஸ்தவத்தில் இவன் எதிர்பார்க்காவிட்டாலும் அப்படிப்பட்ட து£ரத்தத்திற்கு இவனை நம் சமூகம் ஒரு நாளும் விடாது என்பது தான் என் நம்பிக்கை. விட்டாலும் பரவாயில்லை என்று இவன் நம் தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதே என் கட்சி. மற்றவர்கள் எப்படி நினைத்தாலும் சரி. உபசரித்தாலும் சரி, கரித்துக் கொட்டினாலும் சரி, அவர்கள் நலனுக்காக இவன் வேதத்தைக் காப்பாற்றத் தான் வேண்டும். இத்தனை நாள் பிராம்மண சமூகத்திற்குச் சொல்கிறேனே இது மற்ற சமுதாயத்தாரையும் உத்தேசித்துத் தான். அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தர்மங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவர்களும் தெரிந்து கொள்ள ஆசையோடு இருக்கிறார்கள். விளக்கிச் சொன்னால் நம்பிக்கையோடு எடுத்துக் கொண்டு நன்றாக அநுஷ்டிப்பார்கள். ஆனால், அவர்களுக்கு உபதேசிப்பதற்கு முன் எனக்கு நானே அதற்கான யோக்கிதையை நிச்சயப்படுத்திக் கொள்ள நினைக்கிறேன்.
பிராமண சமூகம் எனக்கு விசேஷமாக கட்டுப்பட்டிருக்கிறது என்று பொதுவாக ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. மடத்தில் வைதிக அநுஷ்டானங்கள் நிறைய இருப்பதால் வேதத்துக்காக என்றே ஏற்பட்ட ஜாதியிடம் எனக்கு நிறைய பாத்தியதை இருப்பதாக – தப்பாகவோ, சரியாகவோ ஒரு அபிப்பிராயம் பொதுவாக உண்டாக்கியிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் மற்றவர்களுக்கு தர்மோபதேசம் செய்ய ஆரம்பித்தால், அவர்கள் அன்போடு பணிவோடு சிரத்தையோடு அதை எடுத்துக் கொள்வார்கள் என்றே வைத்துக் கொண்டாலும்கூட, இன்னொரு கேள்வியும் அவர்களுடைய மனசுக்குள் தோன்றலாம். இவரை ரொம்பவும் ஆசிரயிக்கப்பட்ட பிராம்மணர்கள் ஒருவிதத்திலும் திருத்தக் காணோமே. இதே நிலையில் நமக்கு உபதேசம் பண்ண வந்து விட்டாரே என்று தோன்றலாம். வாஸ்தவத்தில் எனக்கு எல்லோரும் ஒன்று தான். பார்க்கப்போனால், பரம ஸ்ரேயஸ்கரமான வேதத்தை விட்டுவிட்ட பிராம்மணனிடம் தான் எனக்கு அதிர்ப்தி ஜாஸ்தி. இருந்தாலும், லோக அபிப்பிராயப்படி பிராம்மணர்கள் ஏதோ எனக்கு விசேஷமாக கட்டுப்பட்டிருப்பதாக ஏற்பட்டிருப்பதால், அவர்களிடம் வேத ரக்ஷணத்தை மறுபடி முழு மூச்சோடு ஆரம்பியுங்கள் என்று ஒயாமல் ஒழியாமல் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இதில் கொஞ்சத்தில் கொஞ்சமாவது பிராம்மணர்களான நீங்கள் நடைமுறைக்குக் கொண்டு வந்தால் தான், மற்றவர்களிடம் அவரவருக்கான தர்மங்களைச் சொல்வதற்கு எனக்கு வாய் இருக்கும்.
