ஹிந்து மதம் – வைதிக மதம் – பெயரில்லாத மதம்

மதம் / மதபோதகரின் யோக்கியதாம்சங்கள்.

இப்போது உலக நாடுகள் எல்லாவற்றிலும் உள்ள ஏராளமான தத்துவ ஆராய்ச்சியாளர்களும் ஆத்ம சாதகர்களும் அத்வைதத்தையே பரம தத்துவமாக அங்கீகரிக்கிறார்கள். என்னை அத்வைத மதகுரு என்று சொல்கிறார்கள். ஆனபடியால் அத்வைத சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வளவு பேர் இருப்பதற்குக் காரணம் அதன் சித்தார்த்தத்தில் உள்ள சிறப்புதான் என்று நான் சொல்வேன் என்று எதிர்பார்ப்பீர்கள்.

இப்படியாக ஒரு சமயத்தை, சித்தாந்தத்தை ஏற்கிற சகல ஜனங்களும் அதன் தத்துவங்களை ஆராய்ந்து பார்த்து அதனால் தான் அதில் சேருகிறார்களா ? அறிவாளிகள் வேண்டுமானால் சித்தாந்தங்களை எடை போட்டு அதில் சேரலாம். ஆனால், ஒரு மதத்திலுள்ள ஏராளமான பொது ஜனங்களைப் பற்றி இப்படிச் சொல்லலாமா ?. நான் அப்படிச் சொல்ல மாட்டேன். பொது ஜனங்கள் தத்துவத்துக்காகவே ஒரு மதத்தை ஏற்கிறார்கள் என்றால், அவர்களிடம் உங்கள் மத சித்தாந்தங்களைச் சொல்லுங்கள் என்று கேட்கும் போது அவர்களுக்குச் சொல்லத் தெரியவேண்டும். மற்ற சித்தாந்தங்களை விட இவை சிரேஷ்டமானவை என்பதற்கு அவர்களுக்குக் காரணம் சொல்லத் தெரிய வேண்டும். ஆனால், வாஸ்தவத்தில் எந்த மதத்திலும் இருக்கிற ஏராளமான பொது ஜனங்களுக்கு அந்தந்த மதத்தைப் பற்றிய கொள்கைகள் இப்படி விவாதிக்கிற அளவுக்கு நுணுக்கமாகத் தெரியாது. நம்முடைய ஹிந்து மதத்தில் உள்ளவர்களுக்கோ அடியோடு தெரியவே தெரியாது. எனவே, மதமும் அதில் உள்ள தத்துவத்தினால் மட்டும் வளருவதில்லை என்பது தான் என் அபிப்ராயம். சாமான்ய ஜனங்களுக்குத் தத்துவத்தைப் பற்றிக் கவலை இல்லை.

நல்ல குணம், நல்ல பழக்கம் உள்ளவராக, கருனையும் சாந்தமும் உள்ளவராக ஒரு மகான் வந்தால் அவரைப் பார்த்த மாத்திரத்தில் ஜனங்களுக்கு நம்பிக்கை உண்டாகிறது. அவர் எந்த தத்துவத்தைச் சொன்னாலும் அது நல்லதாகத் தான் இருக்கும் என்ற திடமான நம்பிக்கையுடன் அவரது மதத்தில் ஜனங்கள் சேருகிறார்கள்.

