ஸந்தியாவந்தனம்

வேலை என்றால் அதற்குக் கணக்குண்டு. தகுந்த பலனும் உண்டு. இது கர்மமார்க்கம். செய்தால் நல்ல ஸந்தோஷம் உண்டாவது ஒரு வகை. செய்யாமற் போனால் உபத்திரவம் உண்டாவது ஒரு வகை. நித்ய கர்மாவைச் செய்யாவிட்டால் உபத்திரவம் உண்டாகும். ஸந்தியாவந்தனம் பண்ணு என்றால், இக்காலத்தில், “செய்யமாட்டேன். அந்தப் பலன் எனக்கு வேண்டாம்.” என்று சொல்லுகிறார்கள். அவர்களுக்கு மீமாம்ஸையால் ஸுலபமாகப் பதில் சொல்லிவிடலாம். ஸந்தியாவந்தனம் என்பது பலனுக்காகப் பண்ணும் காம்யமான (ஷீஜீtவீஷீஸீணீறீ) கர்மா இல்லை; அதைப் பண்ணாமற் போனால் உபத்திரவம் உண்டாகும் என்று மீமாம்ஸை சொல்கிறது! பண்ணினால் பலன் என்பது நியாயம். பண்ணாவிட்டால் உபத்திரவம் என்பது என்ன நியாயம்? ஸந்தியாவந்தனம் பண்ணாவிட்டால் தோஷம் என்கிறார்கள் .பண்ணினால் ஐச்வரியம் வரும் என்று சொல்ல மாட்டார்கள். செய்யா விட்டால் உபத்திரவம் என்னும் வகையிற் சேர்ந்தது அது.

கோவிலில் அர்ச்சனை, அபிஷேகம், அன்னதானம் முதலியவை பண்ணினால் விசேஷ பலன் உண்டு என்று சொல்லுகிறார்கள். அவை “கரணே அப்யுதயம்” என்னும் வகையை சேர்ந்தவை. இது நியாயமாகப் படுகிறது .”அகரணே ப்ரத்யவாயம்” என்பது நியாயமா? லோகத்தில் அதற்கு திருஷ்டாந்தம் உண்டா? உண்டு.

நாம் பிச்சைக்காரனுக்கு அரிசி போடுகிறோம். ஏதாவது ஸொசைட்டிக்கு நன்கொடை கேட்டால் நூறு, இருநூறு ரூபாய் கொடுக்கிறோம். பரோபகாரம் பண்ணினால் புண்ணியம் உண்டென்ற பண்ணுகிறோம். சில சமயங்களில் உபகாரம் பண்ண வேண்டாமென்று தோன்றுகிறது. புண்ணியம் வேண்டாமென்று நினைக்கிறோம். அப்பொழுது முடியாது என்று சொல்லி விடுகிறோம். கடமையைச் செய்ய வேண்டியது தான்; அதற்கு மேல் தானம், தர்மம் இவை போன்றவைகளைச் செய்ய முடியாவிட்டால் பெரிய தோஷம் என்று சொல்ல முடியாது தான்;

ஒருவனிடம் நாம் 500 ரூபாய் கைமாற்று வாங்கி இருந்தோம். அதைத் திருப்பித் தராமல் அவனிடம், “உனக்கு 500 ரூபாய் கொடுக்கிற புண்ணியம் எனக்கு வேண்டாம் “என்றால் அவன் விடுவானா? ‘நான் புண்ணியத்திற்கு வரவில்லை. கொடுத்ததைக் கேட்கத் தான் வந்தேன். ‘என்று சொல்லுவான். கேஸ் போட்டு நமக்கு அதிகப்படி தண்டனையும் வாங்கிக் கொடுப்பான். இது “அகரணேப்ரத்யவாய ஜனக” த்தைச் சேர்ந்தது. அதைப் போலத்தான் ஸந்தியாவந்தனமும். ஸந்தியாவந்தனம் பண்ணமாட்டேன் என்பது வாங்கின கடனைத் திருப்பித் தர முடியாது என்கிறதைப் போல. தமிழில் ஸந்தியாவந்தனத்தைக் காலைக் கடன், மாலைக் கடன் என்றே சொல்வார்கள். அந்தப் பெயர்கள் மிகவும் அழகாய் இருக்கின்றன. ‘கடன் வாங்கின திருஷ்டாந்தம் சொன்னால் போதாது. யார் எங்கே கடன் வாங்கினார்கள்? ஸந்தியாவந்தனம் யாரிடம் கடன் வாங்கப்பட்டது? என்று சிலர் கேட்கலாம்.

