கனகன்

மஹாபாரதத்தில் கனகன்

துரியோதனன் பாண்டவர்களை வேருடன் களைய திட்டம் தீட்டினான். வாரணாவதம் எனும் இடத்தில் அரசு மாளிகையில் தங்கிக் கொள்ள பாண்டவர்களை அனுப்பினான். கூடவே குந்தியும் சென்றாள். திருதராஷ்டிரனே உத்தரவு போட்டதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

துரியோதனனின் நம்பிக்கைக்கு உகந்த புரோசனன் எனும் கட்டிடக் கலை நிபுணன் உதவியால் அரசு மாளிகை, அரக்கு மாளிகையாகக் கட்டப்பட்டது. மரத்தால் கட்டப்பட்ட மாளிகை அரக்கினால் பூசப்பட்டது. இன்னும் சில இடங்களில் வெறும் நெய், கொழுப்பு என்று சீக்கிரம் எரியும் பொருட்களால் நிரப்பப்பட்டது. ஒரே வாசல் வழியே தான் உள்ளேயும் வெளியேயும் போகமுடியும். அந்தப் பெரிய மாளிகையை யொட்டி உயர்ந்த மதில்கள் எழுப்பி, தப்பிக்க எந்த வழியும் இல்லாமல் கட்டப்பட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்தை விதுரர் ஆரம்பத்திலிருந்தே அறிந்திருக்கிறார். பாண்டவர்கள் மாளிகைக்குக் கிளம்பும் போது மிக மிக கவனமாக இருக்கும்படி தருமரிடம் ரகசிய சங்கேத மொழியில், முன்கூட்டியே எச்சரித்தார். அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்கள் தப்ப, சுரங்கம் தோண்டுவதில் நிபுணரான கனகன் என்பவரை அனுப்பி வைத்தார்.

 கனகன் பாண்டவர்களை ரகசியமாகச் சந்தித்து “நான் விதுரரால் அனுப்பப்பட்டவன். நான் சுரங்கம் தோண்டுவதில் நிபுணன். நான் தங்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்” என்றார்.

அதற்க்கு தருமன், “எரியத்தக்க இந்த வீடடை, துரியோதனன் உத்தரவாலேயே புரோசனன் கட்டியுள்ளான். எங்களை எங்களது தாயுடன் எரித்துக் கொல்லும் வகையில் மாளிகையின் அமைப்பு உள்ளது. புரோசனன் அறியா வண்ணம் நீங்கள் எங்களை காப்பாற்றும்” என்றான்.

இவ்வார்த்தைகளைக் கேட்ட கனகன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி சுரங்கம் தோண்டும் பணியை கவனத்துடன் தொடங்கி, பெரிய சுரங்க வழியை உண்டாக்கினார். பகலில் புரோசனனை அழைத்துக்கொண்டு பாண்டவர்கள் சென்ற சமயத்தில், அவன் சுரங்கப் பணியில் ஈடுபட்டான். இத்திட்டத்தைப் பற்றி வேறு எவரும் அறியவில்லை. சில நாட்களுக்குப் பின்னர், திட்டமிட்டபடி, மாளிகையில் இருந்து அவர்கள் தங்கள் தாயாருடன் தப்பித்தனர். பல வருடங்களுக்கு பிறகு, பாண்டவர்கள், துரியோதனன் முதலான கவுரவர்களைப் போரில் வென்று தர்மத்தை நிலைநாட்டினர்.

 மேற்க்கூறிய கதையில் புதைந்துள்ள தத்துவங்களைப் புரிந்துக்கொள்ள ஏதுவாக, சிறு சிறு கூறுகளாக பிரித்துக் கொள்வோம். அவற்றுடன், நம் அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்த்து, அவற்றிலிருந்து சில படிப்பினைகளை தேடி, நம்மை செம்மைப் படுத்திக் கொள்வோம்.

