பிராமணன் பற்றிய தப்பபிப்ராயம்

இப்போது ஏற்பட்டிருக்கிற ஒரு பெரிய தப்பபிப்ராயம் என்னவென்றால் சாஸ்திரோக்தமான வர்ணாஸ்ரம தர்மத்தில் பிராமணனுக்குத் தான் ஸௌகர்யம் ஜாஸ்தி, வருமானம் ஜாஸ்தி, சிரமம் குறைவு என்ற எண்ணம். இது சுத்தப் பிசகு.

நம் சாஸ்திரம் பண்ணிக் கொடுத்துள்ள ஏற்பாட்டில் பிராமணன் சரீரத்தால் உழைத்த உழைப்பு ஒரு குடியானவனின் உழைப்புக்குக் குறைச்சலானது அல்ல. பிராமணனின் கர்மாநுஷ்டானங்களைப் பற்றித் தெரியாததால் அவன் மற்றவர்களை பிழிய பிழிய வேலை வாங்கிவிட்டு, தான் ஹாயாக உட்கார்ந்து சாப்பிட்டான் என்று இந்தக் காலத்தில் தவறாக நினைக்கிறார்கள்.

பிராமணனானவன் காலம்பர (காலை) நாலு மணிக்கே முழித்துக் கொண்டு, மழைநாளாலும், பனிநாளானாலும் பச்சைத் தண்ணீரில் ஸ்நானம் செய்யவேண்டும். அதிலிருந்து அவனுக்கு ஒயாக கர்மாநுஷ்டானம் தான். ஸந்தி, பிரம்மயக்ஞம், ஒ£பாசனம், தேவ பூஜை, வைச்வ தேவம், இது தவிர இருப்பத்தியோறு யக்யங்களில் ஏதாவது ஒன்று என்றிப்படி சக்கையாக உழைத்தாக வேண்டும். ஹோம ஜ்வாலையிலும், புகையிலும் நாலு நாள் உட்கார்ந்து பார்த்தால் தெரியும், எத்தனை சிரமம் என்பது. இவனுக்கு எத்தனை வ்ரதாநுஷ்டானங்கள்? உபவாஸம் என்று எத்தனை நாள் வயிற்றைக் காயக் காயப் போட்டாக வேண்டும்? எத்தனை ஸ்நானம்?

இந்த சிரமங்கள் மற்ற ஜாதியினருக்கு இல்லை. ஒரு குடியானவன் விடிந்தெழுந்ததும் வயறு நிறைய ஜில்லென்று பழையது சாப்பிடுகிற மாதிரச் செய்ய பிராமணனுக்கு ரைட் கிடையாது. தன் ரைட்டுக்காகவும் சௌகர்யத்துக்காகவம் பிராம்மணன் தர்ம சாஸ்திரங்களை எழுதி வைத்துக்கொள்ளவே இல்லை. அப்படி இருந்தால் இத்தனை கடுமையான விதிகளை, rigorous discipline-களைத் தனக்கே போட்டுக் கொண்டிருப்பானா? அவன் போஜனம் பண்ணுகிற போது பகல் 1 மணி 2 மணி ஆகிவிடும். (சிராத்தம், யாக தினங்களில் 3 மணி 4 மணி ஆரும்) குடியானவன் இறண்டாந்தரங் கூடச் சாப்பிட்டு விட்டு வயலோரத்தில் ஏதாவது ஒரு மரத்தடியில் கொஞ்சம் ஒய்வு எடுத்துக் கொள்கிற சமயத்தில் தான் பிராம்மணனுக்கு முதல் சாப்பாடே, அதுவும் எப்படிப்பட்ட சாப்பாடு, அந்தக் குடியானவன் சாப்பிடுகிற மாதிரி மிகவும் எளிமையானது தான். குடியானவன் தேக புஷ்டி தருகிற பழையது சாப்பிடலாம். இவன் புது அன்னம் தான் சாப்பிட வேண்டும் என்பது தவிர அதிக வித்தியாசம் இருக்கக் கூடாது.

குடி யானவன் குடிசைக்கும் பிராம்மணன் குடிசைக்கும்மே வித்தியாசம் கிடையாது. இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி நூல் துணி தான். குடியானவனானது நாளைக்கு என்று நாலு காசு மீத்து வைத்துக் கொள்ளலாம். பிராம்மணன் அப்படி வைத்துக் கொள்ளக் கூடாது. பிற்பாடு கொடுக்கலாம் என்று இப்போது கடன் வாங்கி கொஞ்சம் தாட்பூட் செலவு பண்ணக்கூட பிராம்மணனுக்கு ரைட் கிடையாது.

மஹாபாரதத்தில், யக்ஷ ப்ரச்னத்தில், பிராம்மணன் எத்தனை எளிமையாக இருந்தான். அவன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.

பஞ்சமே (அ) ஹனி ஷனி ஷஷ்டே வா சகம் பசதி ஸ்வேக்ருஹே
அந்ணீச (அ)ப்ரவாஸீ ச ஸ வாரிசர மோததே

ஒரு நாளில் பகல் போதை எட்டுப் பங்காக்கினால், அதில் ஐந்தாவது அல்லது ஆறாவது பங்கில் தான் பிராம்மணன் கர்மாநுஷ்டானம் எல்லாம் முடித்துச் சாப்பிடுவான். அதன் முன் எதுவும் கூடாது. இது தான் பஞ்சமே அஹனி ஷஷ்டே வா அந்த வேலையில் கூட என்ன சாப்பாடு. சக்கரைப் பொங்களும் பாதாம் கீருமா. அல்லது தேஹ புஷ்டி தரும் மாம்ஸாதிகளா. இல்லை. சாகம் பசதி என்றால் ஏதோ ஒரு கீரையைப் பிடுங்கி வேக வைத்துத் தின்ன வேண்டும் என்று அர்த்தம். ஏதோ ஒரு முள்ளிக் கீரையோ, பசலைக் கீரையோ, பொன்னாங்கண்ணியோ ஆற்றங்கரையில் யாருக்கும் சொந்தமில்லாமல் முளைத்திருப்பதை மட்டும் சமைத்துச் சாப்பிட வேண்டும்.

