தேசத்தின் பண்பு

இளைஞர் கடமை

பிறருக்கு உபகாரம் செய்வதற்கே நமது சரீரம் ஏற்பட்டிருக்கிறது என்பது ஆன்றோர் மொழி. பரோபகாரார்த்த இதம் சாரீரம் என்பார்கள். தேகத்தில் நல்ல தெம்பு இருக்கிறபோதே, யுவர்கள் சேவை நெறியில் ஈடுபட வேண்டும். பிறருக்கு சேவை செய்வதற்காகவே தேக பலத்தைவிட ஒழுக்க பலம் முக்கியம். நமது மதம் கூறுகிற சாஸ்திர தர்ம நெறியின்படி சுத்தமான வாழ்வு வாழ வேண்டும். இப்படி நாம் தூய்மையாக இருந்தால் தான் பிறருக்கு நல்ல முறையில் சேவை செய்ய முடியும். காமக் குரோதத்தில் இருந்தால் எப்படி நல்ல முறையில் சேவை செய்வது? சமூக சேவை உண்மையாக இருக்க வேண்டுமாகில் சேவை செய்கிறவர்களுக்கு தர்மத்திலும், சத்தியத்திலும் தளராத பிடிப்பு இருக்க வேண்டும். அவர்களுக்கு பயம் என்பதே கிடையாது. பயமற்ற நிலை வேறு. ஹிம்ஸை வழியில் நடப்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது.

யுவர்களுக்கெல்லாம் உதாரணமாக இருப்பவர் ஆஞ்சநேய ஸ்வாமி. அவருக்கு இந்த பலம் மிகப் பெரியது. சுபாவத்திலோ சாந்தராக இருந்தார். கோபித்து எழ வேண்டிய சமயத்தில் மஹாவீரராக எழும்பி ஹதாஹதம் செள்தார். அவருடைய புத்தி பலம் பெரிது. ஆயினும் பக்தியில் தோய்ந்து அடக்கத்துடன், விநயமே ஸ்வரூபமாகச் சேவை செய்து கொண்டிருந்தார். பயமென்பதே அவருக்கு இல்லை. ஆனாலும், தாமாக ஹிம்ஸை வழியில் அவர் சென்றதில்லை. பிறருடைய ஹிம்ஸைக்கு எதிர் மருந்தாகவே தாமும் எதிர்த்தார். அவர் சொந்த நலனுக்காக பலத்தைப் பிரயோஜனப் படுத்தவில்லை. துர்பலருக்குக் கொடியவரால் கஷ்டம் ஏற்பட்டால், தம் நலனையும் பொருட்படுத்தாமல் பலவீனரை ரட்சிப்பதில் அஞ்சா நெஞ்சராகச் சேவை செய்தார். சிவாஜியும் இப்படிப்பட்ட குணசம்பத்து இருந்தது.

