வேதங்களும் தமிழும்

கரிகால சோழனின் சாஸனம் ஒன்று இருக்கிறது. அது நல்ல சமஸ்கிருத பாஷையில் அமைந்திருக்கிறது.
பாத்ராகலித வேதானாம் சாஸ்த்ர மார்க்கா நுஸாரிணாம்
ததேது அரிகாலஸ்ய கரிகாலஸ்ய சாஸனம்.
கரிகாலன் இதில் தன்னை ‘அரிகாலனாகிய கரிகாலன்’ என்கிறான். ‘அரி’ என்றால் விரோதி என்று அர்த்தம். விரோதிகளுக்கு யமனாக இருக்கிற வீராதி வீரன் தான் என்று அரிகாலன் சரி, கரிகாலனுடைய அந்த விரோதிகள் யார்?. வேத சாஸ்திர மார்கத்தை அநுசரிக்காதவர்கள் அனைவரும் தான் அவனுடைய விரோதிகள். வேத சாஸ்திர வழியில் செல்கிறவர்களை ரக்ஷிக்க வேண்டும் என்பதே கரிகாலனின் சாஸனம். பிரசித்தி பெற்ற நம்முடைய தமிழ் மன்னர்கள் வைதிக மதத்தை மனமார வளர்த்தவர்கள் என்பதற்கு இது ஒர் எடுத்துக்காட்டு.

 “பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி” என்றே ஒரு சங்க கால அரசனுக்குப் பெயர் இருக்கிறது. வழுதி என்றால் பாண்டியராஜா. பிற்காலத்திலும் கல்வெட்டுகளில் எங்கு பார்த்தாலும் தமிழரசர்கள் வேத வித்துக்களுக்கு வரியில்லாத இறையிலி’ யாக நிலத்தை  சாஸனம் செய்தது தெரிகிறது. நான்மறைகளின் வளர்ச்சிக்காகவே தானமாக வழங்கப்பட்ட பல கிராமங்கள் சதுர் வேதி மங்கலம் என்ற பெயரில் உள்ளன.

வெளிதேசத்து விஷயம் ஒன்று புதிதாக நம் ஊருக்கு வந்தால், அதற்கு உள்ளூர் பாஷையில் வார்த்தையிருப்பதில்லை. நம் தேசத்துக்கு வந்த ரேடியோ, டெலிபோன், பஸ் முதலியவற்றுக்கெல்லாம் நம் பாஷையில் வார்த்தையில்லை. பிற்பாடு இப்போது இவற்றுக்கும் ஏதேதோ புரியாத தமிழில் வார்த்தைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் அது பழக்கத்தில் சரளமாக வரமாட்டேன் என்கிறது.

வேதம், யாகம் முதலியன சிலர் சொல்கிற மாதிரி தமிழ் நாட்டின் ஆதி நாகரீகத்துக்குப் புறம்பாகப் பிற்பாடு வந்தவை என்றால், யாகம், வேதம் முதலிய பதங்களுக்குப் சரியான தமிழ் வார்த்தை இருக்க முடியாது. ஆனால், மிக மிகப் பழைய தமிழ் இலக்கியங்களிலேயே வேதம் என்பது மறை என்றும், யாகம் என்பது வேள்வி என்றும் புகழ்ந்து பேசப்படுகின்றன. இவை மிகவும் அர்த்தபுஷ்டி நிறைந்த பதங்கள் என்பதை சமஸ்கிருத பண்டிதர்கள் – தமிழ் புலவர்கள் இருவருமே ஒப்புக் கொள்வார்கள்.

வேட்டலிலிருந்து வேள்வி வந்திருக்கிறது. எல்லா தர்மத்துக்கும் வேரான வேதம், வேரைப் போலவே வெளியில் தெரியாமல், அதாவது எல்லாரிடமும், புழக்கத்துக்கு வராமல், அதை ரக்ஷிப்பதற்கான கடும் நியதிகளைப் பின்பற்றும் சிலரிடமே மறைந்து இருக்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்தைச் சொல்லும் வார்த்தைகள் தான் மறை. வைதிகப் பண்பாடும், யக்ஞ அநுஷ்டானமும் தமிழ்நாட்டில் ஊறிப் போயிருந்தாலொழிய, அந்த நாகரீகத்தைக் காட்ட இத்தனை அழகான சொந்த மொழி வார்த்தைகள் உண்டாக்கியிருக்க முடியாது. வேதத்தை எழுதி வைத்துப் படிக்காமல், தலைமுறைத் தத்துவமாக வாயால் சொல்லிக் காதால் கேட்டே கற்க வேண்டும் என்பதால் தமிழில் எழுதாக் கிழவி என்ற பெயரும் வேதத்துக்கு உள்ளது. கேள்வியிலேயே பாடம் பண்μவதால்தான், வேதத்துக்கு சமஸ்கிருதத்திலும் “ச்ருதி” என்று பேர். மறை என்பதைப் போல் வேத ரக்ஷணத்தைப் பளிச்சென்று சொல்கிற நேர் வார்த்தை ஸமஸ்கிருதத்திலேயே இல்லை.

