வேதாத்யயனம் ஒரு மந்திர யோகம். ஒவ்வொரு நாடி அசைவதினால் சித்தத்திற்கு ஒவ்வொரு விதமான விகாரங்கள் ஏற்படுகிறது. சில நாடி அசைவுகளால் காம விகாரங்களும், சில நாடிகளால் சோம்பல் விகாரங்களும், சில நாடிகளால் கோப விகாரங்களும் உண்டாகின்றன. இதை மாற்றிச் சொன்னால், காம விகாரம் ஏற்படும்போது சில நாடிகளில் அசைவும் உண்டாகின்றன. இவை பிரத்யக்ஷமாகவே அநுபவத்தில் காணப்படுகின்றன. சாந்தம் ஏற்படும் போது முகத்தில் ஒரு களை உண்டாகிறது. அந்தக் களை சில நாடிகள் குளிர்ந்ததன் பலனேயாம். இப்படியே காமம், குரோதம் ஒவ்வொன்றும், ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்றபடி முகத்திலேயே பிரதிபலிக்கின்றன. நாடி சலனம் தான் இந்த அடையாளங்களை உண்டாக்குவது. இவ்விதம் மனோவிகாரங்களால் நாடிகளில் சில விகாரங்கள் ஏற்படுவதால், அந்த நாடிகளை வசப்படுத்திவிட்டால், காமக் குரோதங்களையோ, சாரத்தையோ நமது இஷ்டப்படி வரவழைத்துக் கொள்ளலாம். அதற்கு வெளிப் பொருள்கள் தேவையில்லை.
இப்படி நாடிகளை ஸ்வாதீனப்படுத்த ப்ராணாயாமத்தை முக்கியமாகக் கொண்ட ராஜயோகம் ஒரு மார்க்கம். அதே விதமாய் மந்திரயோகம் ஒரு மார்க்கம். ஒரு எழுத்தை நாம் உச்சரிக்கும் போது நமது நாக்கு, உதடு,மேல்வாய் ,கீழ்வாய், கண்டம் முதலியவைகளின் இடைவெளி வழியாக ப்ராணவாயு வெளிப்படுகிறது. அப்பொழுது தான் அக்ஷர த்வனி உண்டாகிறது. அந்த அக்ஷரத்வனிக்கு காரணமாக எந்தெந்த உறுப்புகளில் ப்ராணவாயு ஸஞ்சரிக்கிறதோ அந்தந்த இடம் ஸம்பந்தப்படும் நாடிகளில் ஸலனம் ஏற்படுகிது. நாடிகளில் சலனத்தினால் மனஸில் எந்த விதமான விருத்திகள் ஏற்பட்டு இகலோக க்ஷேமமும் பர லோக க்ஷேமமாகிய மோக்ஷம் முதலிய புண்யமும் ஏற்படவேண்டுமோ, அதற்கு அநுகுணமாக உள்ள உச்சாரணங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு, வேறு விதமான உச்சாரணங்களை விலக்கி அமைந்தனவே வேத மந்திரங்கள். மந்திரத்துக்கு Definition (லக்ஷணம்) “மனனாத் த்ராயதே” என்று சொல்லியிருக்கிறது. அதாவது திரும்பத் திரும்ப மனனம் செய்து உருப்போடுவதால் காப்பாற்றுவதே மந்திரம். அவைகளின் ஆவ்ருத்தியால் எந்தெந்த நாடிகளில் திருப்பித் திருப்பி சலனம் ஏற்பட்டு ஆத்மக்ஷேமம் கிட்டுமோ, அந்த க்ஷேமத்தைத் தானும் அடைந்து, தன் மந்திர சக்தியால் உலகத் தோரும் க்ஷேமம் அடையச் செய்வதே வேதியரின் பிறவிக் கடமை.