தேக பலம், அஹிம்ஸை, பயமற்ற நிலை இவற்றோடு சொந்தக் கஷ்டங்களை பாராட்டாமல் பிறரைக் காக்கும் பான்மையும் சேர்ந்தால் அது மிகப் பெரிய சீலமாகும். இதற்கே க்ஷத்ர தர்மம் என்று முன்னாளில் பெயர் சொல்லப்பட்டது.
க்ஷதாத் கில த்ராயதே. இதி க்ஷத்ரம் –
பிறரைத் தீமையிலிருந்து காப்பதே க்ஷத்ரம் என்பது இதன் பொருள். இப்போது நம் நாட்டு யுவர்கள் இந்த க்ஷத்ர தர்மத்தை மேற்கொள்ள நிரம்ப அவசியமாயிருக்கிறது. பலிஷ்டர்களைக் கண்டு பயப்படக்கூடாது. பலவீனர்களை வெறும் மிருக பலம் படைத்தவர்கள் கொடுமைப் படுத்தாதபடி சர்வத் தியாகம் செள்து காப்பாற்ற வேண்டும். மெஜாரிடி, மைனாரிடி என்ற பயம் இல்லாமல், தர்மத்துக்கு ஆபத்து வந்தால் உயிரைத் திருணமாக மதித்துப் போராடுகிற நெறி இளைஞர்களுக்கு இருக்க வேண்டும். இதுவே சேவையில் ஈடுபட்ட யுவர்களின் தர்மம். துரதிஷ்டவசமாக இதற்கு நேர்மாறான போக்கைக் காணும்போது வருத்தமாக இருக்கிறது. பலவீனர்களைப் பயமுருத்தி ஹிம்ஸை முறையால் பணிய வைக்கிற போக்கு நல்லதல்ல. இந்த மாதிரி செய்கிற ஸ்டிரைக், உண்ணாவிரதம், கொடும்பாவி கொளுத்தல், கிளர்ச்சி இவையெல்லாம் உண்மையில் இவற்றைச் செய்கிறவர்களின் பலவீனத்தைத் தான் காட்டுகிறது. தங்களுடைய லட்சியத்திலுள்ள சத்தியத்தின் சக்தியில் நம்பிக்கை இல்லாததால் தான் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். பெரும்பான்மை (மெஜாரிட்டி) பலம் படைத்தவர்கள் பலத்தை துஷ்பிரயோகம் செய்யும்போது அதைக் கண்டு பயப்படுவதும், அதேப்போல் தங்கள் பலத்தை துஷ்பிரயோகம் செய்து பலவீனர்களைப் பயமுருத்துவதும் தேசத்துக்கு நல்ல தல்ல. மக்களின் இந்தப் பலவீனம் சர்க்காரிலும் தானே பிரதிபலிக்கிறது. மறுபடி நாம் இந்த தேசத்தில் பயமில்லாத பிரஜைகளைகத் தலையை நிர்மித்தி நடக்க வேண்டுமானால் க்ஷத்ர தர்மத்தை விருத்தி செய்ய வேண்டும். தனி மனிதர்களின் உறுதியும் ஆத்ம பலமும் கொண்டிருப்பது, அவர்கள் கட்டுப்பாட்டுடன் ஒன்றுகூடி ஐக்கியமாக உழைப்பது, தீமையையும் அடக்கு முறையையும் கண்டு அஞ்சாத நெஞ்சுருதியுடன் போராடுவது – இவையெல்லாம் இந்த தர்மத்தில் அடக்கம். லோக க்ஷேமம் ஒன்றே லக்ஷியமாகக் கொண்டு இந்த தர்மத்தை நடத்திக் காட்டினால் நாட்டின் ஒழுக்கம் மிக உயர்ந்த நிலை அடையும். அரசாங்கத்தின் தரமும் தானாகவே உயரும்.

பாரத தேசத்தின் ஸ்திரீ தர்மத்துக்கே விரோதமான போக்குகள் உண்டாகின்றன. கல்யாணமாகாத பெண்களைப் படிக்க வைத்து, வேலைக்கு விட்டு, அவளே சம்பாதிக்கும் படியாகப் பெற்றோர்கள் விடுகிறார்கள். முதலில் அது அவமானமாக இருந்தது. ஆனால் முதலில் தயக்கத்தோடு ஆரம்பிக்கிற ஒர் ஏற்பாடு வழக்கத்தில் வந்துவிட்டால் பிறகு அதில் கூச்சம் போய்விடுகிறது. முதலில் அவமானமாக நினைத்த விஷயமே பிறகு பழகிப் போய் விடுகிறது. அதுவே நாகரீகத்தின் அடையாளம் என்ற அளவிற்கு மாறி வந்துவிடுகிறது. பெண்கள் உத்தியோகம் பார்ப்பது இப்படித்தான்.

