Sahasra Gayathri Homam

காயத்ரி மந்த்ரம்

(ஆன்மீகப் பெரியோர்களின் உரைகளிலிருந்து தழுவியது)

காயத்ரி மந்திரம் என்றால் என்ன ?

காயத்ரி மந்திரம் குரு மந்திரம், மகாமந்திரம் என்று போற்றப்படுவது. ராஜரிஷி விசுவாமித்திரரால் வழங்கப்பட்ட இது, மந்திரங்களின் தாய் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. கீதையில் கிருஷ்ண பரமாத்மா ‘மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரம்’ என்றே குறிப்பிட்டுள்ளார். மனிதகுலம் முழுமைக்கும் சொந்தமான இந்த மந்திரம், சக்தியைக் குறித்து வியந்து பாடப்பட்டது.

பூர், புவ, ஸுவ எனும் மூன்று லோகங்களையும் படைத்த ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரிய சக்தியை தியானிக்கிறோம். மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை மேம்படுத்தட்டும் என்ற பொருளைக் கொண்டது இந்த மந்திரம். “காயந்தம் த்ராயேத இதி” என்பதன் பொருள் “மந்திரம் ஜபிப்பவரை காக்கும்”. இதை ஜெபிப்பவர்கள் அதிகமான பிராண சக்தியைப் பெற்று ஆயுள் விருத்தி அடைவர் என்கிறது வேதம். இதைச் சொல்வது மட்டுமல்ல, கேட்பதும் அநேக பலன்களைத் தரும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.

காயத்ரீ அல்லாத பல வித மந்திரங்கள் இருக்கின்றன. அவைகளை ஜபம் பண்ணுவதற்கு முன்பு இன்ன இன்ன பலனை உத்தேசித்து பண்ணுகிறேன் என்று சொல்லுகிறோம். காயத்ரி மந்திரத்தினுடைய பலன் சித்த சுத்தி தான்; மன மாசு அகலுவது தான். மற்ற மந்திரங்களால் உண்டாகிற பலன்களெல்லாம் கடைசியில் சித்த சுத்தி உண்டாக்கத் தான் இருக்கின்றன. அதுவே காயத்ரிக்கு நேரான பலன்; ஒரே பலன்.

திருவள்ளுவர், 34 வது குறளில்
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற
என்று கூறியுள்ளார்.

காயத்ரி ஜபம் ஏன் செய்யவேண்டும் ?

காயத்ரீயில் ஸகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை. காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால் தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும்.

காயத்ரீயை மாத்ரு ரூபமாக (தாய்வடிவமாக) உபாஸிக்க வேண்டும். பகவான் எல்லா ரூபமாக இருந்தாலும் மாதா ரூபமாக வந்தால் ரொம்பவும் ஹிதமாக இருக்கிறது. காயத்ரீயை அப்படிப்பட்ட மாதாவென்று வேதம் சொல்லுகிறது. காயத்ரீ ஜபத்தை விடாமல் செய்வதாலேயே க்ஷேமம் உண்டாகும். தான் ஒன்றைச் செய்யாமலிருப்பதால் தனக்கு மட்டுமே நஷ்டம் என்றால் விட்டுவிடலாம். அதனால் மற்றவர்களுக்கு நஷ்டம் என்றால் அப்படி விட்டுவிட முடியாது. இந்த மந்திர சக்தியைப் பெற்றுத்தர வேண்டியவர்கள் இந்தக் கடமையைப் பண்ணாவிட்டால் அது பரிஹாரமே இல்லாத தோஷமாகும்.

மனு நீதியில் (11.225) கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது
सावित्रीं च जपेन्नित्यं पवित्राणि च शक्तितः ।
सर्वेष्वेव व्रतेष्वेवं प्रायश्चित्तार्थमादृतः ॥
ஸாவித்ரீம்  ச ஜபேன்னித்யம் பவித்ராணி ச ஶக்தித꞉ .
ஸர்வேஷ்வேவ வ்ரதேஷ்வேவம் ப்ராயஶ்சித்தார்த² மாத்³ருத꞉

தினமும் காயத்ரீ மந்திரத்தை முடிந்த வரை அதிகபட்சமாக ஜபிக்க வேண்டும். இந்த விதிமுறையை எல்லா பிராயச்சித்த விரதங்களிலும் அனுஷ்டிக்க வேண்டும்.