வேதத்தின் ஆறு அங்கங்களுக்கு ஷடங்கங்கள் என்று பெயர். அதிலிருந்துதான் மத சம்மந்தமான எந்தக் காரியத்தையும் சடங்கு என்று சொல்கிற வழக்கம் இருந்து வந்திருக்கிறது. வைதிக அநுசரணையை தமிழ்நாட்டின் தொன்று தொட்ட பழக்கம் என்பதற்கு இதெல்லாம் உதாரணங்கள்.

தமிழ் மறை என்று சொல்கிற குறள் முழுக்க முழுக்க வைதிகமானதே என்பது என் அபிப்ராயம். வைதிக சமயத்தில் பித்ருக்களுக்குத்தான் முதலிடம். அப்புறம்தான் வேத யக்ஞம். பித்ருக்களைக் குறித்த தர்ப்பணமும் திவஸமும் செய்தபின் தான் வேத பூஜை செய்ய வேண்டும். இதே வரிசையில் திருவள்ளுவரும் சொல்கிறார்.
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல்தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஒம்பல் தலை.

பித்ருக்கள், தெய்வம், அதிதி, சுற்றத்தார்கள், தான் என்று ஐந்து பேரையும் போஷிக்க வேண்டும் என்கிறார். முதலில் பித்ருக்களான தென்புலத்தாரைச் சொல்லி, அப்புறம் தெய்வத்தைச் சொல்கிறார். யமனுடைய திக்கான தெற்கில் பித்ருக்கள் இருப்பதாக வைதிக நம்பிக்கையைலேயே, மூதாதைகளைத் தென்புலத்தார் என்கிறார். இந்த ஐந்து பேருக்கும் பாகம் பிரித்துத் தருவது நாமாகச் செய்வது. இது தவிர ராஜ ஆக்ஞைக்காக விளைச்சளில் ஆறில் ஒரு பங்கு வரியாக எடுத்துக் கொள்ளப்பட்டது. வரி போக மீதமுள்ளதை மேலே சொன்னபடி ஐந்தாகப் பிரிக்க வேண்டும். தனக்கு என்று அதில் ஒரு பங்கு தான் வைத்துக் கொள்ளப்படுகிறது. பித்ருக்களை உத்தேசித்துக் சிலருக்கு அன்னமாக ஒரு பங்கு போகும். கோயில்களுக்கு ஒரு பங்கு போதும். விருந்தாளிகளுக்கு ஒரு பங்கு போகும். வசதியற்ற விருந்தாளிகளுக்கு ஒரு பங்கு போதும். வசதியற்ற உறவுக்காரர்களுக்கு ஒரு பங்கு போகும். பாக்கி ஒரு பங்கு தான் ஒருத்தனின் சொந்தக் குடும்பத்துக்கு. வைதிகமும், வள்ளுவரும் விதிக்கிற இந்தத் தர்மத்தை விடப் பெரிய சோசலிஸம் எதுவும் இல்லை.