ஒரு தேசத்தின் பண்புக்கு அளவுகோல் எது? ஒரு நாடு என்று இருந்தால், அதில் எல்லோரும் பண்பாளர்களாக (culture) இருக்க முடியாது. திருடன், பொய்யன், மோசக்காரன் எல்லோரும் இருக்கத்தான் செய்வார்கள். இப்படிப் பட்டவர்கள் இருந்தாலும், இந்தத் தேசத்தில் பண்பு இருக்கிறது. கெடுதலானவர்கள் இருந்தாலும் கூட இந் நாடு பிழைத்துப் போகும் என்று தெரிந்து கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஒரு நோயாளிக்குப் பல கோளாறுகள் இருந்தாலும் டாக்டர் இருதயத்தை சேதனை செய்து பார்த்துவிட்டு, இருதயம் நன்றாக இருக்கிறது. ஆகவே பயமில்லை என்கிறார் அல்லவா? அதுபோல் ஒரு தேசத்தில் கோளாறுகள் இருந்தாலும், அதன் பண்பாட்டை உரைத்துப் பார்க்க ஒரு இருதய ஸ்தானம் இருக்கிறதா? இருக்கிறது. ஒரு தேசத்தின் பண்பு உயர்ந்திருக்கிறது. மனோபாவங்கள் உயர்ந்திருக்கின்றன. அங்கங்கே அழுக்குகள் இருந்தாலும் மொத்தத்தில் அது சுத்தமாக இருக்கிறது என்பதை உரைத்துப் பார்ப்பதற்கு அதைத் தேசத்து மஹா கவிகளின் (இலக்கிய கர்த்தர்களின்) வாக்கே ஆதாரமாகும். ஒரு தேசத்தின் பண்புக்கு இதயமாக அல்லது உரைகல்லாக இருப்பது, அந்த நாட்டு மகாகவியின் வாக்கு தான்.

மனிதப் பிரபஞ்சத்துக்கே வந்தாலும் கூட காலேஜும் லைப்ரரியும், பிரிண்டிங் பிரஸும் இல்லாத ஆதிவாசிகளைப் பார்த்தால் அவர்கள் நம்மை விட நிம்மதியாகவும் நல்லவர்களாகவும் இருப்பதாகவே தெரிகிறது. ஆப்பிரிக்கக் காடுகளிலும், அமெரிக்காவில் செவ்விந்தியக் காடுகளிலும் காலேஜும், லைப்ரரியும் இல்லாதது போலவே கோர்ட்டுகளையும் காணோம். அதாவது எழுத்தறிவற்ற காட்டுக்குடிகள், நாகரீகமடைந்த நம் போல் இவ்வளவு குற்றம் செய்வதில்லை.

நாகரீகமும், அதிக புத்தியும் படைத்த நாம் செய்யத் தகாத செயல்களில் அகாரியங்களில் நூதன கற்பனையுடன் விருத்தியடைந்து கொண்டேயிருக்கிறோம். படிப்பு எத்தனைக்கெத்தனை அவசியமோ அத்தனைக் கத்தனை பாபமும் அதிகமாகயிருக்கிறது. நாகரீகத்தால் எத்தனக் கெத்தனை செல்வத்தைப் பெருக்கிக் கொண்டோமோ, அத்தனைக் கத்தனை அநவரதமும் அதிருப்திப்படும் மனோபாவமும் பெருகியிருக்கிறது. எத்தனை வந்தும் போதவில்லை. தேவை அதிகமாகவே இருக்கிறது. வாக்கும் எழுத்தும் எல்லாவித அகாரியங்களையும் பரப்புவதிலேயே தடபுடலாகப் பிரயோஜனமாகி வருகின்றன. படிப்பு முறை, பத்திரிக்கைகள், புஸ்தகங்கள் எல்லாம் மனிதனுக்கு நிம்மதியும், நிறைவும் தருவதற்குப் பதில் அவனை அதிருப்தியிலும் அகாரியத்திலும் கொண்டு விடுவதாகவே உள்ளன.

மனிதனுகக்கு மட்டும் ஸ்பெஷலாக ஸ்வாமி தந்திருக்கும் வாக்குச் சக்தி அநுக்கிரகமா, சாபமா என்றே புரியவில்லை. பகவான் தந்திருக்கும் புத்தியால், வாக்கால், பிறருக்கோ தனக்கோ கெடுதல் உண்டாகாமல் எவ்வளவோ நல்லது செய்யலாம். பாபமும், துக்கமும், பயமும் நீங்க வாக்ககைப் பயன்படுத்தலாம். நாம் அப்படியே செய்யவேண்டும்.

பகவான் தான்கொடுத்திருக்கும் வாக்கை இவன் எப்படிப் பிரயோஜனம் செய்கிறான் என்று பார்த்துக் கொண்டே இருக்கிறான். லோகக்ஷேமத்துக்கும் ஆத்ம க்ஷேமத்துக்கும் அதைப் பயன் செய்யாவிட்டால், அடுத்த ஜன்மாவில் வாக்கைப் பிடுங்கிக் கொண்டு விடுவார். அதாவது மிருகமாய்ப் படைப்பார்.

Leave a comment