நல்லவைகளைத் தெரிந்து கொண்டு செய்வதற்கு ஆசையாக இருக்கிற மற்ற சமுதாயத்திற்கு நான் எனக்குத் தெரிந்த தர்மங்களைச் சொல்வதற்கு பிராம்மணர்கள்தான் சகாயம் செய்ய வேண்டும் – கூடிய மட்டும் நான் சொல்கிற வேத ரக்ஷணம் கர்மாநுஷ்டானம் இவற்றை அநுசரிப்பதால். சகல ஜனங்களும் ஜீவ ஜந்துக்கள் அத்தனையும் க்ஷேமமாக இருக்க வேண்டும். பரஸ்பர சகாயத்துக்காகவே ஜனங்கள் அவரவருக்கு ஏற்பட்ட தர்மங்களை உயர்வு தாழ்வு எண்ணமே யில்லாமல் பின்பற்ற வேண்டும். எல்லோருக்கும் தனதான்ய ஸம்ருத்தி, ஆத்ம க்ஷேமம் கிடைப்பதற்காகச் சிலரிடம் வேத சப்தம் இருந்தே ஆக வேண்டும். மற்ற தொழில்கள் பாரம்பரியமாக வருவதில் நன்மையிருப்பதாகவே வைத்துக் கொள்வோம். ஆனால் இந்த வேர ரக்ஷணம் என்று தனி ஜீவிய காலத் தொழில் ஒன்று எதற்காக இருக்க வேண்டும். என்ற கேள்வியை ஆரம்பத்தில் எழுப்பினேன். இப்போது முடிக்கிறபோது, மற்ற எந்தத் தொழில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவை ஒன்றுக்கொன்று கலந்தாலும் கலக்காவிட்டாலும் வேதரக்ஷணம் என்பதுதான் நிச்சயமாக ஒரு தனித் தொழிலாக இருக்க வேண்டும் என்று ஏற்பட்டிருக்கிறது.
*****
ஒவ்வொருவரும் மாஸா மாஸம் தங்கள் ஜன்ம நட்க்ஷத்திரத்தன்று என்னை நினைத்துக் கொண்டு (நான் தானே கொடுக்கச் சொல்லிக் கேட்கிறேன்) ஒரு ரூபாயை ஒரு உண்டியில் போட்டு விட வேண்டும். ஒரு வருஷம் ஆனதும் இந்த 12 ரூபாயை வேத ரக்ஷண நிதிக்கு அநுப்பிவிட வேண்டும். இப்படி அனுப்புகிறவர்களுக்கு இங்கே மடத்தில் நடக்கிற பூஜைப் பிரசாதம் விபூதி, குங்குமம், மந்திராக்ஷதை மாஸா மாஸம் அவர்கள் ஜன்ம நக்ஷத்திரத் தன்று அனுப்பி வைக்கப்படும். வருஷந் தோரும் இந்த தர்மத்தைப் புதுப்பித்துக் கொண்டிருந்தால், சந்திரமெனலீசுவரப் பிரசாதமும் நிற்காமல் அகத்தைத் தேடி வந்து கொண்டிருக்கும். எத்தனையோ செலவு செய்கிறீர்கள். வரிகள் (Tax) கொடுக்கிறீர்கள். இது நான் போட்டிருக்கிற டாக்ஸ். மாஸம் ஒரு ரூபாய் எனக்காகக் கொடுக்க வேண்டும். எல்லோரும் அப்படிச் செய்தால் பல துளி பெறு வெள்ளம் என்று வேத ரக்ஷணத்துக்கும் பெரிய பலம் கிடைக்கும்.
இங்கே நம் தேசத்தில் இப்படி கொஞ்சம்பேர் இருந்தால், லோகம் முழுவதும் எப்படி க்ஷேமமடையும் என்றால், பவர் ஹவுஸ் இருக்கிறது. அங்கே நாலு பேர்தான் வேலை செய்கிறார்கள். ஆனால் ஊர் முழுக்கப் பிரகாசமாய் விடுகிறது. அந்த நாலுபேர் வேலை செய்யாவிட்டால் ஊரே இருட்டாகி விடுகிறது. இப்படியே லோக மங்கள தீபமான வேதத்தைத் தூக்கிப் பிடிக்க இங்கே கொஞ்சம்பேர் இருந்தால் போதுமானது. இதற்கான விதை முதலை எப்படியாவது காப்பாற்றித் தந்து விட வேண்டும் என்கிற காரியத்துக்கே வந்திருக்கிறேன்.