பிராம்மணன் நதி தீரத்தில் வசிக்க வேண்டும் என்று வைத்ததற்கு காரணமே அப்போது தான் அவன் அடிக்கடி ஸ்நானம் செய்ய முடியும் என்பது ஒன்று. இன்னொரு காரணம் அங்கே தான் பணம் காசே வைத்துக் கொள்ளக் கூடாத இவன், விலை கொடுக்கலாமா, யாசிக்கலாமா, நாலு கீரையைப் பிடுங்கி வேக வைத்து ஜீவனை ரக்ஷித்துப் கொள்ளலாம் என்பது.

கடன் வாங்கக் கூடாது. கடன் வாங்கலாமென்றால் போக்யங்கள். லக்ஷரிகளில் மனஸ்போகும். அதற்கு இடமே கொடுக்கக்கூடாது. இதுதான் அந்ருணீ என்றது. தரித்திரமும், அபரிக்ரஹமும் (அத்யாவசியத் தேவைக்கு அதிகமாக ஒரு புல்லைக் கூட வைத்துக் கொள்ளாமலிருப்பதும்) தான் பிராம்மண லக்ஷணமானதால், கடனும் வாங்கக் கூடாது என்று இருக்கிறது. இப்போது சர்க்காரிலிருந்து ஆரம்பித்து பெரிய பெரிய தொழிலதிபர்கள் உள்பட எல்லோருக்கும் கடன் தான்.

சாஸ்திரம் சொன்னபடி, கடன் இல்லாமலும், பிறகு ஏவுதலுக்கு ஸலாம் போடாமலும் தன் தர்மத்தைச் செய்து கொண்டு இப்போது யாராவது இருக்கிறார்களா என்றால் அது நரிக்குறவர்கள் தான் என்று தோன்றுகிறது. கடைசீயில் சொன்ன அப்ரவாசம் என்பதற்குத் தன் ஊரைவிட்டுப் போகக்கூடாது என்று அர்த்தம். மனமோ, அவமானமோ, கஷ்டமோ, நஷ்டமோ, நமக்கேற்பட்ட தர்மத்தைச் செய்துகொண்டு ஊரோடு கிடக்க வேண்டும்.

இப்போது இங்கிலாந்தில் ஸெட்டில் ஆகிறோம், அமெரிக்காவில் ஸெட்டில் ஆகிறோம் என்று வெறும் பணத்துக்காக ஆசாரங்களை விட்டுப் பறந்து கொண்டு, இததைப் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கின்றோமே. இதை சாஸ்திரத்தில் ரொம்பவும் நிஷித்தமாக (இழுக்காக)ச் சொல்லியிருக்கிறது. இந்த மாதிரி எல்லா ஜாதியாரும் நன்றாக உழைப்பது. எல்லா ஜாதியாரும் பரம எளிமையாக வாழ்வது என்று ஏற்பட்டு விட்டால் ஜாதித் வேஷமும், ஜாதிகள் போய்விட வேண்டும் என்ற பேச்சும் வரவே வராது. இப்போது ஒரு ஜாதிக்கு ஜாஸ்தி பணம்-சௌகரியமும், இன்னொன்றுக்கு தரித்திரம்- உழைப்பும் வரும்படியாக ஜாதி முறை அமைக்கப்பட்டிருக்கிறது என்ற நினைப்பு ஏற்பட்டிருப்பதால் தான் இந்தச் சீர்திருத்தம் எனப்படுகின்ற அபிப்ராயங்கள் வந்திருக்கின்றன.

எளிமையும் உழைப்பும் தான் திருப்தி தருவது. சித்த சுத்தி தருவது. ஆயிரம் பதினாராயிரம் வருஷங்களாக நம் தேசத்தில் இப்படித்தான் நடந்து வந்திருக்கின்றது. வர்ணாச்ரமத்தைச் சொன்ன சாஸ்திரங்கள் இவற்றையும் வலியுறுத்தியிருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். குணம் அல்லது மனோபாவம் என்பதை வைத்து இக்காலத்திலும் தொழிலைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று சொன்னேன். இப்போது பணம், வசதி இவற்றை மட்டும் பார்த்து வேலை தேடுவதில் தான் அத்தனை கஷ்டமும் ஏற்பட்டிருக்கிறது. எல்லோரும் எல்லா வேலைக்கும் வந்து விழுந்து போட்டியும், பொறாமையும் வேலையில்லாத் திண்டாட்டமுமாக ஆகியிருப்பதற்கு இது தான் காரணம்.

ஆதியில் பிறப்பினால் தொழிலை நிர்மித்துக் கொடுத்தபோது, அதிலேயே தன்னால் ஒவ்வொருவனுக்கும் ஒரு aptitude, அதை சுலபத்தில் கற்றுக் கொண்டு செய்கிற  திறமை எல்லாம் ஏற்பட்ட மாதிரி இப்போது இல்லை. பிதுரார்ஜிதச் சொத்துபோல அப்போது பெருமிதத்தோடு, பிடிமானத்தோடு ஒவ்வொருவனும் தன் தொழிலை எடுத்துக் கொண்டதனால் அதில் நல்ல செய்நேர்த்தி இருந்தது. இப்போது inefficiency (திறமையின்மை) யைத் தான் எல்லாத் துறைகளிலும் பார்க்கிறோம்.

Leave a comment