தனக்கென்று மட்டும் வாழாமல் லோகோ பகாரமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்கிற தியாகம் தான் வைதிக மதத்தின் அஸ்திவாரம். திருவள்ளுவரும் அதைத் தான் சொல்கிறார். தமிழ் மறையான குறளும் சரி, மற்ற தமிழ் நீதி நூல்களும் சரி, மறையின் மரபில் வந்தவை தான். திருவள்ளுவர் வைதிகத்தைத் தான் சொன்னார். ஒ£வையார் ஒதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்பதாக உபதேசத்தை ஆரம்பிக்கும்போதே, வேதாத்யயனம் ஒரு நாள் கூட நடைபெறாமல் இருக்கக்கூடாது என்கிறாள்.
ஆழ்வாராதிகளும் சைவத் திருமுறைக்காரர்களும் எங்கே பார்த்தாலும், வேதியா! வேதகீதா! சந்தோகன் காண், பெனழியன் காண் என்றெல்லாம் வேதங்களையும் அவற்றின் சாகைகளையும் சொல்லியே பகவானைத் துதிக்கிறார்கள். க்ஷேத்திர வர்ணனைகளிலெல்லாம், ஊர் முழுக்க ஹோமப் புகை சூழ்ந்திருக்கிறது. வேத சப்தம் ஒரே கோஷமாகப் பரவியிருந்தது என்று அவர்கள் சொல்லாமலிருப்பதில்லை. இந்தத் தமிழ் நாட்டில் வேத பாடசாலைகளை வைத்து நடத்துவதில் பிராம்மணரல்லாதார் செய்திருக்கிற கைங்கரியம் கொஞ்ச நஞ்சமில்லை. நிலமாகவும் பணமாகவும் வாரிக்கொடுத்து இந்தப் பெரிய தர்மத்துக்குப் பரமோபகாரம் செய்திருக்கிறார்கள். இப்போதும் கூட ஏதோ அரசியல் காரணங்களுக்காக அவைதிகமான, நாஸ்திகமான அபிப்ராயங்கள் கொஞ்சம் தலை தூக்கியிருந்தாலும், மொத்தத்தில் தமிழ் ஜனங்களுக்கு உள்ளூர வைதிக சிரத்தையும், பழைய சாஸ்திர ஏற்பாடுகளில் பக்தி விசுவாசமும் போகவில்லை என்பது தான் என் அபிப்பிராயம். அவர்களுடைய அன்புக்குப் பாத்திரராகிற மாதிரி பிராம்மணர்கள் மட்டும் இன்னும் கொஞ்சம் ஆசார அநுஷ்டான சீலர்களாக ஆகிவிட்டால், இங்கே வேத ரக்ஷணம் நிரம்பவும் நன்றாக நடந்திவிடும் என்பதே என் நம்பிக்கை.

பாஷை என்று ஒரு   காரணத்துக்காக மட்டும் ஸமஸ்கிருதம் வேண்டுமா என்றால்  நான் கூட வேண்டாம் என்றே சொல்வேன். ஆனால்  நம்முடைய மதத்துக்கு மூலமான வேதம், சாஸ்திரம் எல்லாம்  அந்தப் பாஷையில் இருப்பதினால் வேதத்தையும்  சாஸ்திரங்களையும் ரக்ஷிப்பதற்காக சமஸ்கிருத  பாஷையையும் ரக்ஷிக்கத்தான் வேண்டும் என்கிறேன்.

திருவள்ளுவர் குறளை எழுதி அதை அரங்கேற்ற மதுரைக்கு  வந்தார். பொற்றாமரைக் குலத்தில் சங்கப்பலகை இருந்தது.  திருவள்ளுவர் தம் புத்தகத்தைக்  கொண்டுபோய் சங்கப் பலகையில் வைத்தாராம். குட்டைப்  புத்தகம் அது. அது மாத்திரம் பலகையில் இருக்கப் புலவர்கள்  எல்லோரும் குளத்தில் விழுந்து விட்டார்களாம். குரள்  அங்கே அரங்கேற்றப்பட்டது.

இந்தப் புத்தகத்தைப் இன்னார் பண்ணினார், இதில் என்ன உயர்ந்த விஷயங்க ள்  இருக்கின்றன என்று அதைப் பற்றிப் பல புலவர்கள்  பாடியிருக்கிறார்கள். திருவள்ளுவ மாலை என்று அதற்குப்  பெயர். அதில் ஒருவர் பாடுகிறார்.
ஆரியமும் செந்தமிழும் ஆராயத் திதனினிது
சீரிய தென்றொன்றைச் செப்பரிதாம்-ஆரியம்  வேதம் உடைத்து தமிழ் திருவள்ளுவனார் ஒது குறட்பா உடைத்து

ஸம்ஸ்கிருதம் உயர்வா. தமிழ் உயர்வா என்று யோசனைப்  பண்ணிப் பார்த்தேன். ஸம்ஸ்கிருதமும் தமிழும் சமம் தான்.  ஒன்று உயர்வு, ஒன்று மட்டம் என்று சொல்ல முடியாது. எதனாலே என்றால், ஸமஸ்கிருதத்தில் வேதம் இருக்கிறது.  தமிழில் இப்போது திருக்குறள் வந்துவிட்டது. இது தமிழ்  மறை. வேதத்துக்குச் சமமான ஒன்று தமிழில் இல்லை  என்றால் ஸமஸ்கிருதம் உயர்வாக இருக்கலாம் திருக்குறள்  வேதத்துக்குச் சமானமாக வந்திருக்கிறது. அதனாலே  இப்போது இரு பாஷைகளும் சமமாயின என்று  இச் செய்யுளில் கவி சொல்லியிருக்கிறார்.

