சாஸ்திரமா? மனசாட்சியா?

தர்மம் என்பது உலக க்ஷேமத்துக்காகச் செய்யப்பட வேண்டியது. துளிகூட சொந்த விருப்பு வெறுப்பு இல்லாமல், சமஸ்த பிராணிகளும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு மகான்கள் தர்ம நூல்களைத் தந்திருக்கிறார்கள். தர்ம சாஸ்திரங்கள், இன்னது தர்மம் என்று தீர்மானம் பண்μபவை. ரூபத்தை அறிவதற்குப் பிரமாணம் கண். சப்தத்தை அறிவதற்குப் பிரமாணம்  காது,  தர்மப்  பிரமாணம் என்ன எனில் தர்ம சாஸ்திரப் பிரகாரம் செய்வதேயாகும்.

சகல தர்மத்துக்கும் மூலம் வேதம். அதை ச்ருதி என்பார்கள். (எழுதிப் படிக்காமல் காதால் கேட்டுப் பாடம் பண்μவதால் இப்படிப் பேர்). ச்ருதிக்கு அப்புறம் ஸ்மிருதி. ஸ்மிருதி என்பது வேதத்தின் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு விரிவாகக் குறித்த குறிப்பு (Notes) தர்ம சாஸ்திரம் என்பது இதுவே.

அந்த ஸ்மிருத்திக்கு அப்புறம் பிரமாணமாக இருப்பது பெரியவர்களுடைய நடத்தை. பெரியவர்கள் எப்படி நடந்தார்க ள் என்பது புராணங்களால் நமக்குத் தெரிய வருகிறது. அதற்கப்புறம் நமக்குத் தெரிந்து சிஷ்டராக இருப்பவர்களின் நடத்தை. சிஷ்டாசாரம் என்று அதைச் சொல்லுவார்கள். எல்லோருடைய நடத்தையும் பிராமணமாகாது. நம்மிடையே வாழ்பவரில் எவரது நடத்தை தார்மிக விஷயங்களில் பிரமாணமெனில், அவருக்கு சாஸ்திர நம்பிக்கை இருக்க வேண்டும். சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட ஆசாரங்களை அவரே வாழ்வில் அநுசரிக்க வேண்டும். காமக் குரோதம் இல்லாதவராக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சிஷ்டர்களுடைய ஆசாரம் ஒரு பிரமாணம்.

அதற்கப்புறம் நம்முடைய மனசாட்சி (conscience). நம்முடைய மனசு நிஷ்கல்கமாக எப்படி ஆலோசிக்கிறதோ அது ஒரு பிராம்மணம்.  ஆகவே, ஆத்மிக, தார்மிக மத விஷயங்களில் பிராம்மணங்களைக் கொள்ளும் முறையில் முதலில் வேதம் இடம்பெற வேண்டும். அப்புறம் தர்ம சாஸ்திரங்களைக் கொள்ள வேண்டும். அப்புறம் பூர்வகால ரிஷிகள் முதலியவர்களின் நடத்தை. பின்பு இப்போதுள்ள சிஷ்டர்களில் ஆசாரத்தைப் பிரமாணமாகக் கொள்ள வேண்டும். இவைகளுக்கெல்லாம் அப்புறம் கடைசிப் பக்ஷமாகத்தான் சாஸ்திர விஷயங்களில் மனசாட்சியைப் பிரமாணமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. முதலில் மனசாட்சியைத்தான் பார்க்கிறார்கள். கடைசியில்தான் வேதத்தைக் கவனிக்கிறார்கள். நியாயப்படி வேறு ஒரு மார்கமும் இல்லாதபோது தான் மனசாட்சியை அநுசரிக்க வேண்டும். மனசாட்சி என்று ஏன் அதற்குப் பெயர் வந்தது. சாட்சி சொல்லத் தான் யோகிதை உடையது. நியாயாதிபதியாக (Judge) இருக்க அதற்கு யோக்கியதை இல்லை. சாட்சியாக வந்தவன் வாயால் பொய்யைச் சொல்வான். அதனால் வாய் சாட்சியை நம்புவதற்கில்லை. ஆனால், மனம் பொய் சொல்லாது. மனசுக்கு எல்லாம் நிஜமாகத் தெரியும். நெஞ்சை யொளித்தொரு வஞ்சகமில்லை என்று அவ்வைப் பாட்டி சொன்னாள். ஆகவே அதைச் சாட்சியாக மட்டும் வைக்கலாம். இப்பொழுது மனசாட்சியை ஜட்ஜாகவே வைத்து விடுகிறார்கள். இன்னது நடந்தது என்பதை அது நிஜமாகவே சொல்லும். இதுதான் நியாயம் என்று அதனால் தீர்த்துச் சொல்ல முடியாது. தான் நினைப்பதை சரி என்று எப்ப்டியாவது சமாதானம் சொல்லி நிலைநாட்டிக் கொள்வதே அவரவர் மனசும் செய்கிறபடியாக இருக்கும். இது எப்படி தர்ம நியாயமாகும்.

எனவே மனசாட்சிக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படிச் செய்கிறேன் என்று சொல்வது தப்பு. எடுத்தவுடன் அதற்கு ஜட்ஜ் ஸ்தானம் கொடுத்து விடக்கூடாது. ஒருவித வழியும் இல்லாமல் போனால், நீ தான் சாட்சியாக இருந்து எல்லாவற்றையும் பார்த்திருக்கிறாயே, இப்போது உன் அபிப்பிராயத்தைச் சொல் என்று மனசிடம் கோட்கலாம். மனசு ஒரு தனி மனிதனைச் சேர்ந்தது. எனவே அது எவ்வளவு தூரம் தன் சுயநலத்தை விட்டு விலகிப் பேசும் என்று சொல்ல முடியாது. சொந்த விஷயங்களில் அதற்குத் தருகிற இடத்தைக் கூட சமய விஷயங்களில் தருவதற்கில்லை. தனி மனசு என்கிற நிலைக்கு மேலே போய் முழுக்க முழுக்க லோக க்ஷேமத்தையே சொன்ன ரிஷிகளின் அபிப்ராயம் தான் தர்ம விஷயங்களில் பிரமாணமாகும்.

Leave a comment