அஹிம்ஸை – சத்தியம்

அஹிம்ஸை

அஹிம்ஸையைப் பூரணமாக அநுஷ்டித்தவன் இருக்குமிடத்தில் குரூரமானவர் மனத்திலும் சாந்தம் உண்டாகும். எனவே, தான் அன்போடு இருப்பதே இவனது சங்கற்பமானாலும், மற்றவர்களையும் அன்பாக ஆக்கும் அவாந்தரப் பிரயோஜனமும் கிடைக்கிறது. சந்நியாசி பூரண அஹிம்சையை அநுஷ்டிக்க வேண்டும். அவன் இலையைக் கிள்ளக்கூடாது. தாவரங்களைச் சமைத்து ஹிம்சிக்கக் கூடாது. அஹிம்ஸை காரணமாகத் தான் அவனுக்கு அக்னி காரியமே விதிக்கப்படவில்லை. அக்னி என்று இருந்துவிட்டால், அதில் ஏதாவது தவறிப்போய் பூச்சிபொட்டு விழுந்து சாகக்கூடும். நெருப்பிலே விழுந்ததை எடுத்துக் காப்பாற்றுவது கஷ்டமல்லவா. இதனால் தான் துறவிக்கு ஹோமம், யாகம் எதுவும் இல்லை. அவன் அக்னி காரியமே செய்யாததால் அவனுக்கும் கடைசீயில் தகனம் என்ற அக்னி காரியம் இல்லை.

அவனுடைய சரீரத்தை பூமியில் அடக்கம் செய்கிறார்கள். சகல பிராணிகளுக்கும் என்னால் பயம் இல்லாமல் போகட்டும் என்று சந்நியாஸம் வாங்கிக் கொள்ளும்போது அவன் பிரதிக்ஞை செய்கிறான். அதன்படி, எந்தப் பிராணிகளுக்கும் என்னால் பயம் இல்லாமல் போகட்டும் என்று சந்நியாஸம் வாங்கிக் கொள்ளும் போது அவன் பிரதிக்ஞை செய்கிறான். அதன்படி, எந்தப் பிராணிக்கும் தாவரத்துக்கும் ஹிம்ஸை இல்லாமல் வாழவேண்டியது அவனுக்கே பூரணமாக விதிக்கப்பட்ட தர்மம்.

பெரிய தர்மம் ஒன்றை அத்தனை பேருக்கும் பொதுவாக வைத்தால், முடிவில் எவருமே அதை அநுஷ்டிக்காத நிலைமையைத் தான் பார்க்கிறோம். நம் தேசத்தில் இப்படிச் செய்யாமல் சன்னியாசிகளுக்கு மட்டும் பூரண அஹிம்ஸையை விதித்தார்கள். அதைப் பார்த்து பிராம்மணர்கள், வட தேசத்தில் குஜராத் முதலான பகுதிகளில் உள்ள வைஷ்ணவர்கள், தென்னாட்டில் சைவவேளார்கள், கோமுட்டிச் செட்டிமார்கள் போன்றவர்களும் இதைப் பின்பற்றி வந்திருக்கிறார்கள். எனவே விதி என்று போட்டுக் கட்டுப்படுத்தாததாலேயே தாங்களாகப் பிரியப்பட்டு, அதிலே நிஜமான ஈடுபாட்டோடு தலைமுறை தத்வமாக இப்படிச் செய்து வந்திருக்கிறார்கள். சந்நியாஸிகளின் ஸத்வ குணத்தைப் பார்த்து, அதன் பொருட்டுத் தாங்களும் இந்த சாகபட்சணத்தையே (Vegetarianism) விரும்பி ஏற்று அநுஷ்டித்து வந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து, வெளியிலிருந்து யாறும் கட்டுப்படுத்தாமலே மற்ற வருப்பாறும், ஒரு அம்மாவாஸை. ஒரு திதி, திவஸம், ஷஷ்டி இம்மாதிரி தினங்களில் மாமிஸ போஜனத்தை விலக்கி விடுகிறார்கள். நடைமுறையில் (Practical) எல்லோருக்கும் இயலாத ஒன்றை சகலர் மீது கட்டாயமாக திணிக்காமல், பக்குவிகளான சிலருக்கு மட்டுமே விதிப்பதால், அதுவே மற்றவர்களுக்கும் ஒரு உத்தம லட்சியமாகி (Ideal) அதை ஒரளவுக்காவது அவர்களும் பின்பற்றுகிறார்கள். மாறாக எல்லோருக்கும் இதை விதியாக்கிய இடங்களிலோ, எவருமே அதை அநுசரிக்காமல் ஹிம்ஸை அதிகரிப்பதோடு, அவர்கள் விதியை மீறிய தோஷத்துக்கு ஆளாகும்படி வேறு நேர்ந்திருக்கிறது. அஹிம்ஸை என்கிற தத்வம் ஒரு லட்சியமாகமாவாவது எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பதால் அது சாமானிய தர்மங்களில் சேர்க்கப்பட்டிருக்கிறது. காரியம் எப்படி இருந்தாலும் மனசிலே துவேஷம் கூடாது என்பதுதான் நம் வைதிகர்மப் படி அஹிம்ஸையின் லட்சணம் (definition).

