ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர்கள் எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்று சொல்லி விட்டார். ஆனால் உலகத்தில் வேறு வேறாகத் தெரிகிற எல்லாப் பிராணிகளையும் ‘நாமாக’ எப்படிப் பார்ப்பது என்று குழப்பமாக இருக்கிறது.
ஜாக்ரத், ஸ்வப்னம், ஸுஷுப்தி என்று மூன்று அவஸ்தை நிலைகள் உண்டு.
சாதாரணமாக விழித்துக் கொண்டிருப்பது ஜாக்ரம்:
கணாக் காண்பது ஸ்வப்னம்
ஒன்றும் தெரியாமல் தூங்குவது ஸுஷுப்தி.
இந்த மூன்று அவஸ்தைகளிலும், ஒருவனே தான் இருக்கிறான். கனாக் கண்டவனும் விழித்துக் கொண்டவனும் ஒருவனே. ஆனால், கனாக் கண்ட பொழுது நடக்கிற வைகளுக்கும், விழித்துக் கொண்டபின் நடக்கிற வைகளுக்கும் முன்னுக்குப் பின் சம்பந்தமே இல்லை. கனவில் வேற விதமான நடவடிக்கைகள் இருக்கின்றன. விழித்துக் கொண்டபோது வேறே விதமான நடவடிக்கைகள் இருக்கின்றன. அவஸ்தை வேறுபட்ட போதிலும், மனோபாவம் வேறுபட்ட போதிலும் இரண்டிலும் ஒருவனே இருப்பது போல, வேற வேற மனோபாவம் கொண்ட பல பிராணிகளிடத்திலும் இருப்பவன் ஒருவனே: அவனே நாம் என்று தெளிய வேண்டும்.
ஒரு காலத்தில் நமக்குச் சாந்த குணம் இருக்கிறது. மற்றொரு சமயத்தில் கோபம் இருக்கிறது. ஆனாலும் இரண்டு அவஸ்தையிலும் இருப்பவன் ஒருவனே என்பது அநுபவத்தில் தெரிகிறது. அவஸ்தா பேதங்களில் நம் முகம், கைகால் எல்லாவற்றின் போக்கும் மாறுகின்றன. காலபோதத்தால் குழந்தை கிழமாகிறபோது தேகங்கூட வேறாக மாறுகிறது. இது விவகார உலகத்தில், ஸ்வப்பன உலகத்திலே கேட்கவே வேண்டாம். நம் ஒருவருடைய மனஸிலிருந்தே பல பேருடைய ரூபங்கள், பல வேறு இடங்கள் பல வேறு காலங்கள் எல்லாம் கனவில் உண்டாகின்றன. நாம் செய்யக் கூடாதென்று நினைக்கிற காரியங்களை யெல்லாம் கனவில் செய்வதாகக் காண்கிறோம். இம்மாதிரி அவஸ்தா பேதங்களில் ஒன்றுக் கொன்று விரோதமான காரியங்களைச் செய்தாலும் வேறு வேறு விதமான தேகமும் மனஸும் இருந்தாலும், எல்லா அவஸ்தைகளிலும் இருப்பவன் ஒருவனே என்பது தெரிகிறது. நமக்கு ஜன்னி பிறந்தால் அதற்கு முன் நாம் செய்த காரியங்களுக்கு விரோதமாகச் செய்கிறோம். நாம் முன்ப ஒரு புஸ்தகம் எழுதியிருந்தால் இப்போது அதை நாமே கிழித்து விடுகிறோம். எழுதியவனும் கிழித்தவனும் ஒரே போர்வழி.
இந்த உலகமும் ஒரு கனவு தான். உலக வாழ்வும் மாயாஜுரத்தில் வந்த ஜன்னி என்று தெரிந்து கொண்டால், உண்மையில் எல்லாம் ஒன்று என்று உணர்வோம். நம் கனவில், நம் ஒருத்தரின் மனமே இத்தனை பேரை சிருஷ்டித்த மாதிரி, மகா பெரிய மனசு ஒன்றின் எண்ணங்கள் தான் இத்தனை ஜீவராசிகளும் என்று தெரியும். மற்றொருவன் நாம் எழுதிய புஸ்தகத்தைக் கிழித்தால் அவனும் நாம் தான் என்று உணர்வோம். விவகார உலகத்தில் எழுதியவனும் கிழிப்பவனும் வெவ்வெறு தேகத்தில் இருப்பதனால் வாஸ்தவத்தில் உள்ளேயிருப்பவன் வேறாகி விடமாட்டான். எல்லாவற்றுக் குள்ளேயும் இருப்பது ஒன்று தான். ஒருவன் நம்மை அடித்தால் வேறொருவன் நம்மை அடிப்பதாக நினைப்பது தப்பு. நாமே நம்மை அடித்துக் கொள்கிறோம் என்பது தான் சத்தியம்.