வேதத்தில் “தைத்திரீய ஸம்ஹிதை” யில் “பிராம்மணன் பிறக்கும் பொழுதே மூன்று கடனோடு பிறந்திருக்கிறான். ரிஷிருணம், தேவருணம், பிதிர்ருணம் என்று மூன்று கடன்கள் உண்டு” என்று சொல்லியிருக்கிறது. “வேதம் ஒதுவதால் ரிஷிக்கடனும், யாகமும் பூஜையும் ஸந்தியா வந்தனாதி உபாஸனைகளும் பண்ணுவதால் தேவர் கடனும், தர்ப்பணம் சிரார்த்தம் இவற்றால் பிதிர்கடனும் தீர்கின்றன” என்கிறது. கடன் வாங்கினது நமக்குத் தெரியாது. தெரியாததை வேதம் சொல்லியிருக்கிறது. அதைக் கொண்டு நாம் யுக்தி பண்ணிப் பார்க்க வேண்டும். நம்பிக்கையுள்ளவர்களுக்கு அதை அநுஸரித்த யுக்தி தோன்றும். இல்லாதவர்களுக்கு விபரீத யுக்தி தோன்றும்.
நல்ல கதி வரவேண்டுமென்று நாம் முன் ஜன்மத்தில் செய்த ஸத்காரியம் என்பதான மனுப் போட்டிருக்கிறோம். அதற்கேற்றபடி கர்மாக்களைச் செய்ய வேண்டுமென்று உத்தரவாய் இந்த (நிகழ்) ஜன்மா லபித்திருக்கிறது. உத்தரவு பண்ணியவர் ஒருவர் கண்ணுக்குத் தெரியாமலே ஸர்வ ஸாட்சியாக இருக்கிறார். இது வேதாந்தியின் மதம். எந்த வேலைக்காக ‘மனு’ப்போட்டோமோ அதுவே நமக்குப் பலனைத் தருகிறது என்பது மீமாம்ஸகர்கள் மதம். கர்ம பலன் தானே நடக்கும் (கிutஷீனீணீtவீநீ) என்பது இவர்களுடைய மதம். ஆகக்கூடி, இரண்டு அபிப்ராயங்களின் படியும் கர்மாவுக்கேற்ற ஜன்மம் நமக்கு வந்திருக்கிறது. இதற்கேற்ற கர்மாக்களை நாம் செய்ய வேண்டும். செய்யாவிட்டால் உபத்திரவம் உண்டாகும்.

எங்கெங்கே பிறந்தோமோ அதற்கேற்பக் கர்மாக்களைச் செய்ய வேண்டும். லோகத்தில் ஆசார அநுஷ்டானங்கள் முறையாக இருக்க வேண்டும். வேதார்த்தங்களைத் தான் தெரிந்து கொண்டு, மற்றவர்கள் துக்கப்பட்டால் சாந்தப்படுத்திக் கொண்டு, அவர்களுடைய தொழில்களைப் போதித்துக் கொண்டு இருக்க வேண்டியது பிராம்மணன் கடமை. இம்மாதிரியே ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்கு ஏற்பட்ட கர்மாக்களைச் செய்ய வேண்டும். வாணியன் எண்ணைய் ஆட்டித் தரவேண்டும். பிராம்மணன் கண்டவற்றைத் தின்னாமல் தேஹம், மனஸ், ஆத்மா என்பவைகளில் பரிசுத்தனாக இருந்து கொண்டு பரமாத்மத் தியானம் பண்ணிக் கொண்டு இருக்க வேண்டும். மற்றவர்களையும் தியானம் பண்ணிக் கொண்டு இருக்கும்படிச் சொல்ல வேண்டும். அதற்குத் தான் அவரவருக்கும் மானியம் ஏற்பட்டிருந்தது.