ஏன் ஒவ்வொரு நாளும் மந்திரம் ஓதவேண்டும் ?

உலக நீதி ஆசிரியர், உலகநாதர் “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்” என்று கட்டளையிட்டுள்ளார். வேதமும், “வேதோ நித்யம் அதீயதாம் : தத் உதிதம் கர்மஸு அநுஷ்டீயதாம்” – தினமும் வேதம் ஒதுங்கள் ; அதில் சொல்லியிருக்கிற யக்ஞாதி அநுஷ்டானங்களை நன்றாகப் பண்ணுங்கள்” என்று சொன்னது. சித்த சுத்தியை உத்தேசித்துத் தான், வேத கர்மாக்களை செய்யவேண்டும்.

ஜ்வரம் வந்தால் அதற்கு மருந்து அவசியம்; அது போல ஆத்மாவுக்கு வந்திருக்கிற பந்தம் என்ற ஜ்வரம் போக காயத்ரீ மருந்து அவசியமானது. அதை ஒரு நாளும் விடக் கூடாது. மருந்தைவிட இது தான் முக்கியமானது.

மந்திரத்தின் பலன்

வேதாத்யயனம் ஒரு மந்திர யோகம். ஒவ்வொரு நாடி அசைவதினால் சித்தத்திற்கு ஒவ்வொரு விதமான விகாரங்கள் ஏற்படுகிறது. சில நாடி அசைவுகளால் சோம்பல் விகாரங்களும், சில நாடிகளால் கோப விகாரங்களும் உண்டாகின்றன. இதை மாற்றிச் சொன்னால், சோம்பல் / கோப விகாரம் ஏற்படும்போது சில நாடிகளில் அசைவு உண்டாகின்றன. இவை பிரத்யக்ஷமாகவே அநுபவத்தில் காணப்படுகின்றன. சாந்தம் ஏற்படும் போது முகத்தில் ஒரு களை உண்டாகிறது. அந்தக் களை, சில நாடிகள், குளிர்ந்ததன் பலனேயாம். இப்படியே காமம், குரோதம் ஒவ்வொன்றும், ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்றபடி முகத்திலேயே பிரதிபலிக்கின்றன. நாடி சலனம் தான் இந்த அடையாளங்களை உண்டாக்குவது. இவ்விதம் மனோவிகாரங்களால் நாடிகளில் சில விகாரங்கள் ஏற்படுவதால், அந்த நாடிகளை வசப்படுத்திவிட்டால், காமக் குரோதங்களையோ, சாந்தத்தையோ நமது இஷ்டப்படி வரவழைத்துக் கொள்ளலாம். அதற்கு வெளிப் பொருள்கள் தேவையில்லை.

இப்படி நாடிகளை ஸ்வாதீனப்படுத்த மந்திரயோகம் ஒரு மார்க்கம். ஒரு எழுத்தை நாம் உச்சரிக்கும் போது நமது நாக்கு, உதடு, மேல்வாய் ,கீழ்வாய், கண்டம் முதலியவைகளின் இடைவெளி வழியாக ப்ராணவாயு வெளிப்படுகிறது. அப்பொழுது தான் அக்ஷர த்வனி உண்டாகிறது. அந்த அக்ஷரத்வனிக்கு காரணமாக எந்தெந்த உறுப்புகளில் ப்ராணவாயு ஸஞ்சரிக்கிறதோ அந்தந்த இடம் ஸம்பந்தப்படும் நாடிகளில் சலனம் ஏற்படுகிது. நாடிகளில் சலனத்தினால் மனஸில் எந்த விதமான விருத்திகள் ஏற்பட்டு இகலோக க்ஷேமமும் பரலோக க்ஷேமமாகிய மோக்ஷம் முதலிய புண்யமும் ஏற்படவேண்டுமோ, அதற்கு அநுகுணமாக உள்ள உச்சாரணங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு, வேறு விதமான உச்சாரணங்களை விலக்கி அமைந்தனவே வேத மந்திரங்கள். மந்திரத்துக்கு Definition (லக்ஷணம்) “மனனாத் த்ராயதே” என்று சொல்லியிருக்கிறது. அதாவது திரும்பத் திரும்ப மனனம் செய்து உருப்போடுவதால் காப்பாற்றுவதே மந்திரம். அவைகளின் ஆவ்ருத்தியால் எந்தெந்த நாடிகளில் திருப்பித் திருப்பி சலனம் ஏற்பட்டு ஆத்மக்ஷேமம் கிட்டுமோ, அந்த க்ஷேமத்தைத் தானும் அடைந்து, தன் மந்திர சக்தியால் உலகத் தோரும் க்ஷேமம் அடையச் செய்வதே வேதியரின் பிறவிக் கடமை.