மந்திரங்களில் ஸித்தி பெற்றுப் பூரண பலனைப் பெற வேண்டுமானால் அவற்றை எப்படி ஒத வேண்டும் என்று (‘சிக்ஷா’ சாஸ்திரத்தில்) சொல்லியிருக்கிறது:
கீதி சீக்ரி சிர : கம்பீ ததா லிகித பாடக :|அனர்த்தக்ஞ : (ஹி) அல்பகண்டச்ச ஷடைதே பாடகாதமா :|”
இப்படி யெல்லாம் வேதத்தைத் தப்பாகப் பயிலபவர்கள் அதமர்கள்” என்று சொல்லி, இந்த ச்லோகத்தில் ஆறு தினுசான தப்புகளைச் சொல்லியிருக்கிறது.
“கீதி” என்றால் வேதத்தை பாட்டு (கீதம்) மாதிரி இஷ்டப்படி ராகம் போட்டுப் பாடுகிறவன். இப்படிப் பண்ணக்கூடாது. வேதத்துக்கே உரிய ஸ்வரத்தில் தான் அதைச் சொல்லவேண்டும்.
“சீக்ரி” என்றால் வேகமாகச் சொல்லிச் சீக்கிரத்தில் முடிப்பவன். இதுவும் பிசகு. வேத அக்ஷரங்களை அவற்றின் காலப் பிரமாணப்படி சொன்னால் தான் பூர்ண பலன் உண்டாகும்.
“சிர:கம்பீ” என்றால் தலையை ஆட்டிக்கொண்டு சொல்கிறவன். ஆடாமல் ஸமநிலையில் உட்கார்ந்து கொண்டு, மந்திரங்களால் தானாக ஏற்படும் நாடி சலனங்களைத் தான் உண்டாக்கிக் கொள்ளவேண்டும். பாட்டுப் பாடுகிறவர் மாதிரி சிரஃகம்பம் பண்ணினால் நாடி சலனம் வித்யாஸப்படும்.
‘லிகித பாடகன்’ என்றால் எழுதி வைத்துக் கொண்டு படிப்பவன். இது தப்பு. வாயால் சொல்லிக் காதால் கேட்டே பாடம் பண்ண வேண்டும் என்று முன்பே சொன்னேன்.
‘அனர்த்தக்ஞ:’ என்றால் அர்த்தம் தெரியாதவன். அர்த்தம் தெரிந்து கொண்டு தான் மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.
‘அல்பகண்டன்’ என்றால், ‘மெல்லிய குரலில் வேதம் சொல்லுகிறவன்’ என்று அர்த்தம். இவனும் அதமன்தான். Full-throated என்று சொல்லுகிற மாதிரி நன்றாக கம்பீரமாக, உரக்க, வாய்விட்டு வேத சப்தம் எவ்வளவு தூரம் வியாபிக்கும் படியாகச் சொல்ல முடியுமோ அப்படிச் சொல்ல வேண்டும்.
வேத மந்திர சப்தம் அதைச் சொல்கிறவனுக்குள்ளே நல்ல நாடி சலனங்களை உண்டு பண்ணுவதோடு, கேட்கிறவர்களுக்கும் அப்படிப்பட்ட சலனத்தை உண்டுபண்ணுவது. அட்மாஸ்ஃபியரில் அது எவ்வளவு தூரம் வியாபிக்கும்படி பண்ணமுடியுமோ அவ்வளவுக்கு பலமாக கோஷிக்க வேண்டும். மந்திரத்திலிருந்து முழுப் பிரயோஜனத்தை அடைய வேணடுமானால், இந்த ஆறு விதிகளைப் பின்பற்றினால் தான் முடியும்.
அதன் சப்தம் நம்முடைய நாடிகளிலும், வெளி லோகத்திலும் (atmosphere) ஏற்படுத்தும் சலனங்களால் ஆத்ம க்ஷேமமும் லோக க்ஷேமமும் உண்டாகிறது. லோக க்ஷேமம் என்றால் மநுஷ்யர்களின் க்ஷேமம் மட்டுமில்லை. ஸகல பிராணிவர்க்கங்களும் நன்றாக இருக்கவேண்டும் என்று வேதம் சொல்கிற மாதிரி வேறெந்த மதத்திலும் சொல்லியிருக்கவில்லை.