சமீபத்தில் சாந்தத்தோடும் தன்னலமில்லாத தியாகத் தோடும் ஒரு காந்தி வந்தார். உடனே அவர் சொன்னதையே காந்தீயம் காந்தீயம் என்று ஒரு மதமாக கோடான கோடி ஜனங்கள் ஏற்றுக் கொண்டார்கள். தத்துவச் சிறப்பால் தான் ஒரு சித்தாந்தம் வளருகிறது என்றால் இன்றைக்கும் அந்த காந்தீயம் உச்சத்தில் இருக்க வேண்டும். ஆனால், நடைமுறை எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.
பலாத்காரம் அல்லது பணபலம் இவற்றைக் கைக்கொள்ளாத எல்லா மதங்களும் அவற்றின் குருமார்கள், போதகர்கள், பிரசாரகர்கள் ஆகியோரது குணத்தைக் கொண்டுதான் வளர்ந்திருக்கின்றன. ஒரு மதத்தின் பிரதிநிதியிடத்தில் வெளி வேஷம் மட்டும் இருந்தால் போதாது. துவேஷம் கூடாது. நல்லொழுக்கம் இருக்க வேண்டும். நல்ல தபஸ் இருக்க வேண்டும். சாந்தமும் கருணையும் நிரம்பியிருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களுடைய குண விசேஷத்தாலேயே அவர்களைத் தேடி வருகிறவர்களின் தோஷங்களும் போய்விட வேண்டும். இப்படிப் பட்டவர்களை உண்டு பண்ணுவதே இப்போதும் நம் மதம் தழைக்க வழி. எதிர்பிரச்சாரம் எதுவும் வேண்டாம். மதநெறிகளை உயிரோடு வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிற பிரதிநிதிகள் தான் வேண்டும். இவர்களால் தான் இதுவரை யுக யுகாந்தரமாக நம் மதம் உயிரோடிருந்து வந்திருக்கிறது. இனிமேலும் இப்படிப்பட்டவர்களால் தான் அது உயிர் வாழ முடியும்.

ஒருவன் சண்டை போட்டு மதம் மாறுகிறேன் என்றால் எதிர்த்துப் படை திரட்டிச் சண்டை போட என்னால் ஆகாது. அல்லது கோடி கோடியாய் செலவழித்து ஆஸ்பத்திரி, ஸ்கூல் வைத்து ஒருவன் மதமாற்றம் செய்கிறான் என்றால், அதைப் போலப் கோடிக் கணக்கில் செலவழிக்க எனக்கு ஐவேஜி இல்லை. இது இரண்டும் இருப்பதாகவே வைத்துக் கொண்டாலும் கூட, இதனால் செய்யும் மாறுதல் உண்மையானதும் இல்லை. அது நிலைத்தும் நிற்காது. ஏனென்றால், நம்மை விடவும் பலிஷ்டர்களாகவோ, நம்மை விடவும் பண வசதி உள்ளவர்களாகவோ இன்னொரு கூட்டம் வந்தால், அது நம் பலத்தாலும் பணத்தாலும் செய்ததை எல்லாம் அழித்துவிட்டு, தானே ஜயித்துவிடும். ஆனபடியால் இந்த வெளிச் சக்திகளை நம்பிக் கொண்டிராமல், நம் ஆத்ம சக்தியை நம்பி உள்ளுக்குள்ளே நம்மை உயர்த்திக் கொள்வதே நாம் செய்ய வேண்டியது. அப்போது அந்தப் பிரசாரமும், சண்டையும், வசியமும் இல்லாமலே நம் மதம் தழைத்து வாழும்.

இப்போது இதர தேசங்களில் புத்திமான்கள் ஏராளமாக, அத்வைதம், அத்வைதம் என்று அதைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டிருப்பதற்கு அதன் சித்தாந்தச் சிறப்பு காரணமாக இருக்கலாம். அவர்கள் ஆராய்ச்சி பண்ணி, ஆத்ம விசாரம் பண்ணி நம் வேதாந்தத்துக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், இது பொது ஜனங்கள் எல்லாருக்கும் பொருந்தாத விஷயம். அவர்கள் பிடித்துக் கொள்ள ஒர் உத்தம ஜீவன் தான் வேண்டும். இப்படி ஒருத்தன் சாந்தமும், கருனையும், ஞானமும், தியாகமும் நிரம்பியவனாக நம்மிடையில் வரவேண்டும் என்பதற்காகவே இத்தனை உபன்யாசங்களும் பண்ணுகிறேன். உங்களிலேயே ஒருவர் அப்படித் தோன்றிவிட்டால் அதைவிடப் பெரிய பயன் எதுவும் இல்லை.