வேத மந்திர சப்தம் அதைச் சொல்கிறவனுக்குள்ளே நல்ல நாடி சலனங்களை உண்டு பண்ணுவதோடு, கேட்கிறவர்களுக்கும் அப்படிப்பட்ட சலனத்தை உண்டுபண்ணுவது. அதன் சப்தம் நம்முடைய நாடிகளிலும், வெளி லோகத்திலும் (atmosphere) ஏற்படுத்தும் சலனங்களால் ஆத்ம க்ஷேமமும் லோக க்ஷேமமும் உண்டாகிறது. லோக க்ஷேமம் என்றால் மநுஷ்யர்களின் க்ஷேமம் மட்டுமில்லை. ஸகல பிராணி வர்க்கங்களும் நன்றாக இருக்கவேண்டும் என்று வேதம் சொல்கிறது.

மந்திரப் பலன் மனிதருக்கு மட்டும் தானா ?

“தே த்விபாத் சதுஷ்பாத்” – இருகால் பிராணி, நாலுகால் பிராணி எல்லாம் க்ஷேமமாக இருக்க வேதம் பிரார்த்திருக்கிறது. புல், புண்டு, விருக்ஷம், மலை, நதி ஆகிய எல்லாவற்றின் நன்மையையும் கோருகிறது. இந்த ஸமஸ்தப் பிராணிகளின் க்ஷேமம் வேதத்தின் சப்த விசேஷத்தாலேயே நடந்து விடுகிறது. சப்த சலனமான மந்திரங்களுக்கெல்லாம் அர்த்தம் இருக்க வேண்டும் என்பதே இல்லை.

நடைமுறை வாழ்க்கையில் பார்த்தாலும், வார்த்தையோ அர்த்தமோ இல்லாமலே ஒரு ராகத்தை ஆலாபனம் பண்ணிக் கேட்கிறபோது, அதன் வெறும் சப்தம் மட்டுமே நமக்கு ஆனந்தம், துக்கம் முதலான உணர்ச்சிகளைத் தருகிறது. வாத்ய ஸங்கீதம் என்பதாலேயே வார்த்தையோ அர்த்தமோ முக்கியமில்லை என்று தெரிகிறது. வேதத்தில் என்ன விசேஷம் என்றால் அதன் சப்தத்துக்கே தனியாக சக்தி இருப்பது மட்டுமின்றி, வார்த்தைகளாகவும் அதற்கு மிக உயர்ந்த அர்த்தம் இருக்கிறது.

மந்திர மகிமையில் பட்ட மரம் கூடத் துளிர்க்கும் என்பதைத் திருவானைக்காவில் பிரத்தியட்சமாகப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். ஜம்பு என்கிற வெண் நாவல் மரம் தான் அங்கே ஸ்தல விருட்சம். அதனாலேயே அந்த ஊருக்கு ஜம்புகேஸ்வரம் என்று பெயர் இருக்கிறது. அங்கிருந்தே ஸ்தல விருட்சம் பட்டுப்போய் ஒரே ஒரு பட்டையாகத் தான் ஏதோ கொஞ்சம் உயிரை வைத்துக்கொண்டிருந்த சமயத்தில், இந்த மரத்துக்கு ஏகாதச ருத்ராபிஷேகம் பண்ணினார்கள். மந்திர சக்தியால் அப்போழுதே அது தளிர்த்தது.