பழைய காலத்தில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவனுடைய தொழிலைச் செய்வதற்காக மானியம் கொடுத்திருந்தார்கள். அந்தத் தொழிலை நிறுத்திவிட்டால் லௌகிகத்திலும் உபத்திரவம் உண்டாகும். அவனுடைய மானியத்தை பிடுங்கி மற்றொருவனுக்குக் கொடுத்து விடுவார்கள். இந்தக் காலத்தில் அந்த நிலத்துக்கு வரி போட்டு விடுவார்கள். ஆகவே சாஸ்திரப்படி அவரவருக்கான கர்மாக்களைப் பண்ணாதவர்களுக்குப் பாபம் உண்டாவதோடு லௌகிக ஸௌகர்யங்களும் இல்லாமற் போய்விடும். அந்தக் கர்மாவைச் செய்வதனால் தான் மரியாதை உண்டாயிற்று. எதற்காக, எப்படி நம்முடைய ஜன்மம் ஏற்பட்டதோ அதை அப்படியே பண்ணாமல் இருப்பதனால் தான் இப்போது நம்முடைய தேசத்தில் இந்த மாதிரி கஷ்டமான நிலைமை ஏற்பட்டுவிட்டது. அந்த அந்தத் தொழிலைச் செய்து கொண்டு வந்தால், அதனால் மற்றவர்களுக்கும் லௌகிக ஸௌகர்யங்கள் ஏற்படும். அந்த நிலை மாறிவிட்டதனால் தான் இப்பொழுது தரித்திர நிலை வந்துவிட்டது.

“அகரணே ப்ரத்யவாய ஜனக” மாகிய நித்ய கர்மாக்கள் ஸந்தியாவந்தனம் முதலியவை. நித்ய கர்மாவைப் பண்ணாவிட்டால் பாபம் உண்டாகிறது. பண்ணினால் பாபம் இல்லாமையாகிய ஒரு லாபம் உண்டாகிறது. அதற்கு மேல், க்ஷேமம் உண்டாகிறது. கடனைத் தவணைப் பிரகாரம் கொடுத்தால் கடன் போய்விடுகிறதாகிய ஒரு லாபமும், அதற்கு மேல் “நாணயமானவன்” என்ற நல்ல பெயரும் உண்டாகும். அந்த நாணயத்தால் வியாபார விருத்தி ஏற்படுகிறது. அதுபோல நித்திய கர்மாவினால் பாபம் இல்லாமற் போவது ஒன்று; சிரேயஸ் உண்டாவது இரண்டு; ஆக இரண்டு லாபங்கள் உண்டாகின்றன. ‘அகரணே ப்ரத்யவாய ஜநகம், கரணே அப்யுதயம்’ என்னும் இந்த இரண்டும் நமக்கும் (வேதாந்திக்களுக்கும்) உண்டு. நாமும் இவைகளை ஒத்துக் கொள்கிறோம். இந்த மாதிரி உள்ள கர்மாக்களை எப்பொழுதும் பண்ணிக் கொண்டிருக்க வேண்டும்.

அக்னிஹோத்ராதி ச்ரௌத கர்மாக்களையும், ஔபாஸனம் முதலான ஸ்மார்த்த கர்மாக்களையும் தவறாமல் செய்துவரவேண்டும். “ஜீவனோடிருக்கிற வரையில் அக்னி ஹோத்திரம் செய்ய வேண்டும் என்ற வேதம் சொல்லுகிறது. அதைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து கொண்டிருப்பதே போதும்” என்பது மீமாம்ஸகர் மதம். ஆனால் ஸந்நியாஸாசிரமத்தில் அக்னிஹோத்ரம் முதலான கர்மாக்கள் இல்லை. இப்படிக் கர்மாக்களை விட்டால் அது பெரிய தோஷம் என்பார்கள். உபநிஷத் “கர்மாவைச் செய்து கொண்டு நூறுவருஷம் இருக்க வேண்டும்” என்கிறது. (ஈசாவாஸ்யோபநிஷத்: 2வதுமந்திரம்) தைத்திரீய ப்ராஹ்மணம், “அக்னிஹோத்ர நெருப்பை அணைத்தால் வீரஹத்தி தோஷம் வருகிறது” என்று சொல்லுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s