  • பாண்டவர்கள் அறியாமலேயே அவர்களை வீழ்ந்த பல முயற்சிகளில்,  இந்த அரக்கு மாளிகை,ஒரு முயற்சி
  • அவர்களை அதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று விரும்பிய விதுரர்.
  • தங்களுக்கு நேர உள்ள ஆபத்தான நிலையிலிருந்து தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள இயலாத நிலையில், மற்றவர்களுடைய உதவியை எதிர்பார்க்கும் பாண்டவர்கள்.
  • விதுரர் மற்றும் பாண்டவர்களின் எதிர்பார்ப்பை, தன்னுடைய உழைப்பின் மூலம் சாத்தியப்பட வைத்த, கனகன்.
  • விதுரர் மற்றும் கனகன் அவர்களின் கூட்டு முயற்சியால் உயிர் பிழைத்து பலனை அடைந்த பாண்டவர்கள்.
  • அந்தப்       பலனிற்கு அருகதை உடையவர்கள் என்று தெரிவிக்கும் விதமாய், போரில் வென்று தர்மத்தை நிலைநாட்டி, தங்கள் கடமையைச் செய்து முடித்த பாண்டவர்கள்.

மேற்க்கூறிய கதையில் பாண்டவர்கள் இடத்தில் நம்மை உருவகப்படுத்திக்கொண்டால், நம் பெற்றோர்கள், விதுரரைப் போல், நம் வாழ்வில் எதிர் கொள்ள உள்ள பல சவால்களுக்கு நம்மை தயார்ப் படுத்த, பல துறை வல்லுனர்கள் (கனகன்) உதவி கொண்டு, தங்களின் வாழ்கையை முழுவதுமாக அர்ப்பணித்து நம்மை காப்பாற்றுகிறார்கள். அத்தகைய வல்லுனர்களின், உழைப்பின் பலனை அடைந்த நாம், அவர்களுக்கும், நாம் சார்ந்துள்ள சமுதாயம் மற்றும் நாட்டிற்க்கும், நமது கடமைகளை செய்து வருகிறோமா என்று நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

நம் முன்னோர்கள், ஒரு தனி மனிதனின் கடமைகள் என்று சிலவற்றைக் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

 தாய்க்கு செய்யும் கடமை

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்..

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

தந்தைக்கு செய்யும் கடமை

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்

மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

 தன் மகனுக்கு செய்யும் கடமை

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

தந்தை தன் மகனுக்குச் செய்யக்கூடிய பெரிய உதவி எதுவென்றால், கற்றவர் நிறைந்த அவையில் சிறந்த புகழுடன் விளங்கும்படி தம் மகனுக்குக் கல்வியறிவு வழங்குவதேயாகும்.

 அறிவையும் அனுபவத்தையும் கொண்டு சமுதாயத்திற்கு செய்யும் கடமை

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.

முதலில் சமமாகயிருந்து பின்பு தன்பால் வைத்த பாரத்தைச் சரியாகக் காட்டும் தராசு முனைபோல, ஒரு பக்கமும் சாயாமல் நடுவு நிலையோடு நீதி வழங்குவதே சான்றோர்க்கு அழகாகும்.

காஞ்சி முனிவர்

தர்மம் என்பது, நாம் எடுத்துக்கொண்டுள்ள லட்சியத்தின் சத்தியத்தின் சக்தியில் நம்பிக்கை, மன உறுதி, சார்ந்துள்ள சமூகத்தின் பிற மக்களுடன் ஒன்றுபட்ட உழைப்பு, தீமைக்கு எதிராக நெஞ்சுறுதியுடன் போராட்டம் போன்ற பல அம்சங்களை உடையது என்று கூறியுள்ளார்.

மேற்கூறிய வழிகாட்டுதல்களை நாம் ஆராய்ந்து, நடைமுறைப்படுத்த முடிந்தவற்றைப் செயல்படுத்தி, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவோம்.

Leave a comment