“தே த்விபாத் சதுஷ்பாத்” – இருகால் பிராணி, நாலுகால் பிராணி எல்லாம் க்ஷேமமாக இருக்க வேதம் பிரார்த்திருக்கிறது. புல், புண்டு, விருக்ஷம், மலை, நதி ஆகிய எல்லாவற்றின் நன்மையையும் கோருகிறது. இந்த ஸமஸ்தப் பிராணிகளின் க்ஷேமம் வேதத்தின் சப்த விசேஷத்தாலேயே நடந்து விடுகிறது. சப்த விசேஷத்தோடு அர்த்த வேதத்துக்கு அளவிட முடியாததாக இருக்கிறது. வேதக் கருத்துக்களைப் பார்த்து இதர மதஸ்தர்களும், வெளி நாட்டு அறிவாளிகளும் கூட ஆச்சர்யப் படுகிறார்கள். காவிய ரீதியில் இருக்கிற அழகு, சமூக வாழ்வு முறைகளை நுட்பமாகச் சொல்லியருக்கிற அழகு, அத்யாத்ம தத்வங்கள், நன்னெறி உபதேசங்கள் (Moral Instructions), ஸயன்ஸ் கருத்துக்களுங் கூட வேதங்களில் கொட்டிக் கிடக்கிறது என்று ஆச்சர்யப்படுகிறார்கள். சப்த சலனமான மந்திரங்களுக்கெல்லாம் அர்த்தம் இருக்க வேண்டும் என்பதே இல்லை.
பிரகிருதத்தில் (நடைமுறை வாழ்க்கையில்) பார்த்தாலும், வார்த்தையோ அர்த்தமோ இல்லாமலே ஒரு ராகத்தை ஆலாபனம் பண்ணிக் கேட்கிறபோது, அதன் வெறும் சப்தம் மட்டுமே நமக்கு ஆனந்தம், துக்கம் முதலான உணர்ச்சிகளைத் தருகிறது. வாத்திய ஸங்கீதத்தினால் ஏற்பட்ட Vibration களினாலேயே கறிகாய்ச் செடிகளைத் தூண்டி யதேஷ்டமாக காய்க்க வைத்திருக்கிறோம் என்று ஸமீபத்தில் கூட ஒரு யூனிவர்ஸிடியில் பரிசோதனை பண்ணித் தெரிவித்திருக்கிறார்கள். சப்தத்துக்கு சிருஷ்டி சக்தி உண்டு என்பதற்கு இது ஒரு proof. அது ஒரு பக்கம் இருக்கட்டும். இங்கேயும் வாத்ய ஸங்கீதம் என்பதாலேயே வார்த்தையோ அர்த்தமோ முக்கியமில்லை என்று தெரிகிறது. வேதத்தில் என்ன விசேஷம் என்றால் அதன் சப்தத்துக்கே தனியாக சக்தி இருப்பது மட்டுமின்றி, வார்த்தைகளாகவும் அதற்கு மிக உயர்ந்த அர்த்தம் இருக்கிறது.
