மனிதப்பிறவி

மனிதப்பிறவி

உலகில் எத்தனையோ ஜீவராசிகள் பிறந்து வாழ்ந்து மடிந்து மறைந்து மீண்டும் பிறந்து இவ்வாறாக உலகம் சுழல்கின்றது. இவை அனைத்திலும் உயர்ந்தது மானிடப் பிறவி. இத்தகைய கிடைத்தற்கரிய மானிடப் பிறவியை அடைய நாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்று அவ்வையார் பாடியுள்ளார்.

ஆதிசங்கரரும் விவேக சூடாமணியில் 2ஆவது ஸ்லோகத்தில் जन्तूनां नरजन्म दुर्लभम्ஜந்தூனாம் நரஜன்ம துர்லபம் “  என்று மனிதப்பிறவியின் அரிய தன்மை பற்றிக் கூறுகிறார்.

இவ்வுலகில் உயிர்வாழும் உயிரினங்கள்  84 லட்சம் வகைகள் என்று பாகுபாடு செய்துள்ளனர். அவ்வகை உயிரினங்களில், உயர்ந்த மாநுடப் பிறவி கிடைப்பது அபூர்வம். திருஞான சம்பந்தரும் தேவாரத்தில் அவற்றைப் பற்றிப் கீழ்க்கண்ட பதிகத்தில் பாடியுள்ளார்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்ல நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்.

இத்தகையப்  பிறவியை நாம் எப்படி வாழ வேண்டும் என்று, நம் ஆன்றோர்களும் சான்றோர்களும்,  பல விதமான, நெறிமுறைகள், அணுகுமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை நமக்கு அருளியுள்ளார்கள்.  அவைகள் நம்முடைய இதிகாச, புராணங்கள் மற்றும்  பல சமயம் சார்ந்த இலக்கிய படைப்புகளிலும் காணப்படுகின்றன.

இந்தப் பகுதியில் அத்தகைய சில வழிகாட்டுதல்கள் தொகுத்து வழங்கப்படுகின்றது. மேலும், அத்தகைய வழிகாட்டுதல்கள் இன்றைய காலகட்டத்திற்க்கும் எவ்வாறு பொருந்தியுள்ளது (Contemporary relevance) என்பதையும்  நாம் காணலாம்.

நம் அன்றாட வாழ்வில் , நம்மால் இயன்ற அளவு, அவற்றைக் கடைபிடித்து, நம்மையும், நாம் சார்ந்திருக்கும் சமுதாயத்தையும், மேம் படுத்திக்கொள்ள முனைவோம்.

Leave a comment