வருண ஜபம் செய்தார்கள். மழை பெய்தது என்று படிக்கிறோம். இன்னோரிடத்தில் வருண ஜபம் பண்ணியும் மழை பெய்யாமலிருக்கலாம். அதனால், மந்திரத்தையே சக்தியில்லாததென்று தள்ளிவிடக்கூடாது. மருந்துகளைச் சாப்பிட்டு உடம்பு சரியாகிறவர்களும் இருக்கிறார்கள். குணமாகாமல் இறக்கிறவர்களும் இருக்கிறார்கள். அதனால் மருந்தே தப்பு என்போமா. மருந்து பலிக்காவிட்டால் வியாதி முற்றியிருக்க வேண்டும் என்கிறோம். அதுபோல் கர்மா ரொம்பப் பலமாக இருந்தால், எந்த மந்திரமும் பலன் தராமல் போகலாம். இன்னொரு காரணமும் உண்டு. பத்தியம் தப்பினால் மருந்து பலிக்காது. அந்த மாதிரி மந்திர சக்தி ஸித்திப்பதற்குச் சில நியமங்களைப் பத்தியம் போல் வைத்திருக்கிறது. இந்த நியமங்களில் தப்பு வந்தால் மந்திரங்களிலிருந்து உத்தேச பலன் கிடைக்காது.

விஞ்ஞான சோதனை

இந்திய விஞ்ஞானியான ஜெகதீஷ் சந்திர போஸ், லண்டனில் பல விஞ்ஞான அறிஞர்களின் முன்னிலையில் தன்னுடைய “க்ரெஸ்கோக்ராப்’ (crescograph) கருவியை சோதனைப்படுத்தி, தாவரங்களும் உணரக்கூடியவை. மனிதர்களைப் போல அவற்றிற்கும் உணர்வுகள் உண்டு என்பதை நிரூபித்தார். வெப்பம், குளிர், ஒலி, ஒளி ஆகிய புறத்தூண்டுதல்கள் மனிதர்களையும், பிற விலங்கினங்களையும் எவ்வாறு பாதிக்கின்றனவோ அவ்வாறே தாவரங்களையும் பாதிக்கின்றன. அதனால், சப்தத்துக்கு சிருஷ்டி சக்தி உண்டு என்பதை நிரூபித்தார்.

ஒரு உண்மைச் சம்பவம்

இந்தியாவில் 1984ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி யூனியன் கார்பைட் தொழிற்சாலையிலிருந்து கசிந்த விஷ வாயு அந்த டிசம்பர் இரவில் ஏராளமானோரை பலி வாங்கியது.

ஆனால் சோஹன்லால் குஷ்வாஹா என்பவர் தன் வீட்டில் வாந்தி எடுக்க ஆரம்பித்த போது அவர் மனைவி உடனடியாக அக்னி ஹோத்ரம் செய்யச் சொன்னார். சோஹன்லால் அக்னிஹோத்ரம் செய்யவே அவர் வாந்தி நின்றது. விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. இருபதே நிமிடங்களில் சுற்றுப்புறம் முழுவதும் விஷம் அகன்றது!

எம்.எல்.ரதோர் என்பவர் ஐந்து வருடங்களாக அக்னிஹோத்ரம் செய்து வருபவர். அவரும் அதே நள்ளிரவில் எழுந்த ஓலக்குரல்களையும் அழுகுரல்களையும் கேட்டு தொழிற்சாலையிலிருந்து கசிந்த நச்சு வாயுவினால் ஏராளமானோர் இறந்ததைக் கேட்டார். உடனே த்ரயம்பக் யக்ஞத்தை ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம். அவர் வீட்டில் விஷப் புகை நுழையவில்லை; அனைத்து குடும்ப உறுப்பினர்களும் எந்த விதமான விஷ பாதிப்புமின்றி நலமுற இருந்தனர்.