சத்தியம்

சகல மக்களுக்கும் அநுசரிக்க வேண்டிய சாமானிய தர்மங்களில் முதலாவது அன்பு (அஹிம்ஸை) அடுத்தது உண்மை (சத்தியம்). சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இருப்பதுதான் .மனசில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே அசத்தியம் என்று பெரியவர்கள் லட்சணம் சொல்லியிருக்கிறார்கள்.

வாங்மனஸயோ. ஐக ரூப்யம் ஸத்யம்
மனத்தில் உள்ளதை வெளியிட்டுச் சொல்வதற்கென்றே பகவான் மனிதனுக்குப் பேசும் சக்தியைத் தந்திருக்கிறார். மனத்தில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக நாம் நடந்து கொண்டோமானால் அடுத்த ஜன்மத்தில் நமக்குக் கொடுத்த பேச்சுத் சக்தியைப் பறித்துக் கொண்டு விடுவார். அதாவது மிருக ஜன்மத்தையே நமக்குத் தருவார்.

பூரண அஹிம்சைக்கு நமது சாஸ்திரத்திலேயே சில விலக்குகள் இருக்கின்றன. தர்மத்துக்காக யுத்தம் செய்யும் போதும், யாக யக்ஞங்களில் பலி தருகிற போதும் அஹிம்ஸைக்கு விலக்குத் தரப்பட்டிருக்கிறது. சத்தியத்துக்கு இவ்விதமாக விலக்கே இருக்க முடியாது என்று நினைப்பீர்கள். ஆனால் சத்தியத்துக்கும் வேறொரு விதத்தில் விலக்கு இருக்கிறது. அதைக் கொஞ்சம் விளக்குகிறேன்.

ஊரிலே பலவிதமான அயோக்கியர்கள் இருக்கிறார்கள். அதைப் பார்த்து வாஸ்தவமாகவே ஒருவருடைய மனது கொதிக்கிறது. அவன் இந்தத் தப்பையெல்லாம் ஒயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறான். அவன் அந்த அயோக்கியத்தைச் செய்தான். இவன் இந்த அயோக்கியத்தனத்தைச் செய்தான் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான். ஆனால் இவன் அப்படிச் செய்வதான் இவனுக்கும் பிரயோஜனமில்லை. ஜனங்களுக்கும் பிரயோஜனமில்லை. இப்படி வியர்த்தமாக வாக்கும் மனசும் ஒன்றுபட்டிருப்பதை சத்தியம் என்று சொல்வதற்கில்லை.

ஒருவன் மனசில் கெட்ட எண்ணங்கள் எழுகின்றன. அதை அவன் அப்படியே வாக்கிலே வெளியிடுகிறான். அது சாத்தியமாகிவிடுமா. ஆகாது. ஆகவே சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றுபடுவது மட்டுமில்ல. நல்ல மனசிலே தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம். மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் பிரியமாகவும் எது இருக்கிறதோ அதுவே சத்தியம் என்பதாக சத்தியத்துக்கு ஒரு லட்சணத்தை வகுத்திருக்கிறார்கள்.

ஸத்யம் பூதஹிதம் ப்ரியம்
பேச்சினாலும் காரியத்தினாலும் எண்ணத்தினாலும் பிராணிகளுக்கு நன்மையை உண்டாக்குவதே சத்தியம். கெடுதல் செய்வதெல்லாம் அசத்தியமே. ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது. அதை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக் கடுமையாகச் சொன்னால் அதை யாறும் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு நிஷ்பலனாகப் போகிற நல்லவாக்கு சத்தியமாகாது. நல்லதாகாவும் இருக்க வேண்டும். அது யாரை உத்தேசித்துச் சொல்லப்படுகிறதோ அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் ஹிதமாகவும் சொல்லப்பட வேண்டும். இதுவே சத்தியம். சத்தியத்தைச் சொல், பிரியமானதைச் சொல். சத்தியத்தைப் பிரியமாக சொல்ல முடியவில்லை என்றால், அப்போது அப்படிப்பட்ட சத்தியத்தையும் சொல்லாதே. கேட்கப்பிரியமானாலும், அசத்தியத்தைச் சொல்லாதே. என்பது பெரியவாளின் வாக்கு.