வைதிக மதம் / பெயரில்லாத மதம்

இப்போது ஹிந்து மதம் என்று ஒன்றைச் சொல்கிறோமே, இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. ஹிந்து என்றால் அன்பு என்று அர்த்தம். ஹிம்சையை தூஷிப்பவன் ஹிந்தூ என்று சிலர் சொல்கிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும், ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது. ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர் தான். மேல்நாட்டுக்காரர்கள் ஸிந்து நதியாக கடந்தே நம் பாரத நாட்டுக்கு வரவேண்டியிருக்கிறதல்லவா? ஆனபடியால் ஸிந்துவை இந்து என்றும், அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும், அதன் மதத்தை இந்து என்றும் குறிப்பிட்டார்கள். ஒரு தேசத்துக்குப் பக்கத்திலுள்ள சீமையின் பெயராலேயே அதை அடுத்துள்ள சீமைகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதுண்டு. இந்த ரீதியில் தான் ஸிந்துப் பிரதேசத்தைக் கண்ட அந்நியர்களும் அதையடுத்து வந்த பாரத தேசம் முழுவதையும் ஹிந்து தேசமாக்கிவிட்டனர்.

ஆனால் ஹிந்து என்பது நமது பூர்வீகப் பெயர் அல்ல. வைதீக மதம். ஸநாதன தர்மம் என்றெல்லாம் சொல்கிறோமே, அவை தான் பெயரா என்றால் அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்கும்போது இந்த மதத்துக்கு எந்தப் பெயருமே குறிப்பிடவில்லை.

இதைப் பற்றி நினைத்த போது எனக்கு ரொம்பவும் குறையாக இருந்தது. ஒரு நாள் யாரோ ராமு வந்திருக்கிறான் என்று என்னிடம் சொன்னார்கள். உடனே நான் ஏதோ நினைவில் எந்த ராமு என்று கேட்டேன். எந்த ராமுவா ? அப்படி யானால் ராமுக்களில் பல ராமுக்கள் இருக்கிறார்களா ? எனறு எதிர்க் கேள்வி கேட்டார்கள். அப்போது தான் எனக்குப் பழைய ஞாபகத்தில் இப்படிக் கேட்டுவிட்டோம் என்று தெரிந்தது. எங்கள் ஊரில் ராமு என்ற பெயரில் நாலு பேர் இருந்தார்கள். எனவே, அவர்களுக்குள் வித்தியாசம் தெரிந்து கொள்வதற்காகக் கறுப்பு ராமு, சிவப்பு ராமு, நெட்டை ராமு, குட்டை ராமு என்று சொல்வது பழக்கம். ஒரே ராமு இருக்கிற இடத்தில் எந்த அடைமொழியும் போட வேண்டியதில்லை.

நம் மதத்திற்கு ஏன் பெயரில்லை என்பது. உடனே புரிந்து விட்டது. பல்வேறு மதங்கள் இருக்கிறபோது தான் ஒன்றிருந்து இன்னொன்றுக்கு வித்தியாசம் தெரிவதற்காகப் பெயர் கொடுக்க வேண்டும். ஒரே மதம் தான் இருந்தது என்றால் அதற்குப் பெயர் எதற்கு?

நமது மதத்தைத் தவிர மற்ற மதங்கள் ஒரு மஹா புருஷரின் பெயரில் ஏற்பட்டவை. அந்தப் பெரியவருக்கு முன் அந்த மதம் இல்லை. புத்த மதம் என்றால் அது கௌதம புத்தரால் ஸ்தாபிக்கப்பட்டது. எனவே அவருக்கு முன் அது இல்லை என்கிறது. ஜைன மதம் என்றால் அது மஹாவீரர் எனப்படும் ஜீனரால் ஸ்தாபிக்கப்பட்டது. கிருஸ்து மதம் என்றால் கிறிஸ்டினால் (இயேசு கிறிஸ்து) ஸ்தாபிக்கப்பட்டது. என்றிப்படி ஒவ்வொரு மதமும் ஒரு பெரியவரால் உண்டாக்கப்பட்டது என்று தெரிகிறது. அந்தப் பெரியவர் இதை ஏற்படுத்தினார் என்னும்போதே அவருக்கு முன்னால் இது இல்லை என்று தெரிகிறது. இவ்வளவு மதங்களும் உண்டாவதற்கு முன்பே நம் மதம் இருந்திருக்கிறது. இந்த ஒரு மதமே உலகமெல்லாம் பரவி இருந்தது. இதைத் தவிர வேறு மதம் இல்லாததால் இதற்குப் பெயர் குறிப்பிட வேண்டிய அவசியமே இருக்கவில்லை. இதை அறிந்தவுடன் முன்பு எனக்கு இருந்த குறை மறைந்தது. அதோடு இந்த மதத்தை பற்றிக் கௌரவ புத்தியும் உண்டாயிற்று.