எவ்வளவு முறை ஜபிக்க வேண்டும் ?

தேவீ பாகவத புராணத்தில் ( 9.26) கீழ்க் கண்டவாறு கூறப்பட்டுள்ளது
 ஒரு முறை காயத்ரி ஜபித்தால் ஒரு தினம் செய்த பாபத்தை
அழிக்கும்.
 10 ஜபித்தால் இரவு பகல் செய்த பாபத்தை அழிக்கும் .
 100 ஜபித்தால் 1 மாத பாபத்தை அழிக்கும் .
 1000 ஜபித்தால் 1 வருட பாபத்தை அழிக்கும் .
 1 லட்சம் ஜபித்தால் இந்த ஜன்ம பாபத்தை அழிக்கும் .
 10 லட்சம் ஜபித்தால் முன் ஜன்ம பாபத்தை அழிக்கும் .
 100 லட்சம் ஜபித்தால் எல்லா ஜன்ம பாபாத்தை அழிக்கும் .
 மேலே சொன்னதை 10 மடங்கு ஜபித்தால் பிறப்பு இறப்பை அழிக்கும் .

ஸஹஸ்ர பரமா தேவீ சத மத்யா தசாவரா’ என்றை (தைத்திரீய அரண்யக வாக்குப்) படி ஆயிரம் ஆவிருத்தி ஜபிப்பது உத்தமம்;

கோவிலில் ஏன் ஜபம் செய்ய வேண்டும் ?

பிருஹத் யோகி யாக்யவல்க்ய ஸ்ம்ருதியில் (7.143) கீழ்க் கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

“வீட்டில் ஜபிப்பது ஒரு மடங்கு பலனும், நதிக்கரையிலோ/குளக்கரையிலோ ஜபிப்பது இரு மடங்கு பலனும், பசு மாட்டு தொழுவத்தில் ஜபிப்பது பத்து மடங்கு பலனும், யாகசாலையில் ஜபிப்பது நூறு மடங்கு பலனும், புண்ணிய க்ஷேத்திரத்தில் ஜபிப்பது ஆயிரம் மடங்கு பலனும், கோவில் சன்னதியில் ஜபிப்பது கோடானு கோடி மடங்கு பலன் தரக்கூடியது.”

தமிழ் இலக்கியங்களிலிருந்து சில குறிப்புகள்

திருவள்ளுவர், 264 வது குறளில்

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்

பரிமேலழகர் உரை:

ஒன்னார்த் தெறலும் – அறத்திற்குப் பகையாய் அழிவு செய்தாரைக் கெடுத்தலும், உவந்தாரை ஆக்கலும் – அதனை உவந்தாரை உயர்த்தலும் ஆகிய இவ்விரண்டையும் எண்ணின் தவத்தான் வரும் – தவம் செய்வார் நினைப்பராயின், அவர் தவ வலியான் அவை அவர்க்கு உளவாம்.

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, மறைமொழி தானே மந்திர மென்ப

என தொல்காப்பியர் கூறுகிறார்.

திருமூலர் (பத்தாம் திருமுறை 24வது பாடலில்) கூறுகிறார்

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே

(பரவெளியைப் பற்றி நிற்கின்ற வேதப் பொருளை உள்ளவாறு உணர்ந்து சொன்னால் அதுவே, `உடம்பைப் பற்றி நிற்கின்ற உயிருணர்வில் நிலைத்து நிற்கும் மந்திரம்` எனப்படும். அம்மந்திரத்தை இடையறாது உணர உணரப் பேரின்பம் கிடைப்பதாம். அவ்வாற்றால் நான்பெற்ற இன்பத்தை, இவ்வுலகமும் பெறுவதாக.)

பிரார்த்தனை

உலக நன்மை, அமைதி மற்றும் இயற்கைச் சீற்றங்களிலிருந்து நம்மை காப்பதற்காக, ஆன்மிக அன்பர்கள் அனைவரும் மனப்பூர்வமாக இறைவனை பிரார்த்திப்போமாக.

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி
************************************************************************************