தமிழில் அநேக உத்தமமான ஸ்தோத்திரங்கள் இருக்கின்றன. அவற்றைப் படித்தால் மனஸ் உருகுகிறது. ஆனாலும் குறிப்பிட்ட பிரயோஜனம் வேண்டுமென்றால், அதில் சிலதை மட்டும் தான் உருவேற்றுவது என்று வைத்துக்கொண்டிருக்கிறோம். “திருமுருகாற்றுப்படை”, வியாதி தீருவதெற்கென்று ஒரு திருப்புகழ் (“இருமலுரோக”), தேவாரத்தில் மழை வேட்டல் பதிகம் என்றிப்படி சிலதை மட்டும் விசேஷமாகப் பல ஆவிருத்தி ஜபிக்கிறோம். இதே நக்கீரரும், அருணகிரிநாதரும், ஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகளும் இவற்றை விட நெஞ்சை உருக்கும்படியான வேறு ஸ்தோத்திரங்கள் பண்ணியிருக்கக்கூடும். ஆனால் அவற்றை விட்டு இவற்றை மட்டும் ஏன் எடுத்துக் கொள்கிறோம் என்றால் சப்த விசேஷந்தான். இந்தப் பாடல்களில் உள்ள சப்தங்களுக்கு மந்திர சக்தி இருக்கிறது. ஆசார்யாளே தான் “ஸௌந்தர்ய லஹரி”, “சிவானந்த லஹரி” இரண்டும் செய்திருக்கிறார். ஆனால் “ஸௌந்தர்ய லஹரி” யில் ஒவ்வொருச் லோகத்தை ஜபிப்பதற்கும் ஒவ்வொரு விதமான பலன் சொல்லியிருக்கிற மாதிரி, “சிவானந்த லஹரி” க்குச் சொல்லவில்லை. காரணம் என்னவென்றால் சப்தங்களுக்கே உள்ள மந்திர சக்திதான்.
அர்த்தமே இல்லாத வெறும் சப்தமான மந்திரங்களும் உண்டு. அர்த்தத்தில் ரொம்ப உயர்வாக இருந்தாலும், விசேஷமாக மந்திர சக்தி இல்லாத மந்திரங்களும் உண்டு. வேதத்தின் மஹிமை என்ன என்றால் சப்தத்தின் மந்திர சக்தி, அர்த்தத்தின் கௌரவம் என்ற இரண்டும் கொண்ட மந்திர சமூகமாக அது இருப்பதுதான். ஒரு மருந்து கசப்பாக இருந்து கொண்டு தேகத்துக்கு நல்லது பண்ணுகிறது. ஒரு பக்ஷணம் வாய்க்கு ருசியாக இருந்தாலும் தேகத்துக்குக் கெடுதலை உண்டாக்குகிறது. மதுரமான ருசி, தேக புஷ்டி இரண்டையும் தரக்கூடிய கூச்மாண்ட லேஹ்யம் மாதிரி ஒன்று கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது?
வேதத்தில் இப்படி இரட்டைப் பலன்: மந்திர சக்தி, தத்வ உபதேசம் என்று இரண்டும் இருக்கின்றன. தத்வம் என்று எடுத்துக் கொள்கிறபோதும், லோக வாழ்க்கை, அத்யாத்ம வாழ்க்கை இரண்டுக்குமான உபதேசங்கள் அதில் இருக்கின்றன. ஒவ்வொரு ஜீவனும் ஒரு ஜன்மாவில் உண்டாகிறதிலிருந்து சாகிற வரையில் எப்படிச் செய்தால் அவனுடைய ஆத்மா க்ஷேமம் அடையும் என்பதற்கு அதில் உபதேசம் இருக்கிறது. இப்படி Individual Salvation (தனிமனிதனின் உய்வு)- ஐச் சொல்வதோடு மட்டுமில்லாமல், சமூக வாழ்க்கை எப்படி நடக்க வேண்டும், பொது ஜனங்களின் கடமைகள் என்ன, பிராம்மணன் எப்படி இருக்க வேண்டும், ராஜா எப்படி ராஜாங்கம் நடத்த வேண்டும், ஸ்திரீகள் எப்படியிருக்க வேண்டும், பொது ஜனங்கள் எப்படி செய்ய வேண்டும் என்பதையெல்லாம் அது சட்டம் மாதிரி நமக்குப் போட்டுக் கொடுத்திருக்கிறது. சட்ட புஸ்தகங்களுக்கெல்லாம் உச்சாணி வேதந்தான் என்பது அதன் விசேஷங்களில் ஒன்று.