ஸமஸ்கிருதத்துக்கு எதனால் கௌரவம். வேதம் அதில்  இருபதனால் தான் என்பதை அந்தப் புலவர்  சொல்லியிருக்கிறார்.  வேதம் ஸமஸ்கிருதத்தில் இருந்தால் என்ன மொழி  பெயர்த்துவிடலாமே என்று நினைக்கலாம். பல நூல்க ள்  அப்படி இந்தக் காலத்தில் மூல பாஷையிலிருந்து மொழி  பெயர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மூலமே உருமாறிப்  போவதுமுன்டு. ஒரு விஷயத்தை ஒரு மனிதன் சொன்னால்,  அது அவனிடமிருந்து எந்த வாக்கில் வருகிறதோ அதே  வாக்கில் வருகிறதா, அதே வாக்கில் இருந்தால், ஒரு  காலத்தில் இல்லாவிட்டாலும் மற்றொரு காலத்தில் அதன்  உண்மைப் பொருளை முழுவதும் தெரிந்து கொள்ள முடியும்.

ஒரு பொருளைச் சொல்வதற்கு ஒரு பாஷையில் அழகா சொல் ஒன்று இருக்கும்.. அதை மொழி பெயர்க்கும்போது,  அதற்கு ஏற்ற சொல் இதர பாஷையில் இருக்காது. சில  சமயங்களில் நான்கைந்து வார்த்தைகளைப் போட்டுச்  சுற்றி வளைத்துச் சொல்ல வேண்டியிருக்கும். அந்த வார்த்தை  அந்த இடத்தில் எந்த அபிப்பிராயத்தை  வெளிப்படுத்துகிறதோ, அதே அபிப்பிராயத்தை மொழி  பெயர்ப்பில்  காணமுடியாமல் போகலாம்.

இரண்டாவது, மொழிபெயர்க்கிறவன் தன்னுடைய  ஞானத்துக்கு ஏற்றார் போலத்தான் பொருள் பண்ணிக்கொண்டு சொல்ல முடியும். ஒருவன் பண்ணிய மொழி பெயர்ப்புச் சரிஅல்ல என்று இன்னொருவன் எண்μவான்.  பண்μகிறவனுடைய அபிப்ராயத்துக்கும் பாஷை  ஞானத்துக்கும் ஏற்றபடி அந்த மொழி பெயர்ப்பு இருக்கும்.  இப்படியாக பல மொழி பெயர்புகள் ஏற்பட்டு, அவற்றில்  எதை எடுத்துக் கொள்வது என்ற சந்தேகம் வரும்போது,  மூலம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டிவரும்.

ஆகவே தான் மூலமாகிய வேதத்தை அப்படியே வைத்துக்கொள்ள வேண்டும். மூலமாக இருக்கும் ஒரே வேதத்தைத்  தங்கள் கருத்தின் படி பொருள் கொண்டு ஒவ்வோர்  ஆசாரியரும் ஒவ்வொரு சித்தாந்தத்தை வெளியிட்டுள்ளனர்.  அந்த ஆசாரியார்கள் தத்தம் சித்தாந்தங்களையே  ஆதாரமாகக் கொண்டு மூலவேதத்தை மாற்றி வெவ்வேறு  மதங்களைச் செய்துவிடவில்லை. மூலம் ஒன்றாக இருக்கிறது.  மூலம் மொழிபெயர்க்கப் படாமல் அப்படியே இருந்து  கொண்டிருப்பதால் தான், அந்த அந்த ஆசாரிய புருஷருக்கு  ஏற்றபடி காலத்துக் காலம் புது அபிப்பிராயம் சேர்த்து  வந்திருக்கிறது. ஆதாரமான வேதத்தை மாற்றாமல்  அப்படியே வைத்துக் கொண்டு, அதை ரக்ஷித்து வந்தால் தான்  அந்தந்த ஆச்சாரியாளின் புது அபிப்பிராயமானது  இன்னொரு தனி மதமாகப் போக வேண்டிய அவசியம்  ஏற்படாமல் இருந்து வந்திருக்கிறது. வைதிக மதம் என்ற  பொதுப் பெயர் இருந்து கொண்டிருக்கிறது.

Leave a comment