சாஸ்திர விஷயங்களில் கொஞ்சம் கொஞ்சம் விட்டுக் கொடுப்பது என்று வந்தால்கூடத் கடைசியில் வெறும் லெனகிக செனகரியத்தை மட்டும் அநுசரிக்கும் படித்தான் ஏற்பட்டுவிடும். சிலர் நல்லெண்ணத்துடனேயே என்னிடம் வந்து, தர்ம சாஸ்திரங்களை ரிஷிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். நீங்களும் ரிஷி மாதிரி இருக்கிறீர்கள். அதனால் காலத்துக்குத் தகுந்தபடி சாஸ்திரங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கேட்கிறார்கள். வயலில் களை எடுப்பதுபோல இப்போது கால நிலையை அநுசரித்துச் சில ஆசார தர்மங்களை எடுத்துவிட வேண்டும் என்பது இவர்கள் அபிப்ராயம். இப்போது சிலவற்றைகளை என்று நினைத்து நான் எடுத்தால், இன்னும் கொஞ்ச காலத்துக்குப் பின் இன்னொருத்தர் வேறு சில ஆச்சாரங்களைக் களை எடுக்கலாம். இப்படியே போய்க் கொண்டிருந்தால், எது பயிர், எது களை என்கிற வியவஸ்தை இல்லாமல் வயல் முழுவதுமே போய்விடும்.
ரிஷிகள் ஏதோ சொந்த அபிப்ராயத்தில் சொன்னார்கள் என்பதற்காக தர்ம சாஸ்திரங்களை நாம் அநுசரிக்கவில்லை என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். என்றாக்கும் மாறாமல் சாசுவதமாக இருக்கும் ஈசுவர ஆக்ஞையான வேதத்தை அநுசரித்தே ரிஷிகள் இந்த விதிகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதால் தான் இவற்றைப் பின்பற்றுகிறோம். அதை உள்ளபடி ரக்ஷிக்கத்தான் பிரயத்தணப்பட வேண்டுமேயன்றி, மாறுதல் செய்வதற்கு என்று அதிகாரம் இல்லை. சாஸ்திரப் பிரகாரம் நடப்பது இந்தக் காலத்தில் சாத்தியமே இல்லை என்று நினைத்து விடக்கூடாது. வியாபார வேகத்தில் வளர்ந்து விட்ட லௌகிக நாகரீகத்தை விட்டுவிட்டு, தேவைகளைக் குறைத்துக் கொண்டால் யாறுமே இப்படி ஆச்சாரங்களை விட்டுப் பணத்துக்காகப் பறக்காத போது பகவத் ஸ்மரணத்துக்கு நிறைய அவகாசம் கிடைக்கும். வாழ்க்கையில் நிம்மதியும், திருப்தியும், சௌக்கியமும் தன்னால் உண்டாகும்.
கர்ம அநுஷ்டானங்களைப் செய்யப் பண வசதி வேண்டியதேயில்லை. ஆடம்பரமாக செலவு செய்து பூஜை செய்யவேண்டும் என்பதில்லை. காய்ந்த துளசி தளமும், வில்வ பாத்திரமும் பூஜைக்கும் போதும். நாம் சாப்பிடுகிற அன்னத்தையே நைவேத்தியம் என்று காட்டினால் போதும். விவாகமும் சாஸ்திர அநுஷ்டானம் தானே. அதற்கு ஏகமாகச் செலவாகிறதே என்று கேட்கலாம். ஆனால் இப்போது நடக்கிற ஆடம்பரம் எதுவுமே சாஸ்திர சம்பந்தமாக விவாகத்துக்குத் தேவையில்லை. குறிப்பாக, இப்போது விவகாரங்களில் மிகப் பெரிய செலவாக உள்ள வரதக்ஷிணைக்குச் சாஸ்திர சம்பந்தமே இல்லை. சாஸ்திர சம்பந்தமான கர்மங்களுக்குப் பணம் முக்கியமாக இருந்தால், பணக்காரர்களுக்கு மட்டும்தான் நம் மதம் உரிதானது என்றாகி விடும். உண்மையில் அப்படி இல்லவேயில்லை. அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நாலு வாழ்க்கைப் பயன்களில் இன்பத்தை மட்டும் தேடி அதற்காகப் பொருளுக்கு அலைந்து கொண்டிருக்கிறோம். இதை மாற்றி வீட்டுக்காக (மோக்ஷத்துக்காக) அறத்தின் (தர்மம்) மூலம் பாடுபட வேண்டும். வாழ்க்கையை எளியதாக்கிக் கொண்டால், பொருளுக்காக அலைய வேண்டாம். அறங்களை அப்போது பின்பற்ற முடியும். அறத்தின் பயனாக்கிக் கிடைக்கிற பேரானந்த வீட்டையும் பெற முடியும்.