“வேதோ நித்யம் அதீயதாம் : தத் உதிதம் கர்மஸுஅநுஷ்டீயதாம்” – தினமும் வேதம் ஒதுங்கள் ; அதில் சொல்லியிருக்கிற யக்ஞாதி அநுஷ்டானங்களை நன்றாகப் பண்ணுங்கள் ” என்று சொன்னது. இந்த பிரயோஜனத்தை உத்தேசித்துத் தான் . இந்த லோக வாழ்க்கை நன்றாக இருப்பற்காகவோ, பிறகு தேவலோகம் என்றும் ஸ்வர்க்க லோகம் என்றும் சொல்லப்படும் கேளிக்கை உலகத்தில் நாம் போய் இருப்பதற்காகவோ அவர் இப்படிச் சொல்லவில்லை. இப்படிப்பட்ட அல்ப பலன்களை நினைக்காமல், ஆத்மாவைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே வேத கர்மாக்களை நிஷ்காம்யமாகப் பண்ணினால், அது சித்த சுத்தி தரும் என்பதால் தான் ஆசார்யாளும் யக்ஞாநுஷ்டானம் பண்ண வேண்டும் என்று ஆக்ஞை போட்டிருக்கிறார்.
மந்திர மகிமையில் பட்ட மரம் கூடத் துளிர்க்கும் என்பதைத் திருவானைக்காவில் பிரத்தியட்சமாகப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். ஜம்பு என்கிற வெண் நாவல் மரம் தான் அங்கே ஸ்தல விருட்சம். அதனாலேயே அந்த ஊருக்கு ஜம்புகேஸ்வரம் என்று பெயர் இருக்கிறது. அங்கிருந்தே ஸ்தல விருட்சம் பட்டுப்போய் ஒரே ஒரு பட்டையாகத் தான் ஏதோ கொஞ்சம் உயிரை வைத்துக்கொண்டிருந்த சமயத்தில், கானாடுகாத்தான் செட்டியார்கள் திருப்பணி செய்தார்கள். அப்போது இந்தபபட்ட மரத்துக்கு ஏகாதச ருத்ராபிஷேகம் பண்ணினார்கள். மந்திர சக்தியால் அப்போழுதே அது தளிர்த்தது.
வருண ஜபம் செய்தார்கள். மழை பெய்தது என்று படிக்கிறோம். நம் ஊரிலேயே எப்போதாவது இந்த மாதிரி நேரில் பார்க்கிறோம். இன்னோரிடத்தில் வருண ஜபம் பண்ணியும் மழை பெய்யாமலிருக்கலாம். அதனால், மந்திரத்தையே சக்தியில்லாததென்று தள்ளிவிடக்கூடாது. மருந்துகளைச் சாப்பிட்டு உடம்பு சரியாகிறவர்களும் இருக்கிறார்கள். குணமாகாமல் சாகிறவர்களும் இருக்கிறார்கள். அதனால் மருந்தே தப்பு என்போமா. மருந்து பலிக்காவிட்டால் வியாதி முற்றியிருக்க வேண்டும் என்கிறோம். அதுபோல் கர்மா ரொம்பப் பலமாக இருந்தால், எந்த மந்திரமும் பலன் தராமல் போகலாம். இன்னொரு காரணமும் உண்டு. பத்தியம் தப்பினால் மருந்து பலிக்காது. அந்த மாதிரி மந்திர சக்தி ஸித்திப்பதற்குச் சில நியமங்களைப் பத்தியம் போல் வைத்திருக்கிறது. இந்த நியமங்களில் தப்பு வந்தால் மந்திரங்களிலிருந்து உத்தேச பலன் கிடைக்காது. வருண ஜபம் பலிக்காத பல இடங்களில் நான் விசாரித்ததில் அலவண நியமம் அதாவது ஜபம் செய்கிறவர்கள் உப்பே சேர்த்துக் கொள்ளக்கூடாது என்கிற விதி – சரியாக அநுஷ்டிக்கப் படவில்லை என்று தெரிந்து கொண்டிருக்கிறேன்.
we are learning veda and it is beautiful to make one to understand the importance of sandhai, practice, swara and speed in chanting veda which our gurus used to quiet often tell us in the class. Please let me know whether it can be shared using my blog.
You are free to share the site’s contents.