சரி, இந்த மதம் தான் ஆதி மதம் என்றே இருக்கட்டும். அந்த ஆதி காலத்தில் இதை ஸ்தாபித்தவர் யார் என்ற கேள்வி வரும். பெயர் இல்லாத நம் மதத்தை யார் ஸ்தாபித்தார் என்று பார்த்தால், எத்தனை ஆராய்ச்சி செய்து பார்த்தாலும், அப்படி ஒரு ஸ்தாபகரைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. பிரம்ம சூத்திரம் செய்த வியாசரைச் சொல்லலாமா, கீதை சொன்ன கிருஷ்ண பரமாத்மாவைச் சொல்லலாமா என்றால், அவர்களும் தங்களுக்கு முன்னரே இருக்கிற வேதங்களைப் பற்றிச் சொல்கிறார்கள். சரி, இந்த வேத மந்திரங்களைப் செய்த ரிஷிகளை ஸ்தாபகர்கள் என்று சொல்லலாமா என்று பார்த்தால், அவர்களே நாங்கள் இந்த வேதங்களைச் செய்யவில்லை என்கிறார்கள். பின்னே உங்கள் பேரில் தானே மந்திரங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. ஒவ்வொரு மந்திரத்தையும் உபாசிக்கிறபோது அவற்றுக்கு உங்களில் ஒரு ரிஷியின் பெயரைச் சொல்லித்தானே தலையைத் தொட்டுக் கொள்கிறோம். என்று கேட்டால், அந்த ரிஷிகள் எங்கள் மூலம் தான் இந்த மந்திரங்கள் லோகத்துக்கு வந்தன என்பது வாஸ்தவம். அதனால் எங்களை மந்ரிஷிகளாகச் சொல்லியிருக்கிறது. எங்கள் மூலம் வந்ததே ஒழிய, நாங்களே அவற்றைச் செய்யவில்லை பண்ணவில்லை. நாங்கள் அப்படியே மனம் அடங்கித் தியான நிஷ்டையில் இருக்கிறபோது இந்த மந்திரங்கள் ஆகாயத்தில் எங்கள் முன்னே தெரிந்தன. நாங்கள் அவற்றைக் கண்டவர்கள்தான் (மந்த்ர த்ரஷ்டா) செய்தவர்கள் (மந்த்ர கர்த்தா) அல்ல என்கிறார்கள்.

சகல சப்தங்களும் ஆகாசத்திலேயே பிறக்கின்றன. அவற்றிலிருந்தே த்ருஷ்டி உண்டாயிற்று. இதைத்தான் Space-ல் ஏற்பட்ட Vibration-களால் பிரபஞ்சம் உண்டானதாக ஸயன்ஸில் சொல்லியிருக்கிறார்கள். ரிஷிகள் தங்களது தபோ மகிமையால் இந்த சிருஷ்டியிலிருந்து ஜீவர்களைக் கடைத்தேற்றுகிற சப்தங்களை ஆகாசத்தில் மந்திரங்களாக் கண்டார்கள். ஆனால் அவர்கள் செய்ததல்ல இம்மந்திரங்கள். புருஷர் எவரும் செய்யாத அபௌருஷேயமாக இந்த வேதங்கள் ஆகாச ரூபமாக பரமாத்மாவிலேயே அவரது மூச்சுக் காற்றாக இருந்தவை. அவற்றையே ரிஷி ச்ரேஷ்டர்கள் கண்டு உலகுதக்குத் தந்தார்கள். இப்படித் தெரிந்து கொண்டால் நம் மதத்தின் ஸ்தாபகர் யார் என்பது தெரியவில்லையே என்பதும் ஒரு குறையாக இல்லாமல் அதுவே பெருமைப் படுகிற விஷயமாக இருக்கும். பரமாத்மாவின் சுவாசமாகவே இருக்கப்பட்ட வேதங்களை அனுஷ்டிக்கிற அநாதி மதத்தின் வாரிசுகளாக வந்திருக்கும் மஹா பாக்கியம் நமக்குக் கிட்டியிருப்பது என்று பூரிப்பு அடைவோம்.

Leave a comment