ஸ்த்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் ஸத்யம் அப்ரியம்
ப்ரியம் ச ந அந்ருதம் ப்ரூயாத்
காமமும் குரோதமும் உள்ள மனசிலிருந்து இப்படிப்பட்ட பிரியமான, நன்மையான வாக்கு வராது. க்ஷேமத்தையே உண்டாக்கும் சத்திய வாக்கு வரவேண்டுமானால், அதற்கு அடிப்படையாக காம, குரோதங்களற்ற நல்ல மனம் வேண்டும். ஆக சத்தியத்தின் லட்சணம், மனமும் வாக்கும் ஒன்று பட்டிருப்பது. மனம் சுத்தமாக இருப்பது. வாக்கு சாந்தமாக, ஹிதமாக இருப்பது. மொத்தத்தில் தனக்குச் சித்த சுத்தியையும் பிறருக்கு க்ஷேமத்தையும் உண்டு பண்ணுவது.

சத்தியத்திலேயே ஒருவன் நிலைத்து நின்று விட்டால் அதற்கு ஒர் அவாந்தரப் பிரயோஜனமும் உண்டு. அதாவது அந்த சத்தியசந்தன் உத்தேசிக்காமலே ஒரு பிரயோசனம் சித்திக்கும். அது என்னவெனில், ஒருவன் சத்தியமே பேசிப்பேசி பழகி விட்டால் கடைசியில் அவன் எது சொன்னாலும் அது சத்தியமாகிவிடும். இப்படிப்பட்டவன் மனமறிந்து பொய் சொல்லவே மாட்டான். ஆனால், அறியாமையினாலோ தவறிப்போயோ அவன் ஒரு விஷடத்தைத் தப்பாகச்சொல்லி விட்டாலும், அந்தத் தப்பே கார்த்தத்தில் சத்தியமாக நடந்துவிடும்.

இதற்குத் திருஷ்டாந்தாரமாக ஒரு கதை சொல்கிறேன். திருக்கடவூரில் அபிராமி பட்டர் என்று அம்பாளின் பரமபக்தர் இருந்தார். அவர் அம்பாளையே நினைத்து பரவசமாகும்போது உன்மத்தரைப் போன்று பிதற்றுவார். இதைப் பற்றி சரபோஜி ராஜாவிடம் யாரோ துஷ்பிரயோகம் செய்தார்கள். அபிராமி பட்டர் ஒரு குடிகாரர், பக்தர் என்று வேஷம் போடுகிறார் என்று ராஜாவிடம் கோள் சொல்லிவிட்டனர். சரபோஜிக்கு இதைப் பரிசோதித்துப் பார்க்கத் தோன்றியது. ஒரு நாள் சரபோஜி திருக்கடவூரில் அம்பாளை தரிசிக்க வரும்போது, அங்கே தன்வசமிழந்திருந்த பட்டரிடம், இன்றைக்கு என்ன திதி, என்று கேட்டான். அன்றைக்கு அம்மாவாஸை. பட்டரோ அம்பாளின் பூரண சந்திர முகத்தையே தியானம் செய்து பரவசமாக இருந்தார். எனவே அரசரிடம் இன்று பெனர்ணமி என்று சொல்லிவிட்டார். அரசன் தன்னிடம் மற்றவர்கள் பட்டரைப் பற்றிச் சொன்னது உண்மை என்றே நினைத்தான். பட்டரிடம் கேலியாக, அப்படியா சந்திரன் உதயமாகிவிட்டானா என்று ஆகாயத்தைப் பார்ப்போம் என்று தலையைத் தூக்கினான். அப்போது வாஸ்தவமாகவே ஆகாயத்தில் பூரண சந்திரன் வந்து நின்றது, அபிராமி பட்டர் சத்தியத்திலேயே ஊறியிருந்ததால், தவறிப் போய் அவர் அசத்தியத்தைச் சொன்னபோது, அம்பாளே தன் தடாங்கத்தைக் கழற்றி ஆகாயத்தில் வீசி, பூரண சந்திரனாக ஜொலிக்கச் செய்தாள். மகான்கள் செய்கிற ஆசீர்வாதம் அவர்கள் கொடுக்கிற சாபம் எல்லாம் அப்படியே பலித்து விடுவதற்குக் காரணம் அவர்களுடைய சத்தியத்தின் சக்தி தான். அவர்கள் எது சொன்னாலும் நடந்துவிடும். இது சத்தியமாக இருப்பதின் அவாந்தரப் பிரயோஜனம். ஆனால், தான் சொல்வதெல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசை கொண்டு அதன் பொருட்டாக ஒருவரும் சத்தியத்தை அநுஷ்டிக்கக்கூடாது.  உத்தேசமில்லாவிட்டால் தான் இந்தச் சக்தி தானாக வருமே ஒழிய உத்தேசித்து விட்டால் அப்புறம் அது அவாந்தரமே இல்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s